Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேட்பாளரை வலைவீசித் தேடிய விஜயகாந்த்!  -தெறித்து ஓடிய தே.மு.தி.க நிர்வாகிகள் 

 

 

ந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இடைத்தேர்தலில் களமிறங்குகிறது தே.மு.தி.க. ' மூன்று தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கு வந்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் கவுரவமான இடங்களைக் கேட்டுப் பெற முடியும் என உறுதியாக நம்புகிறார் கேப்டன்' என்கின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில். 

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தன. 'களத்தில் நாங்களும் இருக்கிறோம்' என பா.ஜ.கவும் வேட்பாளர்களை அறிவித்தது. மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் இருந்து பின்வாங்கிவிட்டது. தொடக்கத்தில் போட்டியிடுவது குறித்து உறுதியான அறிவிப்பை தே.மு.தி.க வெளியிடவில்லை. தற்போது மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் விஜயகாந்த். தேர்தல் பிரசார வேலைகளும் களைகட்டத் தொடங்கிவிட்டன. 

" பொதுவாக இடைத் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும். ' எதற்குத் தேவையில்லாத நேர விரயம்?' என புதுக்கோட்டை இடைத்தேர்தலைத் தவிர, கடந்த ஐந்து வருடங்களில் எந்த இடைத் தேர்தலிலும் தே.மு.தி.க பங்குபெறவில்லை. ஆனால், சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்பட சிலர் மட்டுமே கேப்டனுடன் உள்ளனர். 104 தொகுதிகளில் போட்டியிட்டு பத்து லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே வாங்கியதை, கேப்டனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்துவோம்' என்றுதான் விஜயகாந்த் முடிவெடுத்தார். ஆனால், பிரேமலதாவின் பிடிவாதத்தால் மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த மூன்று பேரையும் போட்டியிட சம்மதிக்க வைப்பதற்குள் ஒருவழியாகிவிட்டார் கேப்டன்" என விரிவாகவே நம்மிடம் விவரித்தார் தே.மு.தி.க நிர்வாகி ஒருவர். தொடர்ந்து அவர், 

" கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக கேப்டனிடம் கைகட்டி நின்ற காலம்போய், இப்போது வேட்பாளர்களிடம் கைகட்டி நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார் கேப்டன். கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்தபோது, திருப்பரங்குன்றத்தில் போட்டியிட மறுத்தார் தே.மு.தி.கவின் அப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ ஏ.கே.டி. ராஜா. இதனால், சி.பி.ஐ கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தார் கேப்டன். தற்போது அங்கு போட்டியிடுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஒருவழியாக, திருமங்கலம் தேர்தலில் போட்டியிட்ட தனபாண்டியனை வேட்பாளராக நிற்குமாறு கேட்டுக் கொண்டார். அவரோ, ' என்கிட்ட பத்து பைசாகூட கிடையாது. எந்த அடிப்படையில் நான் போட்டியிடுவது?' எனக் கேட்க, ' நான் 25 லட்ச ரூபாய் தருகிறேன். போட்டியிடுங்கள்' என சமாதானப்படுத்தினார் கேப்டன். 

அதேபோல், தஞ்சாவூர் தேர்தலில் தி.மு.கவின் அஞ்சுகத்தையும் அ.தி.மு.கவின் ரங்கசாமியையும் எதிர்க்க சரியான ஆட்களைத் தேடினார் கேப்டன். கடந்தமுறை பேராவூரணி தொகுதியில் நின்ற ஜெயப்பிரகாஷ் தி.மு.க பக்கம் வந்துவிட்டார். ' யாரும் போட்டியிட விரும்பவில்லை' என மாவட்ட நிர்வாகிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல், கேப்டனின் நெருங்கிய நண்பரும் மலேசியாவைச் சேர்ந்த அப்துல்லா சேட்டை வேட்பாளராக அறிவித்துவிட்டார். வருடத்தில் 90 சதவீத நாட்கள் வெளிநாட்டில் இருக்கும் இவருக்குப் பூர்வீகம் ராமநாதபுரம். கடந்த தேர்தலில் ஆயிரம்விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரம் ஓட்டுக்களை வாங்கியவர்தான் இந்த சேட். இதன்பிறகு, அரவக்குறிச்சி தொகுதிக்கு யாரை நிறுத்துவது என குழம்பிப் போனார் கேப்டன். குளித்தலை மா.செ தங்கவேல், கரூர் மா.செ ரவி ஆகியோர் பின்வாங்கிவிட்டனர். 

எனவே, அரவை முத்து என்ற பைனான்ஸியரை வேட்பாளராக நிறுத்திவிட்டார். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சிக்கி சின்னாபின்னமானார் தங்கவேல். ' கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே வந்து பிரச்னை செய்தார்' என இவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் கேப்டன். எனவே, முத்துவிடம், ' நீ வேட்பாளராக நின்றால், அடுத்த மாவட்டச் செயலாளர் நீதான்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதையடுத்து, அரைமனதோடு தேர்தலில் போட்டியிட சம்மதித்தார் அரவை முத்து" என விளக்கி முடித்தார். 

அ.தி.மு.க, தி.மு.கவின் பணபலத்தையும் தாண்டி கணிசமான ஓட்டுக்களையும் மூன்றாவது இடம் என்ற இலக்கையும் நோக்கிப் பயணிக்கிறார் விஜயகாந்த். அவரது நோக்கத்தை மக்கள் நிறைவேற்றுவார்களா என்பதற்கு வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவு தெரியலாம். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ