Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலை நிராகரித்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காதலை நிராகரித்த பல்கலைக்கழக மாணவியை மதுபாட்டிலால் குத்திய இன்ஜினீயரை போலீஸார் கைது செய்தனர்.

 கோவையைச் சேர்ந்தவர் சாமி. இவரது மகள் தங்கம் (மாற்றம்). இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படித்து வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேம்புராஜா. இன்ஜினீயரான இவர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளனர். நட்பாக பழகிய வேம்புராஜ், ஒருகட்டத்தில் தங்கத்திடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த காதலை தங்கம் ஏற்கவில்லை. வேம்புராஜாவின் காதலை குறித்து தங்கம் வீட்டில் தெரிவித்துள்ளார்.


 இந்நிலையில் தங்கத்தை ஒருதலையாக காதலித்த வேம்புராஜா, சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். அப்போது தங்கம் தரப்பினர் அவரை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி கோவை வந்த வேம்புராஜா, பல்கலைகழக வளாகத்தில் தங்கத்தை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கெஞ்சியுள்ளார். அப்போதும் தங்கம் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

 இதில் ஆத்திரமடைந்த வேம்புராஜா, மது பாட்டிலால் அவரது கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் தங்கம். அவரது அலறல் சத்தம் கேட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தங்கத்தை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வேம்புராஜை போலீஸார் கைது செய்தனர்.


 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தங்கத்தை ஒருதலையாக காதலித்த வேம்புராஜ், ஹைரதாபாத்திலிருந்து கோவைக்கு வந்துள்ளார். அங்கு அவர் தங்கத்திடம் பேசியுள்ளார். அப்போது அவர், வாங்கி வந்த குவாட்டர் மதுபாட்டிலைத் திறந்து குடித்துள்ளார். பிறகு அதே பாட்டிலால் தங்கத்தின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் வேம்புராஜாவை கைது செய்துள்ளோம்.


 வேம்புராஜிக்கு வயது 25. ஆனால் தங்கத்துக்கு வயது 26. வயது உள்ளிட்ட சில காரணங்களுக்காக தங்கம், காதலை ஏற்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட முகநூல் பழக்கம், பிறகு  மொபைல் வரை தொடர்ந்துள்ளது" என்றார்.

 ஒரு தலைக்காதல் விவகாரத்தில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க கடும் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் சமூகஆர்வலர்கள்.


- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ