Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்தடுத்து 3 யானைகள் பலி! தொடரும் யானைகள் இறப்பு

கோவையில் வயிற்றில் சிசுவோடு  உயிருக்கு போராடி வந்த  யானைக்கு சிகிச்சை அளித்து, யானையையும் குட்டியையும் காப்பாற்றி வனத்துக்குள் அனுப்பி வைத்த மகிழ்ச்சி மறைவதற்குள் அடுத்தடுத்த யானைகள் பலி செய்தி வன உயிரின ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து யானைகள் பலியாகின. ரயில் மோதி, பஸ் மோதி, மின்சாரம் தாக்கி, துப்பாக்கியால் சுடப்பட்டு என 10க்கும் அதிகமான யானைகள் அடுத்தடுத்து பலியாகின. வனத்துறை பிடித்துச் சென்ற யானை பலியான சம்பவம் கூட நடந்தது. தொடர்ச்சியான இந்த சோக செய்திகளுக்கு நடுவே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட கருவுற்ற யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறை, யானையையும், குட்டியையும் காப்பாற்றி சிகிச்சைக்குப் பின்னர் காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

அடுத்தடுத்த யானைகள் இறப்பால் அதிர்ச்சியடைந்த வன உயிரின ஆர்வலர்களை இது ஓரளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அந்த மகிழ்ச்சி மறைவதற்கு முன்னர் மீண்டும் யானைகள் இறப்பு சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் கோவை மாவட்டம் சிறுமுகையில் தாயைப்பிரிந்து தவித்த குட்டி யானையை முதுமலை காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த யானை கடந்த 30-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தது. வயிற்றுப்போக்கு தொடர்ந்து ஏற்பட்டதால் அந்த குட்டி யானை இறந்ததாக சொன்னது வனத்துறை.


இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று மின்சாரம் தாக்கி நேற்று இறந்தது. மூலக்கடம்பூர் எனும் கிராமத்தில் மரவள்ளி, சோளத்தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருக்க, அவ்வழியாக வந்த 15 வயது ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது. யானையை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் வனத்துறையினர் புதைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு குட்டி யானை மர்மமான முறையில் இறந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஊளியூர் வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. யானையின் இறப்புக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர், இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

குட்டியானை இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர், இந்த குட்டியானையின் இறப்பு, வன உயிரின ஆர்வலர்களை மட்டுமல்லாது அப்பகுதி கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் இரு குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்துள்ளது. மீண்டும் யானைகள் இறப்பு அதிகரித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. யானைகளை பாதுகாக்க வேண்டியது என்பது மிக அவசிய தேவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

-  சே.சின்னதுரை

படங்கள் : தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ