Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘மவுலிவாக்கம்’... அன்று என்ன நிகழ்ந்தது...? புகைப்படக் கலைஞரின் நேரடி அனுபவம்!

மவுலிவாக்கம் கட்டட தகர்ப்பின் சிறப்பு புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திலிருந்து போன். ‘‘மவுலிவாக்கம் கட்டட இடிப்பு அசைன்மென்ட்-க்குச் செல்ல வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. உடனே பரபரத்தபடியே அலுவலகம் வந்து ஆயத்தமாகி, மவுலிவாக்கத்துக்கு நாங்கள் புறப்பட்டோம். 12 மணிக்கு மேல் மவுலிவாக்கம் ஏரியாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து 11 மணிக்கே ஸ்பாட்டில் இருந்தால் நல்லது என்று தீர்மானித்தோம். அதனால் காலை 10.00 மணிக்கே புறப்பட்டுச் சென்று, வாகன நெரிசலைப் பொருட்படுத்தாது, கிண்டி வழியாக போரூர் நோக்கிப் பயணித்தோம். சாலையில் வேகமெடுக்கும் வாகனங்களைப் பார்த்த மேகமும், மழை என்ற இயந்திரத்தை வேகமாக இயக்கியது. அவ்வளவுதான். விரைந்துகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் ஆமை போல் நகர ஆரம்பித்தன. வண்டியில் கேமரா இருந்ததால் அதைப் பாதுகாப்பதற்காக வண்டியை ஓரமாக நிறுத்தினோம்.

இடம்பிடிப்பதுதான் இப்போதைய போராட்டம்!

 அதற்குள், ‘‘ஏன் இவ்வளவு சீக்கிரம் செல்கிறீர்கள்’’ என்று மற்றொரு அழைப்பு வந்தது. இப்போது ஒரு அசைன்மென்ட்க்குச் சென்று படம் எடுப்பதைவிட, அங்கு இடம்பிடிப்பது என்பதுதான் பெரும் போராட்டமாக இருக்கிறது. ஏனென்றால், மீடியாக்களின் வரவு அப்படி. இதில் லைவ் வேறு! அதுவும், லைவ் என்ற பெயரில் வயரை கண்ட இடத்தில் தொங்க விட்டு இருப்பார்கள். அதுபோக காம்படிசன். இவற்றை எல்லாம் மனதில் நினைத்தபடியே, அந்த அழைப்புக்கு மெளனத்தையே பதிலாகச் சொல்லிவிட்டு வண்டியை விரட்டினோம். எங்களின் வேகத்தைப் பார்த்த மேகமோ, மழையின் வேகத்தைக் குறைத்ததோடு அதை அறவே நிறுத்திக் கொண்டது.

‘மேகம்கூடக் கண்ணீர் சிந்தக் காத்திருக்கிறது!’

ஒரு வழியாக, இடிக்கப்படும் கட்டடத்துக்கு அருகில் சென்றோம். அதை 100 மீட்டர் இடைவெளிக்கு முன்பே நின்று பார்த்தபோது, ‘என்னை வெடிவைத்துத் தகர்ப்பதைப் பார்க்கவா இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள்’ என்று அந்தக் கட்டடம் கடைசியாய் கேட்பதைப்போன்று இருந்தது, அதன் பார்வை. காரணம், அதைச் சுற்றி அவ்வளவு மக்கள். எவையெல்லாம் உயரமாக இருந்ததோ, அவற்றின் மீது எல்லாம் மக்கள் ஏறி நின்று வேடிக்கை பார்த்தனர். அவற்றையெல்லாம் பார்த்தபடியே மீடியாக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றோம்.  அங்கு, முன்பே நினைத்தபடி மீடியா நண்பர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. இருந்தாலும், அவர்களுடன் நாங்களும் ஒட்டிக்கொண்டோம். கேமராவை பையில் இருந்து எடுத்து... கட்டடத்தை ஃபோகஸ் செய்தபடி வைத்தோம். இடிக்கப்பட இருந்த கட்டடம் மேகமூட்டத்தால் சூழ்ந்திருந்தது. ஒருவேளை, கவிஞர் யாராவது அங்கு நின்றிருந்தால்... ‘மேகம்கூடக் கண்ணீர் சிந்தக் காத்திருக்கிறது’ என்று எழுதியிருப்பார். அதை இரண்டுமுறை கிளிக் செய்து எடுத்த படத்தை ‘டாட்காமு’க்கு அனுப்பிவைத்தோம்.

மவுலிவாக்கம் கட்டட தகர்ப்பின் சிறப்பு புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

கட்டடத்தை மழை குளிப்பாட்டியது!

அரசு பி.ஆர்.ஓ-க்களால் வழங்கப்பட்ட உணவு நேரத்தை வைத்து மதியம் 1 மணி இருக்கும் என்று நினைத்தோம். அது சரியாகத்தான் இருந்தது. 4 மணிக்கு எப்படியும் அசைன்மென்ட் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் சாப்பிடாமல் அடுத்தடுத்த போட்டோக்கள் எடுக்க அதேஇடத்தில் காத்திருந்தோம். ஒரு மணி நேரம் ஓடியது தெரியவில்லை. மணி 2-ஐக் காட்டியது. எல்லோரும் அலர்ட் ஆனார்கள். அனைவரின் பார்வையும் கேமரா வழியாகக் கட்டடத்தை நோக்கி இருந்தது. ஆம், கவிஞர் இல்லாதபோதும் உண்மையிலேயே மேகம் கண்ணீர் வடித்தது. ஒரு பிரேதத்தைக் குளிப்பாட்டி கல்லறைக்கு அனுப்பிவைப்பது போன்றே இருந்தது அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும். மீடியா நண்பர்கள் அனைவரும் கேமராக்களைக் குடைக்குள் கொண்டு வந்தார்கள். மழையில் நனைந்து நின்ற கட்டடத்தையும் விடவில்லை. அதையும் கேமராவைக் கொண்டு படமாக்கினோம்.  அரை மணிநேரத்தில் அந்தக் கட்டடத்தை மழை குளிப்பாட்டி முடித்தது.

“இன்னும் சிறிது நேரத்தில்...’’

அந்த நேரம் பார்த்து கடமை தவறா காவல் அதிகாரி ஒருவர் எங்கள் அருகே வந்து, ‘‘கவுன்டவுன் ஸ்டார்ட் ஆனவுடன் எனக்குத் தகவல் சொல்வார்கள். அப்போது, நான் உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த சில நிமிடங்களில், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மீடியா குழுவினர் குழுமியிருந்த இடத்திலிருந்து அந்தக் கட்டடத்தைப் பார்வையிட்டார். திரும்பவும் மீடியா நண்பர்கள் அலர்ட் ஆனார்கள். அனைத்து கேமராக்களும் லைவ்வில் இருந்தன. செய்தியாளர்கள் கேமரா முன்பு நின்றபடி “இன்னும் சிறிது நேரத்தில்... இன்னும் சிறிது நேரத்தில்...’’ என மாற்றிமாற்றி ஒப்புவித்துக்கொண்டு இருந்தார்கள். ‘‘3:30 மணிக்கு இடிக்கப்படும்’’ என்றவர்கள்... பின்பு, ‘‘4 மணியாகும்’’ என்றார்கள். இனியும் வயிற்றைக் காயப்போடக் கூடாது என்று நினைத்து அவர்கள் கொடுத்த சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டோம்.

மவுலிவாக்கம் கட்டட தகர்ப்பின் சிறப்பு புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

போலீஸாருக்கும், மீடியாவுக்கும் சலசலப்பு!

இயற்கையை நாம் என்ன செய்ய முடியும்? மாலை 4 மணிக்கு, மறைவதற்காக மேற்கு நோக்கிப் பயணித்த சூரியனின் தாக்கம்கூட மிக அதிகமாக இருந்தது. அதுகூட மறையப்போகும் கட்டடத்தைக் காணப்போகும் கவலையில்தான் அப்படி வந்திருக்குமோ... யாருக்குத் தெரியும்? ஆனால், அதன் உஷ்ணம் எங்கள் தலைகளைப் பதம் பார்த்தது என்பது மட்டும் நிஜம். மணி 5-ஐத் தொட்டது. இரை தேடிப் புறப்பட்ட புறாக்கள் தன் இருப்பிடத்தை நோக்கி வந்தன. ஓ! அந்தக் கட்டடம்தான் அவற்றின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம். எதைப்பற்றியும் அறியாத அந்தப் புறாக்கள் எப்போதும்போல அதைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தன. நேரம் நெருங்கநெருங்க மீடியா நண்பர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் போலீஸாருக்கும், மீடியாவுக்கும் சின்ன சலசலப்பு. மணி ஆறு அடித்தது. அந்தக் கட்டடம் மறைவதற்குள் மாலைப்பொழுது தன்னை மறைத்துக்கொண்டது. இருள் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. ஏற்கெனவே அந்தப் பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்து இருந்ததால்... அது, இருளுக்கு மேலும் சாதகமாக இருந்தது. ஆனாலும், அந்தக் கட்டடத்தைத் தகர்க்காததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.

‘‘நீங்கள் ஃபளாஷ் உபயோகித்தால்...’’

‘இனி இவர்கள் இந்தக் கட்டடத்தைத் தகர்க்கமாட்டார்கள்’ என்ற நினைப்பில் சில பத்திரிகையாளர்கள் புறப்படத் தொடங்கினர். அந்தச் சமயத்தில் காவலர்கள் எங்களுக்கு ஒரு கட்டளையை விதித்தார்கள். ‘‘நீங்கள் ஃபளாஷ் உபயோகித்தால்... அது கட்டடத்தில் உள்ள வெடிகுண்டை பாதிக்கும்” என்று அவர்கள் விதித்த கட்டளை எங்களுக்கு விந்தையாக இருந்தது. ஆனாலும் பொறுமை காத்தோம். மணி சரியாக 6.40. ‘‘கவுன்டவுன் ஸ்டார்ட் ஆனால், தகவல் சொல்கிறேன்’’ என்று சொன்ன அந்தக் காவலர், அவர் சொன்ன வார்த்தையை இப்போது காப்பாற்றினார். ஆம்... ‘‘கவுன்டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு’’ என்று குரல்கொடுத்தார் மிகுந்த பரபரப்புடன். அவ்வளவுதான், அடுத்த நொடி அனைவரும் ரெடி. ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் ஒருவித தயக்கத்துடன் நின்றோம். அப்போது, ‘‘வெளிச்சத்துக்காக விளக்கைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’’ என்றனர் காவலர்கள். அதன்படி நாங்கள் தயாரானோம்...

                                      மவுலிவாக்கம் கட்டட தகர்ப்பின் சிறப்பு புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

10, 9, 8 என்று கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகியது. அனைவரது நெஞ்சங்களும் திக்... திக்... என்று அடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரோ மனிதநேய மிக்க மனிதர் ஒருவர், ‘‘பாவம்... அந்தப் புறாக்கள்’’ என்று வேகமாய் கத்தினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நொடி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் மவுலிவாக்கம் பகுதி மக்களுக்கு அரை நிர்வாணமாய் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்த அந்தக் கட்டடம் இப்போது ஒரே நொடியில் தகர்ந்து... புகைமூட்டத்துடன் அடங்கி நின்றது. அந்தக் காட்சிகளை எங்கள் கேமராவோடு இன்னும் பல கேமராக்களும் படமெடுத்து முடித்தன. அங்கு கூடியிருந்த மக்களின் காதுகளில்... அந்தக் கட்டடம் இடிந்து விழுந்த சத்தத்தைவிட, அதன்மேல் சத்தமிட்டு வட்டமடித்துக்கொண்டிருந்த பறவைகளின் சத்தம்தான் அதிகம் கேட்டது. அதனுடைய முட்டைகள், குஞ்சுகள் எல்லாம் அந்தக் கட்டடத்துக்குள் நசுங்கிப்போயிருக்கலாம். அதற்காகக்கூட அவைகள் சத்தமிட்டிருக்கலாம் என்று நினைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டோம்..

மவுலிவாக்கம் கட்டட தகர்ப்பின் சிறப்பு புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

- ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ