Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விஜயகாந்த்தை வைகோ விமர்சிப்பதை ஏற்க முடியாது'!  -சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன் அதிரடி

க்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்குள் உரசல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. ' விஜயகாந்த் குறித்து வைகோ சொல்லும் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' என அதிர வைக்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். 

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்திருந்த தே.மு.தி.கவும் த.மா.காவும் தனியே சென்றுவிட்டன. தேர்தலுக்கு முன்பு அணி சேர்ந்த ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் மட்டுமே தொடர்கின்றன. கடந்த சில நாட்களாகவே, மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று தொடர்கிறதா என்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் நிர்வாகி ஒருவர், " கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செல்வதற்காக பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக, தி.மு.க கூட்டிய கூட்டத்தில் எங்கள் கட்சியின் விவசாய சங்க பிரநிதிகள் கலந்து கொண்டனர். இதனை வைகோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ' எங்கள் கட்சியின் சங்கங்களுக்கு சுயமாக முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் இருக்கிறது' என்று புரிய வைத்தோம். ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டார். 'கூட்டணிக்கே வைகோதான் தலைவர்' என்ற தொனியில்தான் பல விஷயங்கள் நடந்து வருகின்றன. 

'மூன்று தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் பங்கேற்க வேண்டும்' என எங்கள் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதை கூட்டணியின் மற்ற தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, நாங்கள் போட்டியிடுவதை வைகோ விரும்பவில்லை. ' உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அமைதியாக இருந்தோம். தற்போது வி.சி.கவும் கூட்டணியில் இருந்து விலகி நிற்கவே விரும்புகிறது. உள்ளாட்சித் தேர்தல் வரையிலாவது மக்கள் நலக் கூட்டணி நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை" என்றவர்,

" சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தியது குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார் வைகோ. இதை கூட்டணியின் மற்ற தலைவர்கள் ரசிக்கவில்லை. அந்த நேரத்தில் விஜயகாந்தைக் கொண்டு வருவதற்காக, வைகோ என்னவெல்லாம் செய்தார் என்பதையும் அறிவோம். தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் வைகோ எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதையும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவார்கள். இவ்வளவு நாட்கள் கழித்து தே.மு.தி.க தலைமை மீது தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்க முடியவில்லை" என்றார் கொதிப்போடு. 

வைகோ கருத்து குறித்து சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தை முன்னிறுத்தியது தவறு என்று வைகோ சொல்கிறார். பொதுவாக, முதலமைச்சர் வேட்பாளர் என்ற அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும், தேர்தல் நேரத்தில் தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என அனைவரையும் நிராகரித்துவிட்டு எங்களோடு வந்தார் விஜயகாந்த். அப்போது அவர்கள் தரப்பில் சில எதிர்பார்ப்புகள் இருந்தன. அனைவரையும் எதிர்த்துக் கொண்டு வந்ததால், முதலமைச்சர் வேட்பாளராக அவரை முன்னிறுத்தினோம். இது தவறல்ல. அன்றைய சூழலில் எடுத்த முடிவை சரியா தவறா என்று இப்போதைக்கு விவாதிப்பது பொருத்தமாக இருக்காது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்றார்.

' விஜயகாந்தை முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சேகரித்த மக்கள் நலக் கூட்டணி, இப்போது தே.மு.தி.கவை முன்னிறுத்தியே முட்டல் மோதலைத் தொடங்கி வைத்திருக்கிறார் வைகோ' என்கின்றனர் கூட்டணியின் நிர்வாகிகள்.  

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்