Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்வையைப் பறித்த பென்சில் விளையாட்டு! எல்.கே.ஜி மாணவனுக்கு நேர்ந்த துயரம்

விளையாட்டுச் சண்டைகள் பல நேரங்களில் விபரீதமாகுவதுண்டு. அப்படித்தான் சென்னை திருமங்கலத்தில் 4 வயது எல்.கே.ஜி மாணவனுக்கும், சிறுமிக்கும் நடந்த பென்சில் விளையாட்டு சண்டையில் மாணவனின் கண்பார்வையை பறித்துவிட்டது.

சென்னை திருமங்கலம் பாடிபுதுநகர் அருகே உள்ள விநாயகர்தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவருக்கு விக்னேஷ் என்ற 7 வயது மகனும், பிரதீப் என்ற 4 வயது மகனும் உள்ளனர். பிரதீப் பாடிபுதுநகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவர், காந்திநகரில் உள்ள பராசக்தி என்பவரிடம் டியூசன் படித்தார். பிளஸ் 2 முடித்த பராசக்தி, அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.

கடந்த 26-ம் தேதி டியூசன் சென்ற பிரதீப்பின் வலது கண்ணில் பென்சில் குத்திவிட்டது என்று தந்தை வேலுவுக்கு தகவல் போனில் வந்தது. உடனடியாக அங்கு சென்றபோது பிரதீப் அழுது கொண்டு இருந்தார். அவரது வலது கண்ணில் ஆழமான காயம் இருந்தது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரதீப்பை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வலது கண் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் முதலுதவி அளித்துவிட்டு வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்தார். இதனால் நுங்கம்பாக்கத்தில் உள்ள கண் மருத்துவமனைக்கு பிரதீப்பை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் பிரதீப்பிற்கு கண் பார்வை கிடைக்காது என்று டாக்டர்கள் சொன்னக் தகவலைக் கேட்டு தந்தை வேலு அதிர்ச்சி அடைந்தார். இதன்பிறகு தீபாவளியன்று பிரதீப்புக்கு அறுவை சிகிச்சை மூலம் வலது கண் அகற்றப்பட்டது. 

இதுகுறித்து வேலு கூறுகையில், "நான் கூலி வேலை செய்து வருகிறேன். என்னுடைய மகன் பிரதீப், டியூசன் படிக்க பராசக்தி என்பவரிடம் செல்வார். அவரது தம்பி மகள் ஷாரிகா என்ற 4 வயது சிறுமி, பராசக்தி வீட்டிலேயே இருப்பார். அவர், டியூசன் படிக்க செல்பவர்களை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. அதுபோல சம்பவத்தன்று பிரதீப்பின் கண்ணில் அவர் பென்சிலால் குத்தி உள்ளார். இந்தத் தகவலை முதலில் எங்களுக்குத் தெரிவிக்காமல் பக்கத்து வீட்டுக்கு போனில் தெரிவித்துள்ளார் பராசக்தி. பிறகு எனக்கு தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரதீப்பை அழைத்துச் சென்றோம். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு பிரதீப்பை அழைத்துச் சென்றபோது அவரது வலது கண்ணில் பென்சில் குத்தியதால் 'சீல்' வைத்ததோடு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக கண்ணை அகற்றவில்லை என்றால் அதன்பாதிப்பு இடது கண்ணுக்கும் ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது வலது கண் பார்வையை இழந்து என் மகன் பிரதீப் சிரமப்படுகிறான். அறுவைசிகிச்சைக்கு 40 ஆயிரம் செலவாகும் என்று மருத்துவமனையில் தெரிவித்தனர். இதில் 10 ஆயிரம் ரூபாயை பராசக்தி தரப்பினர் செலுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது பராசக்தி, கண்ணில் தூசி விழுந்ததாக போலீஸிடம் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதீப்புக்கு மாற்றுக் கண் கிடைக்குமா என்று ஒவ்வொரு இடங்களாக அலைந்து கொண்டு இருக்கிறேன்" என்றார் கண்ணீர் மல்க.

இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் கூறுகையில், "இந்த சம்பவத்தில் பிரதீப்பை பென்சிலால் குத்தியது 4 வயது சிறுமி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. பிரதீப்பும், அந்த சிறுமிக்கும் பென்சிலை பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அங்கு டியூசன் எடுத்த பராசக்தி தடுத்து இருக்க வேண்டும். அவர் கவனக்குறைவாக இருந்ததாக பராசக்தி  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் போலீஸ் நிலையத்திலேயே முன்ஜாமீன் பெற்று வீட்டுக்கு சென்று விட்டார்" என்றார்.

டியூசன் படிக்கச் சென்ற இடத்தில் இரண்டு சிறார்கள் விளையாட்டால் பார்வையை இழந்துள்ளார் பிரதீப்.


- எஸ்.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

எடிட்டர் சாய்ஸ்

MUST READ