Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலாம் பாதுகாத்த பொக்கிஷம்! நிறைவேறிய கலாமின் விருப்பம்

னது சகோதரரின் 100-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பது அப்துல் கலாமின் எண்ணமாக இருந்தது. அந்த நாளில் சகோதரருக்கு வழங்க அக்தர் பேழை ஒன்றை கலாம் பொக்கிஷமாய் பாதுகாத்து வந்தார். கலாம் இறந்து இரு ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அவரின் எண்ணமும், விருப்பமும் நிறைவேறியுள்ளது.

மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முஹம்மது முத்து மீரா மரைக்காயர். தன்னுடன் பிறந்தவர்களில் முத்து மீரா மரைக்காயர் மீது தனி அன்பு செலுத்திவந்தார் கலாம். அவர் மீது உள்ள அளவில்லாத பிரியத்தினால் அவரது 100-வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட விரும்பினார். அந்த நாளில் தனது அண்ணனுக்கு பரிசாக அளிக்க ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்திருந்த அக்தர் பேழையினை பொக்கிஷமாக காத்து வந்தார். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறும் முன்னமே டாக்டர் அப்துல்கலாம் இயற்கை எய்திவிட்டார்.

இந்நிலையில் மறைந்த கலாமின் நிறைவேறாத எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அவரது சகோதரர் முஹம்மது முத்து மீரா மரைக்காயரின் நூறாவது பிறந்த நாள் கலாம் குடும்பத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை நடந்த விழாவில் 100 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்க வந்திருந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் விவேக், கலாமுடன் பணிபுரிந்த விஞ்ஞானிகள் ஒய்.எஸ்.ராஜன், முத்து, கலாமின் உதவியாளர் ஷெரிட்டன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் தனது சகோதரர் மீது கலாம் கொண்டிருந்த அன்பினை பகிர்ந்து கொண்டு முத்து மீரா மரைக்காயரிடம் ஆசி பெற்றனர்.

தொடர்ந்து கலாம் தனது சகோதரின் 100-வது பிறந்த நாளில் அவருக்கு பரிசளிக்க விரும்பிய வாசனைத் திரவியங்கள் அடங்கிய அக்தர் பேழையினை கலாமின் உதவியாளர் ஷெரிட்டன் முத்து மீரா மரைக்காயரிடம் வழங்கி கலாமின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விவேக் ‘‘கலாம் ஐயாவின் வழியை பின்பற்றும் 126 கோடி மக்களில் நானும் ஒருவன். தமிழ் திரையுலகத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு திரையுலகுக்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. ஆனால் இந்தியா முழுமைக்கும் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவர்கள். அவரது பெயரைச் சொல்லி காசு, பணம் சம்பாதிக்க நினைத்தால் அது நடக்காது. ஆனால் பொது சேவை செய்ய முன் வந்தால் பல்வேறு உதவிகள் நாடி வரும். எனவேதான் அவரது எண்ணப்படி 1 கோடி மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதில் 27 லட்சத்து 72 ஆயிரம் மரங்கள் இதுவரை நடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவேன். கலாமின் பேரன்களும் அந்த பொதுச்சேவைகளில் ஈடுபட்டு ஐயாவின் பெயரை, புகழை மேலும் நிலைக்க செய்ய வேண்டும்’’ என்றார்.

பின்னர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மரக்கன்றுகளை நடிகர் விவேக், தொழிலதிபர் சந்தோசம் ஆகியோர் நட்டனர். இந் நிகழ்வுகளில் மரைக்காயரின் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள், சேக் சலீம், சேக் தாவுத், பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் முரளிதரன், தமிழன்னை அறக்கட்டளை நிர்வாகி கராத்தே பழனிச்சாமி, மாவட்ட த.மா.கா தலைவர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, சோ.பா.ரங்கநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

- இரா.மோகன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ