Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘15 டாஸ்மாக் பிராண்டுகள் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேட்பாளர் சீட்!'

மிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் மது குடிப்போரை காப்பாற்ற வேண்டும் என்றுச் சங்கம் அமைத்து குரல் கொடுத்து வருபவர் செல்லப்பாண்டியன். தஞ்சை சட்டமன்றத் தேர்தலில் தங்கள் அமைப்பின் சார்பில் வேட்பாளரைக் களம் இறக்கி, விறுவிறுப்பாகத் தேர்தல் பிரசாரத்திலும் இறங்கிவிட்டார் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன். அவரைச் சந்தித்தோம்.
 
‘‘மதுகுடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது ஏன்?’’

‘‘மதுகுடிப்போர் மூலம் தமிழக அரசு 2015-16-ம் ஆண்டில் 25,845 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்தத் தொகைதான், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு வருமானம் ஈட்டுவதற்குக் காரணமாக இருக்கும் மதுகுடிப்போர்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை. உயிரை பணயம்வைத்துக் குடிக்கும் எங்களுக்கு உரிய மரியாதையும் இல்லை. எனவேதான், எங்களது காரியத்தை பார்த்துக்கொள்ள நாங்களே தேர்தல் களத்தில் குதித்துவிட்டோம். அதற்காக, 2012-ம் ஆண்டு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இருந்து மக்களைச் சந்தித்து வருகிறோம். எங்கள் பிரச்னைகளைத் தெரியாத ஒருவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்கவைப்பதால் எங்கள் சமூகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, நாங்களே களம் இறங்கிவிட்டோம்.’’

‘‘வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வுசெய்கிறீர்கள்?’’

‘‘மதுகுடிப்பவர்கள்தான் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். ஆனாலும், மதுகுடிப்பவர்கள் அனைவரும் எங்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட முடியாது. 2003-ம் ஆண்டில் தமிழகத்தில் 47 பிராண்டு சரக்குகள் விற்பனை ஆனது. ஆனால், இப்போது 105 பிராண்டு சரக்குகள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கிறது. இதில், குறைந்தபட்சம், 15 பிராண்டுகள் பற்றித் தெரிந்தவர்களைத்தான் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ப்போம். அவர்களுக்குத்தான் தேர்தலில் நிற்க சீட் கொடுக்கிறோம். தஞ்சை தொகுதியில் எம்.எஸ்.ஆறுமுகம் போட்டியிடுகிறார். அனைத்துக் குடிமகன்களும், குடியினால் பாதிக்கப்பட்டோரும், குடியே வேண்டாம் என்று சொல்வோரும் எங்கள் வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.’’

‘‘தஞ்சையில் மட்டும் போட்டியிடுவது ஏன்?’’

‘‘தஞ்சை அருகே கும்பகோணத்தில் 21.1.1963-ம் தேதி அன்று மதுகுடிப்போர் மாநாட்டை பெரியார் நடத்தினார். அதன் ஞாபகமாகத்தான் நாங்கள் தஞ்சை தொகுதியைத் தேர்வுசெய்துள்ளோம். மற்ற அரசியல் கட்சிகளைப்போல எங்களிடம் பண பலம் இல்லை. ஒரு தொகுதியில் நிற்கும்போது கவனத்துடன் தேர்தல் வேலை செய்து ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.’’

‘‘தேர்தல் வாக்குறுதிகளாக என்னென்ன சொல்லி இருக்கிறீர்கள்?’’

‘‘டாஸ்மாக் கடைகளில் உடைந்துபோகும் பாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் பண்ணிவைத்துள்ளார்கள். உயிரைப் பணயம்வைத்துக் குடிப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லை. கள்ளச்சாராயம் விற்பனை செய்து சிறையில் தண்டனைபெற்று விடுதலை ஆவோருக்கு மறுவாழ்வுக்கு என்று தமிழக அரசு நிதி உதவி செய்கிறது. ஆனால், அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளில் அரசு அங்கீகாரம் செய்துள்ள சரக்குகளைக் குடித்து பாழாய்போகும் மதுப்பிரியர்களுக்கு இந்த அரசு எதுவுமே செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பு ஒருவர் இறந்துபோனால் அவரது பெற்றோருக்கும் மாதந்தோறும் ரூ.3,000 ஆயிரம் குடும்ப நிதி வழங்க வேண்டும். அதுபோல, திருமணத்துக்குப் பிறகு மதுவால் இறந்துபோனால், அந்தக் குடும்பத்துக்கும் குடும்ப நிதி கொடுக்க வேண்டும். பிள்ளைகளைப் படிக்கவைக்கவும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். மதுகுடித்து, குடல் வெந்து அன்றாடம் வேலை செய்ய முடியாமல் நடைப்பிணமாக ஆகிவிட்ட மதுப்பிரியர்களுக்கும் குடும்ப நிதி தர வேண்டும். மது குடித்து, பணத்தை எல்லாம் டாஸ்மாக்கில் விட்டவர்களுக்கு 58 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும். எங்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்துவதாகவும் மறுவாழ்வு முகாம் நடத்துவதாகவும் உத்தரவாதம் கொடுத்துவிட்டு எங்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது. எங்களை முன்வைத்துக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனே நிறைவேற்ற வேண்டும். குடியால் உடல் நலிவுற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை எல்லாம்தான் எங்களுடைய கோரிக்கைகள். இந்தச் சமூகத்துக்கு என்ன தேவை என்று எங்களைவிட வேறு யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, எங்கள் வேட்பாளருக்கு வாய்ப்புக் கொடுத்தால் அவரால் மற்றவர்களைவிடத் தொகுதி வளர்ச்சிக்காக ஓடோடி உழைப்பார்.’’

‘‘தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கிறது?’’

‘‘தேர்தலில் நிற்கிறோம் என்று அறிவித்த உடன், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் ராகவேந்திரதாசன் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக நல சிந்தனை கொண்ட ஏராளமானோர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி. வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை, பிரசாரம்... என்று மதுப்பிரியர்களின் உடல் நலத்தையும் குடும்ப நலத்தையும் முன்வைத்துத்தான் எங்களது ஒவ்வொரு செயல்பாடுகளும் இருக்கும். வேட்புமனு பரிசீலனையின்போது, ‘கொய்யாப்பழம் மாலை’ அணிந்துதான் எங்கள் வேட்பாளர் சென்றார். மதுப்பிரியர்களுக்கு அல்சர், உயர்ந்த... குறைந்த ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி பாதிப்பு இருக்கும். அதைப்போக்க கொய்யாப்பழம் சாப்பிட்டால் நல்லது. ஊறுகாய், எண்ணெய்யில் பொறித்த அயிட்டங்களை எடுத்து உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதுதான் எங்கள் கோரிக்கை. நவம்பர் 5-ம் தேதி, மாமன்னர் ராஜராஜ சோழன் சிலை முன்பாக, ‘மதுபாட்டில்களில் இருந்து சரக்கைத் தலைகீழாக ஊற்றி...’ பிரசாரத்தைத் தொடங்கினோம். தஞ்சை தொகுதியில் மொத்தம் 50 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்தான் எங்களின் வி.ஐ.பி-க்கள். எனவே அந்தக் கடைகள் முன்பு மண்டியிட்டு வணங்கி, மதுப்பிரியர்களுக்கு சால்வை அணிவித்து ஓட்டு கேட்டு வருகிறோம். இந்த அரசு வந்த பிறகு 500 டாஸ்மாக் கடைகளைத்தான் மூடியுள்ளது. ஆனால், சரக்கு விற்பனை அதிகரித்துள்ளது. எனவே அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி மதுகுடிப்போர் மறுவாழ்வு மையங்களை உடனே தொடங்க வேண்டும். இதுதான் இந்தத் தேர்தலில் நாங்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கை.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ