Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்கள் கும்மியடித்து வழிபட்டால் மழை வரும்..! நெல்லை நம்பிக்கை !

நெல்லை: முளைப்பாரி எடுத்து, கும்மியடித்து அம்மன் வழிபாடு நடத்தினால் மழை வரும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆனால் ஆண்கள் கும்மியடித்து வழிபட்டால்தான் மழை வரும் என்ற விநோத நம்பிக்கை நெல்லை அருகே கிராமத்தில் உள்ளது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமம், முத்துகிருஷ்ணபேரி. இங்குள்ள அம்மன்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெறும். பொதுவாக அம்மன் கோவில் திருவிழாவின்போது பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன் ஒரு பகுதியாக கும்மியடித்து வழிபடுவார்கள். ஆனால், இந்த கோவிலில் பெண்கள் எடுத்துவரும் முளைப்பாரியை சுற்றிலும் நின்றபடி, ஆண்கள் கும்மியடித்து வழிபடுகிறார்கள்.

ஆண்கள் கும்மியடித்து வழிபாடு நடத்தினால் தான், மழை வரும் என்றும், மக்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் இங்கு நம்பிக்கை உள்ளது. கும்மியடித்து வழிபட்ட இளைஞர்களிடம் பேசினோம். ’’மழைவேண்டியும் மக்கள் நலனுக்காகவும் நாங்கள் வழிபாடு நடத்துகிறோம். காலம்காலமாக இந்த நிகழ்ச்சி இந்த கோவிலில் நடக்கிறது. முன்பு, 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்றார்கள். இப்போது இந்த கும்மியடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் தயக்கம் காட்டுவதால், இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்கிறோம். இதில், பங்கேற்கும் நாங்க யாருமே கும்மியடி கலையை முறைப்படி கற்றுக் கொண்டவர்கள் அல்ல. ஆனாலும், விரதம் இருக்கும் காலத்தில் கோவிலுக்கு வந்து சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொள்வதால் தயக்கம் இல்லாமல் இதில் பங்கேற்க முடிகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மழை பெய்யும் என்பது நம்பிக்கை” என்று சொன்னார்கள்.

கிராமத்துப் பெரியவர் ஒருவர், ராமாயாணப் பாடலைப் பாட அதன் இசைக்கு ஏற்ப இளைஞர்கள் வட்டமாக நின்று துள்ளிக் குதித்தபடி கும்மியடித்தனர். இவர்களின் வழிபாடு முடிந்த சில நிமிட நேரத்திலேயே வானம் கறுத்ததுடன், கனமழை பெய்யத் தொடங்கியது. அழிவின் விளிம்பில் இருக்கும் கும்மியடி கலையை பாதுகாக்கும் நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

-ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ