Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு கட்சிக்குள் ஏற்படும் மாற்றங்கள் தனி மனிதரை என்ன செய்யும்...? நீலவேணி பாட்டியிடம் கேளுங்கள்! #HumaninterestStory

ணவரோ இறந்துவிட்டார்.. பிள்ளைகளோ உதறித் தள்ளிவிட்டனர். ஆனாலும், தன் வயிற்றுப் பிழைப்புக்காக வைராக்கியத்தை விடாது புத்தகம் விற்றுப் பிழைத்து வருகிறார் பெரியாரிடம் வேலை பார்த்த இந்த மூதாட்டி.

சென்னையின் கூட்டநெரிசல் மிக்க பகுதியான அண்ணா சாலையைக் கடக்கும் பலர் நீலவேணி பாட்டியை கவனித்திருக்க முடியும். ஒல்லியான தேகம்; குட்டையான உருவம்; உழைப்பின் ரேகைகள் ஆங்காங்கே இழையோடி இருக்கும் உடல், அறுபத்து எட்டு வயதுக்கான நரை,தமிழகத்தின் கருப்பு வெள்ளை வரலாற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறது அவரது தோல் சுருக்கங்கள். பல ஆண்டுகாலமாக ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் அருகே புத்தகங்கள், இதழ்கள் மற்றும் செய்தித்தாள்கள் விற்றுக்கொண்டிருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை நீலவேணி பாட்டிக்கு உழைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. இத்தனைக்கும் ‘விடுதலை’ பத்திரிகையில் பெரியார் இறந்தபின்பும்கூட தன் கணவர் ரங்கநாதனுடன் வேலை பார்த்து வந்திருக்கிறார் நீலவேணி. பெரியாரின் எழுத்துகள், கோர்ப்பாக வருவதற்கு கம்போசிங் வேலை செய்தவர்கள் இருவருமே.

கட்சி, பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முதலியவை காரணமாக இவர்களின் தேவை அங்கே இல்லாமல் போயிருக்கிறது. பிறகு, வாசிப்பின் மீதும் புத்தகங்களின் மீதும் இருந்த ஆர்வம் காரணமாகவும், தனக்குத் தெரிந்த தொழில் அதுமட்டும்தான் என்பதாலும் புத்தகக் கடை வைத்து நடத்தி வந்திருக்கின்றனர் தம்பதிகள் இருவரும்.

நாம் சந்திக்கச் சென்ற நேரம் மழைக்காலம் என்பதால்... புத்தகங்களை மழையில் நனையாமல் ஓரமாக வைத்துவிட்டு, தான் மட்டும் ஈரமான நடைபாதையில் நின்றபடி அன்றைய நாளுக்கான விற்பனைக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.

“முன்னமெல்லாம் புத்தகம் நிறையப் பேர் வாங்குவாங்க... படிப்பாங்க. எங்களுக்கும் புத்தகம் நிறைய விற்கும். ஒரு நாளைக்கு வித்தது செலவுபோக கையில் 50 அல்லது 60 ரூபாய் நிற்கும். ஆனா, முன்னமாதிரி யாரும் இப்போ புத்தகமெல்லாம் வாங்குறது இல்ல. எங்களுக்கு ரெண்டு ஆம்பள பசங்க. அவங்களைப் படிக்கவெச்சு கல்யாணமும் செஞ்சுவெச்சோம். எப்போதும்போல பசங்க நாளடைவில் எங்களை ஒதுக்க ஆரம்பிச்சாங்க. வீட்டுக்காரரு போனதுக்குப் பிறகு அந்த வீட்டுல எனக்கு மதிப்பில்ல. அதனால வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். அவரு தொடங்கின அதே புத்தகக் கடையை இப்போ நடத்திட்டு இருக்கேன்’’ என்று மெல்லியக் குரலில் பேசிய நீலவேணி பாட்டி சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு ஏதோ யோசித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

‘‘பக்கத்துல ஒரு ஹாஸ்டல் இருக்கு. அங்க இலவசமா தங்க இடம் கொடுத்திருக்காங்க. சாப்பாடு மட்டும் வெளிய பாத்துக்கச் சொல்லிட்டாங்க. எப்போதாச்சும் மகன் வந்து பாத்துட்டுப் போவான். ரெண்டுவேளை சாப்பாடு, ஒருவேளை டீ - பிஸ்கெட்டுக்கு மட்டும் புத்தகம் வித்த காசு கிடைக்கும். அதைவெச்சு வயித்த நிரப்பிக்கிறேன்” என்றவரிடம், கட்சிக்காரர்களிடம் உங்களுடைய நிலைமையைத் தெரிவித்தது உண்டா என்று கேட்டோம், இல்லை என்று வேகமாகத் தலையாட்டினார்.

‘‘புத்தகம் படிக்கிற ஆர்வம் உண்டா பாட்டி?’’ என்றதும், அதுவரை சோகமாக இருந்த அவரது முகத்தில் எங்கிருந்தோ வெட்கமும் சிரிப்பும் வந்து ஒட்டிக்கொண்டது.

‘‘நான் அந்தக் காலத்து இ.எஸ்.எல்.சி., படிச்சதாலதான் பெரியாரிடம் வேலைக்குச் சேர முடிஞ்சிச்சு. நானும் எங்க வீட்டுக்காரரும் அப்போதே ரெஜிஸ்தரார் அலுவலகத்துல காதல் கல்யாணம் செய்தவங்க. ஒரு புத்தகக் கடையிலதான் நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம். எங்க வீட்டுக்காரருதான் கல்யாணத்துக்குப் பிறகு என்னோட படிப்பு வீணாப்போகக் கூடாதுன்னு விடுதலை பத்திரிகையில் வேலைக்குக் கூட்டிட்டுப் போனாரு. அவராலதான் ஆர்வமாகப் படிக்க ஆரம்பிச்சேன். தமிழ்ப் புத்தகமெல்லாம் படிப்பேங்க. இந்த இங்கிலீஷுதான் வராது. எழுத்துக்கூட்டிப் படிப்பேன். படம் பார்ப்பேன்” என்று மகிழ்ச்சி பொங்கக்கூறியவரிடம், எங்கிருந்தோ வந்த மகன், “பேசிட்டு இருக்கியே... மாத்திரை சாப்பிட்டியா, இல்லையா” என விசாரிக்க, ‘‘போட்டாச்சு’’ என்ற ஒற்றை வரி பதிலுடன் நியூஸ் பேப்பர் வாங்க வந்த வாடிக்கையாளரிடமிருந்து அன்றைய வியாபாரத்தைத் தொடங்கினார்.

”மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!” என்ற அதே பெரியாரின் வார்த்தைகள்தான் எவ்வளவு பொருந்திப்போகிறது நம் நீலவேணி பாட்டிக்கு!

- ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close