Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷோ ரூமில் இருந்து இறக்கிய இரண்டே மணி நேரத்தில் காரைத் திருடிய கொள்ளையன்!

தென் இந்தியாவை கலக்கிய கார் கொள்ளையனை  சென்னை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். புதிய  வாகனங்களை  குறிவைத்து திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது  

தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளில் அடிக்கடி தொடர்ந்து கார் திருட்டு  சம்பவம் நடப்பதை ஒட்டி போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.  மற்ற மாநிலங்களில் கார் திருடும் கும்பலை அந்த மாநில போலீசார்  பிடித்த போதிலும் கார்  திருட்டுகள் குறையவில்லை 

. ஒரு  மாநிலத்தில் போலீசார் தங்களை தேடுவதுதெரிந்தால் அந்த  கும்பல் அங்கிருந்து தப்பி அடுத்த மாநிலத்தில் புகுந்து அங்கு வரிசை காட்டினர் இப்படி  பல ஆண்டுகளாக அவர்கள் தங்கள் திருட்டை செய்து வந்தனர்.

இதே போல்  கடந்த மாதம் 13-ம் தேதி அன்று எம்.ஜி.ஆர் நகர் பாரதி தாசன் தெருவில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றை மற்றொரு காரில் வந்த  இருவர் திருடி சென்றது அப்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து  தனிப்படை போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில்  புதுப்பேட்டை பகுதியில் நான்கு சக்கர வாகன கடை நடத்தி வரும் செய்யது அப்பாஸ் (55) என்பவர் சிக்கினார்.

அவரை போலீசார் விசாரித்தபோது  பல புதிய தகவல்கள் கிடைத்தது. அப்பாஸ் தனது கூட்டாளி கேளராவை சேர்ந்த ரியாஸ் என்பவனுடன் சேர்ந்து  கேளரா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடை நடத்தி அப்பகுதியில் ஆள் இல்லாமல் பல மாதங்களாக நிறுத்தப்பட்ட வானங்களை நோட்டமிட்டு  கார்களைத் திருடி குறைந்த விலையில் விற்று வந்தது தெரியவந்தது. 

இவர்கள் இதுவரை தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை அசோக்நகர், கேளரா, கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கார்களை திருடியதை ஓப்புக்கொண்டனர் .தற்போது அப்பாஸ் கொடுத்த தகவலின் பேரில் அவரிடமிருந்து  8 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவனது  கூட்டாளி ரியாசை பிடிக்க சென்னை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 

இந்த கார்களை  பறி கொடுத்தவர்கள் தற்போது  காவல் நிலையம்  நோக்கி  படையெடுக்கத்  துவங்கியுள்ளனர். ஆனால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்களில் நம்பர்  பிளேட் இல்லாமலும், என்ஜின் நம்பர் சுரண்டப்பட்டு இருப்பதால் தங்களுடைய  கார்  எது என தெரியாமல் தேடி  வருகின்றனர்.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் கூறும்போது, ''பல  வருசமா டிராவல்ஸ் தொழில் தான்  பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏற்கெனவே நான்  வச்சு  இருந்த 2 கார்கள் வெள்ளத்துல மூழ்கி  போச்சு. வேற தொழில் தெரியாது என்ன  செய்யன்னு  தெரியல வீடும்  வெள்ளத்துல முங்கிப்போச்சு அந்த  நேரத்துல தான் பொண்டாட்டி  நகை  எல்லாம் வச்சு இண்டிகா கார் வாங்கினேன்.ஷோரூமில் இருந்து சாயங்காலம் அஞ்சு  மணிக்கு காரை இறக்கிட்டு  வந்து தி நகர் சாய்பாபா  கோவில்ல பூஜை  போட்டு வீட்டுக்கு  வெளியில நிறுத்தி  இருந்தேன். நான்  வீட்டுக்குள்ள  போகும்போது  6.30 இருக்கும் 7 மணிக்கு  வெளில  வந்து பார்த்தா  வண்டிய காணும். வண்டி  இறக்குன ரெண்டு  மணி  நேரத்துல அடிச்சுட்டு போய்ட்டாங்க. அந்த வண்டிய நான் முழுசா கூட பாக்கல சார்.வண்டி வச்சு ஒட்டிக்கிட்டு இருந்த  நான்  இப்ப  டிரைவர் வேலைக்கு போய்கிட்டு  இருக்கேன். இந்த பைனான்ஸ்காரன்  வேற டியூ கட்டச் சொல்லி  நெருக்கிக்கிட்டு இருக்கான். வாழ்றதா சாகுறதான்னு தெரியல. திருடுறவன் இல்லாதவனா  பாத்து  என் திருடனும். இந்த  திருட்டால என்  வாழ்க்கையே போச்சு சார்'' என  கூறிவிட்டு அங்கு நிறுத்தப்பட்டு  இருந்த வண்டிகளில் தன் வண்டியை தேடத்  துவங்கினார். ''இதுல எதுவுமே என் வண்டி  இல்ல சார்'' என்றார்,  சோகமாக 

அடுத்ததாக வடபழனியைச் சேர்ந்த சதீஸ்குமார் கூறும்போது,  ''நைட் 3 மணிக்கு  என் வண்டிய அடிசுட்டாங்க சார். இவ்வளவுக்கும் வீடு வடபழனி  போலீஸ்  ஸ்டேஷன் பின்னாடிதான்  இருக்கு. தொடந்து  அந்த  ஏரியால வண்டி  களவு  போகுதுன்னு கொஞ்ச  நாளாவே ரொம்ப  கவனமா  தான் பாத்துக்கிட்டோம். களவு  போற அன்னைக்கு  கூட நைட் 2 மணி வரை வண்டிகிட்ட தான்  இருந்தோம். 3 மணிக்கு வெளில  வந்து  பார்த்தா வண்டிய காணும். வண்டி வாங்கி 4 மாசம்தான்  ஆச்சு  இத வச்சு  வாழ்க்கையை  ஒட்டிரலான்னு நெனச்சேன் இப்படி ஆகிருச்சு. வண்டிய பறிகொடுத்துட்டு இங்க வர்ற எல்லாருக்குமே இது  மட்டுமே தான் பொழப்பா இருக்கு. அதைப்  போய் திருடுறவங்கள சும்மா  விடக் கூடாது'' என  கொந்தளித்தார் 

சைதாப்பேட்டையைச்  சேர்ந்த கந்தசாமி  கூறும்போது,  ''என்  வண்டி களவு  போனதே  எனக்குத் தெரியாது. போலீஸ்  தான்  டோப் பண்ணிட்டு  போய்ட்டாங்கன்னு முதல்ல நினைச்சேன். சைதாப்பேட்டை ஸ்டேஷன் போய் கேட்டா அது  எங்க  லிமிட்  கிடையாது தி நகர் போங்கன்னு சொன்னாங்க. அங்க போனா அசோக்  நகர் போகச் சொன்னாங்க. அவங்க மறுபடியும் தி நகர் போகச் சொன்னாங்க இப்படி அன்னைக்கு  முழுக்க ஸ்டேஷன்  ஸ்டேஷனா சுத்திகிட்டு  இருந்தேன் அப்புறம் கடைசியா சைதாப்பேட்டைதான் என்  லிமிட்ன்னு தெரிஞ்சது. அங்க விசாரிச்சு  பாத்துட்டு நாங்க  எடுக்கல அப்ப  உங்க வண்டி களவு  போயிருக்குன்னு  சொன்னாங்க. இத முதல்லேயே தெரிந்திருந்தா, ஒரு வேளை திருடனை  பிடிச்சு இருக்கலாம் வண்டி இறக்கி  3 மாசம் தான் ஆகுது வெளிநாட்டுல வேலை பாத்த காச வச்சு இந்த வண்டியை இறங்குனேன். இப்ப 2 மாசமா இது சம்பந்தமா தான் அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்'' என்றார்  ஆதங்கமாக. 

அடுத்ததாக  பேசிய தி.நகரைச்  சேர்ந்த ரவி ஏற்கெனவே என் வண்டி ஒண்ணு களவு போயிருச்சு. இது இரண்டாவது தடவ. ரொம்ப கவனமா தான்  இருந்தேன் அப்படியும் அடிசுட்டாங்க. நேத்துதான் பேப்பர்ல பாத்தேன் திருடனை பிடிசுட்டாங்கன்னு. நம்ம  வண்டி இருக்குன்னு  நெனச்சு இங்க வந்து பாத்தா போலீஸ் பிடிச்ச  எந்த வண்டிக்கும்  நம்பர் பிளைட் இல்ல, என்ஜின் நம்பர், சேஸ் நம்பர் எல்லாத்தையும் அழிச்சு  இருக்காங்க.  யாரு வண்டின்னு  அடையாளம்  கண்டுபிடிக்க  முடியாதபடி இருக்கு. திருட்டு  கேஸ்  எல்லாம்  உடனே  கம்பளைண்ட் கொடுத்து பிடிச்சாதான் உண்டு. ஆனா கம்பளைண்ட் கொடுக்க  போலீஸ் ஸ்டேஷன்  போனா நம்மள  தான்  திட்டுவாங்க. நைட் போலீஸ் செக்கிங் பண்ணும்போது ஆர் .சி புக்க மட்டும்  செக் பண்ணாம என்ஜின்  நம்பர் சரியா இருக்கான்னு  பாத்தா இந்த  திருட்டு எல்லாம் கொஞ்சம்  குறையும்'' என்றார் .

இது பற்றி நம்மிடம்  பேசிய காவல் துறை அதிகாரி  ஒருவர், ''வீட்டுக்குள்ள பார்க்கிங் இல்லாம தெருவுல  நிக்குற  வண்டிகள்  தான்  அதிகமா திருடு  போயிருக்கு. தொழில்நுட்ப  ரீதியா திருடங்க ரொம்ப முன்னேறி  இருக்காங்க. ரிமோட் சாவி வண்டிய  திறக்க  கூட மெஷின் வச்சு  இருக்காங்க. திருட்டு  போன  வாகனங்கள்  எல்லாமே ஒரு குறிப்பிட்ட சர்வீஸ் சென்டருக்கு போயிட்டு வந்த  அப்புறம் தான்  திருட்டு  போய் இருக்கு. அதே மாதிரி ராயப்பேட்டை கார்களுக்கு  எக்ஸ்ட்ரா பிட்டிங் மாட்டுற ஒரு கடைக்கு போயிட்டு வந்த  கார்களும்  திருட்டு போயிருக்கு. இத எல்லாம் கண்காணிச்சுக்கிட்டு இருக்கோம் விரைவில் கார்  திருட்டு கும்பலைச் சேர்த்தவர்கள் அனைவரையும் கைது செய்வோம்'' என்றார் உறுதியாக  

- பிரம்மா

படங்கள்: அசோக் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close