Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருகும் விதை நெல்... மடியும் விவசாயிகள்... தொடரும் டெல்டா சோகம் !

காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று விவசாயிகளின் உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரிநீரை கர்நாடகா தர மறுத்ததால் குறுவை, சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்க முடியாத அவல நிலை இந்த ஆண்டு உருவானது. 100 நாட்கள் கால தாமதமாக தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்ய முடியாத சூழல் உருவானதால், நேரடி நெல் விதைப்பு செய்தார்கள். ஆனால் இதையும் காப்பாற்ற முடியாத நெருக்கடியான நிலையில் தவிக்கிறார்கள் விவசாயிகள்.

மேட்டூர் அணையில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் இருப்பதால் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிதான் தண்ணீர் திறக்கப்படுகிறது. 10  ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்தால் தான் ஆறுகளில் இருந்து வாய்க்கால்களுக்கு ஓரளவுக்காவது தண்ணீர் வந்து சேரும். தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தொடர்கிறது. மழையும் இல்லை. நேரடி விதைப்பு செய்த விதைநெல் கருகியதால் வேதனை அடைந்த விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வறட்சியில் முளைத்து வந்த நெல் பயிர்கள் கருக துவங்கியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் கோவிந்தராஜ் எனும் விவசாயி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ரெகுநாதபுரம் நுணாகாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், வறட்சி குறித்த அச்சத்தோடே வாழ்ந்து வந்துள்ளார் என்கிறார் அவரது மகன் முருகதாஸ்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய முருகதாஸ், ‘’4 ஏக்கர்ல நேரடி நெல் விதைப்பு செஞ்சிருந்தோம். ஒன்றரை மாசமாகியும் எங்க ஊர் வாய்க்கால்ல தண்ணீர் வரவே இல்லை. விதைப்பு செஞ்ச 15-ம் நாள் லேசா மழை பேஞ்சுது. அதுல கொஞ்சம் விதைகள் முளைக்க ஆரம்பிச்சுது. ஆனா கடும் வறட்சியினால் கடந்த 10 நாளா அதுவும் கருக ஆரம்பிச்சிடுச்சு. இதனால் எங்க அப்பா மன உளைச்சல்ல புலம்பிகிட்டே இருந்தாரு. ரொம்பவே மனசு உடைஞ்சுப் போனதால தன்னோட உயிரையே மாய்ச்சிக்கிட்டாரு.என்றார்.

திருவாரூர் கோட்டூர்  அருகேவுள்ள ஆதிச்சப்புரத்தைச் சேர்ந்த விவசாயி அழகேசன், 2 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்த விதைநெல் முளைக்காததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பால் மரணமடைந்தார். அழகேசனின் குடும்பம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊருமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பாக அவரது பக்கத்து தோட்ட விவசாயி ஜம்புலிங்கத்திடம் பேசினோம். ‘’அழகேசனுக்கு சொந்த நிலம் கிடையாது. அதிக வட்டிக்கு கடன் வாங்கி, 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, குத்தகைக்கு புடிச்ச 2 ஏக்கர் நிலத்துலதான் நேரடி நெல் விதைப்பு செஞ்சிருந்தார். உழவு, விதைநெல், களைக்கொல்லினு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு பண்ணிட்டாரு. தண்ணீர் இல்லாம விதைநெல் முளைக்காததால, கடன்களை எப்படி அடைக்கபோறோம்னு ரொ ம்பவே பயந்து போயிட்டாரு. மழையும் இல்லாததால நம்பிக்கை இழந்து கவலை அதிகமாகி மாரடைப்புல இறந்துப் போயிட்டார். ஆத்துல முழுமையா தண்ணீர் வராததால, இந்த பகுதி முழுக்கவே வறட்சி தாண்டவமாடுது. நிலத்துல போட்ட விதைநெல் எல்லாம் மண்ணோடு மண்ணா செத்துக்கிட்டு இருக்கு.” என விரக்தியோடு பேசினார்.

இந்த இரு சம்பவங்களும் ஏற்படுத்திய சோகம் அடங்குவதற்குள் மூன்றாவதாக அடுத்த துயரச் சம்பவம் தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பந்துருத்தியில் நவம்பர் 5-ம் தேதி நிகழ்ந்தது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ்கண்ணா 3 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்திருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் முளைக்காததால், மன உளைச்சல் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டு ராஜேஷ்கண்ணா மரணமடைந்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுகுமாறன், ‘’உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கணும். டெல்டா மாவட்டங்கள்ல பல லட்சம் ஏக்கர்ல நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டிருக்கு. விவசாயிகள் எல்லாருமே வேதனையில தவிக்கிறாங்க. அடுத்தடுத்து துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசு போர்கால நடவடிக்கையில இறங்கணும். உடனடியா கர்நாடகாவுல இருந்து காவிரி தண்ணீரை பெற்றுத் தரணும். இல்லைனா நிலைமை இன்னும் மோசமாகும்," என்றார்.  

நாட்டுக்கே உணவளிக்கும் டெல்டா விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. தண்ணீர் இல்லாததால் மூன்று விவசாயிகள் அடுத்தடுத்து தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். தர வேண்டிய தண்ணீரை தராமல் கர்நாடகாவும், தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய மத்திய அரசு அதை பற்றி கவலை கொள்ளாமலும் இருப்பது தான் கொடுமை.

- கு.ராமகிருஷ்ணன்

படங்கள் : த.சதீஷ்குமார், ம.அரவிந்தன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ