Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தே.மு.தி.க. ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம்... வைகோவை சீண்டும் முத்தரசன் !

டந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த்தை முன்மொழிந்திருக்க கூடாது என வைகோ தெரிவித்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க. ஆதரவு கோரினால் அது குறித்து பரிசீலிப்போம் என முத்தரசன் கூறியுள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியில் ஏக குழப்பங்கள். இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்ல மற்ற கட்சிகள் அதை ஏற்கவில்லை. தி.மு.க. நடத்தும் அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு செல்லலாம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சொல்ல அதை மற்றவர்கள் கேட்கவில்லை. யாருக்கும் ஆதரவில்லை என கூட்டணி கட்சிகள் அறிவித்தபோது, புதுவை, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு என சொன்னது விடுதலை சிறுத்தைகள். விஜயகாந்த்தை முன்மொழிந்திருக்கக் கூடாது என்றும், அது தவறான முடிவு என வைகோ சொல்ல... அதையும் மறுத்து பேசினர் கம்யூனிஸ்ட் தலைவர்கள். இதன் வரிசையில் இன்னுமொரு முரண் இப்போது எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடக்கும் மூன்று தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்த சூழலில் தான் விஜயகாந்த்தை முன்மொழிந்திருக்கக் கூடாது என்ற ரீதியில் வைகோ பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம் என்று  பேசியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன்.
தருமபுரியில் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட  பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பேசிய அதன் மாநில செயலாளர் முத்தரன்,   “இப்போது நடக்க இருப்பது இடைத்தேர்தலே கிடையாது. இந்தியாவிலயே முதன்முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்லி தேர்தலை ரத்து செய்தது தமிழ்நாட்டில்தான். மீண்டும் அதே வேட்பாளர்கள்தான் போட்டியிடுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்  இரண்டு திராவிடக்கட்சிகளும்  மக்களை மதித்து வேறு வேட்பாளர்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால்,  அவர்கள் மாற்றவில்லை. இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்று முடிவெடுத்துவிட்டோம். தே.மு.தி.க எங்களிடத்தில் ஆதரவு கேட்டால் பரிசீலனை செய்வோம்," என பேசினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த்தை முன்மொழிந்திருக்க கூடாது என வைகோ பேசியுள்ள நிலையில், இப்போது விஜயகாந்த்துக்கு ஆதரவு கொடுக்க தயார் என மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- எம்.புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்