Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழை சிதைக்கும் புயல் சின்னங்கள்..! தனுஷ்கோடியை பாதுகாக்கலாமா?!

சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்களின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கி வந்தது தனுஷ்கோடி. ஆசிய பகுதியில் உள்ள பல நாடுகளை அடிமைகளாக வைத்திருந்த ஆங்கிலேயர்கள், அந்த நாடுகளுக்கு எல்லாம் எளிதாக சென்று வர உதவியது இந்த தனுஷ்கோடி துறைமுகம் தான். இதனால் இங்கு ஆங்கிலேயர்கள் பல்வேறு கட்டடங்களை உருவாக்கினர். இங்கு தங்கியிருந்து பணிபுரிந்த ஆங்கிலேயர்களுக்காக புனித பிலோமினாள் ஆலயத்தையும் நிர்மானித்து இருந்தனர். எடை குறைவான அதே நேரத்தில் உறுதி தன்மை வாய்ந்த கடல் பஞ்சு என சொல்லப்படும் கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டடங்கள் கடற்காற்றால் ஏற்படும் ஈரத்தன்மை, உப்புத் தன்மையால் ஏற்படும் அரிமானம் ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

நாடு விடுதலை அடைந்த பின்னர் இந்தியா இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில் 1964 டிசம்பர் 23 நள்ளிரவு, ஆழி பேரலை தாக்குதலில் சிக்கிய தனுஷ்கோடி நகரம், கடல் கொண்ட நகரமாக மாறியது. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து உள்ளூர் அகதிகளாக வெளியேறினர். தனுஷ்கோடி பகுதி மனிதர்கள் வசிக்கத் தகுதி அற்ற பகுதி என அரசால் அறிவிக்கப்பட்டது.

இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினாலும், ஆழி பேரலையில் சிக்கி சிதைந்து போன கட்டட  இடிபாடுகள் இன்றளவும் புயல் ஏற்படுத்திய கோரத்தின் சாட்சிகளாக இருந்து வருகின்றன. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு சென்று இந்த அடையாளச் சின்னங்களைக் கண்டுகளித்து வருவது வழக்கமாகிவிட்டது. இதில் ரயில் நிலையத்தின் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி, புனித பிலோமினாள் ஆலயம், விநாயகர் ஆலயம் ஆகியவை காட்சி சின்னங்களாக மாறிப்போயின.

இந்நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு 50 கோடி செலவில் தனுஷ்கோடிக்கு புதிய சாலையை அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து புயலின் அடையாள சின்னங்களாக திகழும் பிலோமினாள் ஆலயம் உள்ளிட்டவற்றை பாதுகாத்து ஒலி ஒளி காட்சி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புயலின் கோர தாக்குதலை தாங்கி, அதன் பின்னரும் 50 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக காட்சியளித்து வந்த புனித பிலோமினாள் ஆலயம் இன்று காலை பெய்த கடும் மழையில் இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை தனுஷ்கோடி பகுதியில் பெய்த கனமழையின் விளைவாக இந்த ஆலயத்தின் இடது பக்க சுவர் சுமார் 10 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்து சேதமடைந்தது. தொடர்ந்து மழை பெய்யும் சூழல் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் காட்சியகமாக திகழும் தனுஷ்கோடி பகுதியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களை சீரமைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துள்ளது.

- இரா.மோகன்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ