Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியே வசிக்கும் பெண்களின் தொடர் மரணம் - காரணம் என்ன?

சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர், தன் அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லஷ்மி சுதா (58), என்னும் பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர், கடந்த 5 வருடங்களாக வேலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டார். லஷ்மி தன் கணவரை 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் பெங்களூருவில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

லஷ்மியின் சகோதரி வித்யா அருள்மணி அவரைப் பார்ப்பதற்காக, நவம்பர் 2-ம் தேதியன்று மேற்கு மாம்பலம் வீட்டுக்குச் சென்றுள்ளார்.  லஷ்மியை பலமுறை அழைத்தும் கதவு திறக்காத நிலையில், சந்தேகம் ஏற்பட்டு, கதவை வேகமாக தள்ளி உள்ளே சென்றுள்ளார். லஷ்மியின் உடல் ரத்த வெள்ளத்தில் அழுகிய நிலையில்  பிணமாகக் கிடந்ததைப் பார்த்த வித்யா உடனே அருகில்  உள்ள குமரன் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

எப்போது கொலை நடந்திருக்கலாம்? என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. லஷ்மியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நகை, பணம் போன்றவற்றுக்காக கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது. பல நாட்கள் திட்டமிட்டு இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

இதேபோல், தியாகராய நகரில் சாந்தி (65) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். அவர் அக்போபர் 31-ம் தேதி, தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இன்னும் துப்பு கிடைக்காத நிலையில், மற்றொரு சம்பவமாக லஷ்மி கொலை நடந்திருப்பது தியாகராயநகர் மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் குறிவைத்து, கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது..தியாகராய நகர் போன்ற கூட்டம் அதிகமுள்ள இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதியவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ, பாதுகாப்பு தேவைப்பட்டாலோ 1253 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருப்பது கூட மக்களில் பலருக்கு தெரியவில்லை. இதுபோன்ற வசதிகள் பற்றிய விழிப்பு உணர்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தால் லட்சுமிக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். '

 - நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ