Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலத்தடி நீரைப் பாதுகாத்தால், இதுதான் கதியா? தூத்துக்குடி திகில்

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைக்கு விற்கப்படுவதை தடுத்த சமூக ஆர்வலரை அ.தி.மு.க.வினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச்சாலை அமைந்துள்ளது தெய்வசெயல்புரம் கிராமம், இங்குள்ள தோட்டங்களில் இருந்து நிலத்தடி நீர் தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது. இதனால் அந்தபகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த பகுதியைச் சேர்ந்த பரமசிவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார். சமூக ஆர்வலரான இவர், அது தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ. மூலம் சேகரித்துள்ளார். அப்போதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் அனுமதியில்லாமல் சுரண்டப்படுவது குறித்த தகவல் கிடைத்தது. இதன்பிறகு களமிறங்கிய அவர், தூத்துக்குடி மாவட்டம், தெய்வசெயல்புரம், கீழவல்லநாடு, வாகைக்குளம் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் நிலத்தடி நீரை சுரண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். 

இதன்பிறகு நடந்த சம்பவத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பரமசிவனே நம்மிடம் விவரித்தார்.

"நான் தெய்வசெயல்புரத்தில் பூச்சிமருந்து கடை நடத்தி வருகிறேன். சமூக பிரச்னைகளுக்காக போராடுவேன். இதற்காக நான் எந்த அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. என்னுடைய போராட்ட பேனரில் காந்தி, அப்துல்கலாம் ஆகியோர் படங்கள் மட்டும் இடம் பெற்று இருக்கும். நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபார நோக்கில் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதை தடை செய்யக் கோரி கடந்த ஜனவரி மாதம் முதல் போராடி வருகிறேன். நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க பலவகையிலான போராட்டத்தில் ஈடுபட்டேன். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த சமயத்தில் கடந்த 30-ம் தேதி தெய்வசெயல்புரத்தில் உள்ள கடையில் நான் தனியாக இருந்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் முருகேசன் மற்றும் மூன்று பேர் என்னிடம் தகராறு செய்தனர். அப்போது, 'நான் இந்த ஏரியா கவுன்சிலராக இருக்கிறேன். நீ என்ன பெரிய ஆளா, நிலத்தடி நீரை யார் விற்றால் உனக்கு என்ன. அதை ஏன் தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தாய். ஒழுங்கா இரு, இல்லை என்றால் அவ்வளவுதான்' என்று மிரட்டினர்.

பிறகு அவர்கள் உருட்டுக்கட்டையால் என்னை சரமாரியாக தாக்கினர். இதில் என்னுடைய தலை, காது என பல இடங்களில் காயம் ஏற்பட்டது. கடையையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர். இதன்பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் என்னை தாக்கியுள்ளனர். நிலத்தடி நீரை சுரண்டப்பட்டு அது தொழிற்சாலைக்கு விற்கப்படுவதை தடுத்த ஆத்திரத்தில் என்னை அ.தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் என்னுடைய வலது காது கேட்பதில்லை. இருப்பினும் என்னுடைய போராட்டம் தொடரும். என் உயிர் உள்ளவரை நிலத்தடி நீரை காப்பாற்ற போராடுவேன்" என்றார். 

இந்த சம்பவத்துக்குப்பிறகு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரின் உத்தரவின்பேரில் தெய்வசெயல்புரம், கீழவல்லநாடு, வாகைகுளம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தனிநபராக பரமசிவத்தின் போராட்டத்துக்கு சமூகவலைத்தளத்தில் அமோக ஆதரவு பெருகி வருகிறது.  

- எஸ்.மகேஷ் 

எடிட்டர் சாய்ஸ்