Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீயோடு கலந்த தீப்பொறி....!

 

 

அவர் அமைச்சராக இருந்ததில்லை, எம்.பி, எம்.எல்.ஏ. பதவி என்ன,  ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட போட்டியிட்டதில்லை.

தலைமைக் கழக பேச்சாளர் என்ற தகுதியைத்தவிர வேறு எந்த பதவியையும் கட்சி கொடுத்ததில்லை. ஆனால் அவரை தெரியாத தமிழர்கள் எவருமில்லை.
அவர்தான் தீப்பொறி ஆறுமுகம்....!

கடந்த ஐந்தாம் தேதி இரவு அவர் மரணமடைந்ததாக வந்த தகவல், கட்சி வேறுபாடில்லாமல் அனைவரையும் அசைத்துவிட்டது. அவருடைய மேடைப்பேச்சு சிலருக்கு பிடிக்கலாம், இன்னும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம், ஆனால் தீப்பொறி ஆறுமுகத்தை அனைவருக்கும் பிடிக்கும்.

மைக்கை ஒரு கையால் இறுக பற்றிக்கொண்டு எந்த குறிப்புமில்லாமல் நக்கலும் நையாண்டியும் கலந்து அவ்வப்போது இரட்டை அர்த்தத்துடன் உள்ளூர் முதல் உலக அரசியல் வரை அருவிபோல அடி வயிற்றிலிருந்து அவர் பேசும் ஸ்டைல் வேறு யாருக்கும் வராது.

1970 களிருந்து மேடையில் பேசி வரும் திமுக தலைமைக்கழக பேச்சாளர்களில் தீப்பொறியார் ஒருவர்தான் எஞ்சியிருந்தார். தற்போது அவரும் மூச்சை நிறுத்திவிட்டார். திமுக மீதான மனவருத்தத்தில் இடையில் சில காலம் அதிமுகவுக்கு சென்று வந்தார். அங்கு இருக்க முடியவில்லை.

மீண்டும் திமுகவுக்கு வந்தவருக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் மேடை வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டது. ஆனால் அணி மாறியதால் அவருடைய ரசிகர்கள்தான்  கொஞ்சம் எரிச்சலானார்கள். 

 

கடந்த வருடத்திலிருந்து அவர் உடல் நிலை மோசமாக தொடங்கியது. உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்தவருக்கு ஒரு கட்டத்தில் உடல் மிகவும் நலிவுற்றது. இவரை மேடையில் காண முடியாததால், கட்சியினர் அவரை மறக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்த தீப்பொறியாரின் பேட்டி ஜூனியர் விகடனில் வெளியானது. இந்த பேட்டிக்கு பின்புதான் கட்சியினர் அவரைக்காண மருத்துவமனைக்கு படையெடுக்கத் தொடங்கினர். மு.க.ஸ்டாலினும் வந்து பார்த்தார்....

அவரின் கடைசிப் பேட்டியை எடுத்த விகடன் நிருபர், அப்போது அந்த சூழலை பற்றி கூறும்போது, "ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி இருக்கும். அவரைக்காண  தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். கட்டிலில் படுத்துக்கிடந்தார் தீப்பொறி. வலது கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது. விரல்களை தேய்த்துக்கொண்டே இன்னொரு கையில் கலைஞரின் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார்.

 

இறுக்கமாக கட்டியிருந்த கட்சி வேட்டியை சரிசெய்துகொண்டு . ‘வணக்கம் தம்பி உட்காருங்கள்’ என்று  தன் கம்பீரமான குரலை வரவழைக்க சிரமப்பட்டார். பேச ஆரம்பிக்கும்போதே மனைவியை அழைத்து, ‘கொஞ்சம் போய் சுடுதண்ணி வாங்கிட்டு வாமா’ என்று  வெளியே அனுப்பினார் . ‘இந்த நிலைமையில் என்னைப் பேச விடமாட்டாள், அதான் நைசா வெளிய அனுப்பிட்டேன்‘ என்றார். 

நான் கேட்கும் கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இல்லாமல் படீர் படீரென்று பதில் சொல்லிக்கொண்டே வந்தார். மறக்க முடியாத முக்கிய நாட்களை சற்று யோசித்து யோசித்து சிரித்துக்கொண்டே தெளிவாய் சொன்னார். தீப்பொறியின் குரல் தொய்வில்லாமல் இருந்தாலும் அவரது கண்கள் ஒளியிழந்து, சொல்ல முடியாத ஒரு ஏக்கத்தை நம்மிடம் சொல்லிக்கொண்டிருந்தது. அவர் மருந்துவமனையில் இருந்த சமயத்தில்தான் சட்டமன்றத்துக்குள் நுழையமுடியாமல் போரடிக்கொண்டிருந்த ஸ்டாலின், வெளியூர் நிகழ்ச்சிகளில்  பிசியாகவே இருந்தார். இதையெல்லாம் நாளிதழ்களில் தெரிந்துகொண்டவர், இந்த சூழ்நிலையில், உடல் நலமில்லாமலிருக்கும் தன்னை  ஸ்டாலின் வந்து  பார்ப்பாரா என்ற ஏக்கம் அவரிடமிருந்தது. கட்சியில்  அந்தளவுக்கு முக்கியமான ஆளா நான், என்று இடையில் தன்னை பற்றி கமாண்ட் அடித்துக்கொண்டாலும்  திமுகவை கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

 

அவரிடம் பேட்டி எடுத்து முடித்தவுடன்  தன் மகள், மருமகன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். பிறகு தன் மகள் வழி பேத்தியை கொஞ்சிக்கொண்டிருந்தார். பேட்டி கொடுத்த பின் அவர் ரொம்ப உற்சாகமாகிவிட்டார். ‘உடம்பை பார்த்துக் கொள்ளுங்க ஐயா’, என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம். நாங்கள் வெளியே வரும்வரை காத்திருந்த தீப்பொறியாரின் மனைவி சங்கரவடிவு. ‘அவர் உடல்நலமில்லாமல் இருக்கார் யாரையும் உணர்ச்சிவசப்பட்டு கூடக்குறையா பேசியிருந்தா போட்டுடாதீங்க’  என்றார். ‘அவர் அப்படி எதுவும் பேசவில்லை’ என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன்.

சில நாட்கள் கழித்து தீப்பொறி ஆறுமுகத்தின் நம்பரிலிருந்து கால் வந்தது . ‘ஜூவியில் எனது பேட்டியை படித்தேன் மிகவும் அருமையாக வந்துள்ளது, 'ஸ்டாலின் வந்து என்னை பார்ப்பார்' என்ற தலைப்பை படித்தவுடனே எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது, தளபதி என்னை பார்க்க கண்டிப்பாக வருவார்’ என்று  கூறினார் .

 

அந்த கட்டுரை வெளியான இரண்டு நாளிலேயே மதுரை மித்ரா மருத்துவமனைக்கு வந்து  தீப்பொறியை ஸ்டாலின் சந்தித்தார் . ஸ்டாலின் தீப்பொறியை சந்தித்த பிறகு மீண்டும் தீப்பொறியை சந்தித்தோம். ஸ்டாலின் வருவதால் அவரை சிறிதுநேரம் வேறு அறைக்கு மாற்றியிருந்தனர். ஏசி குளிர் தாங்கமுடியவில்லை என்று பழைய ரூமிற்கே வந்துவிட்டார். ஸ்டாலின் வந்துசென்ற பிறகு, தீப்பொறியிடம் புதிய உத்வேகம் தெரிந்தது. 

என் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, "இனி என் கட்டை நிம்மதியாக வேகும்" என்று கண்ணீர் வடித்தவர், தொடர்ந்து, "ஸ்டாலின் வந்து பார்ப்பார்  என்ற ஜூவி கட்டுரை வெளியான இரண்டு நாளிலேயே வந்துவிட்டார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம் என் ஆவலை எழுதி உதவி செய்ததற்கு  உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் மிக்க நன்றி" என கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு  சொன்னார். "மேடையில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த பாமர மக்களின் பேச்சாளனுக்கு விகடன் அளித்த மரியாதைதான் அது" என்று சொல்லி வந்தோம்.

ஸ்டாலின் வந்து சென்ற பின் கட்சியினர் அடிக்கடி வந்து பார்க்கத் தொடங்கினார்கள் இதைப்பார்த்து அவர் மனம் மகிழ்ந்தாலும், உடல் சீராகவில்லை. சரியாக இரண்டு மாதங்கள்தான் அவரால் உயிர் பிழைத்திருக்க முடிந்தது. இந்த நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.

தகவல் கேள்விப்பட்டதும் பொதுமக்கள், கட்சியினர் ஜெய்ஹிந்துபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அன்று எல்லோரின் பேசு பொருளாக தீப்பொறியாரே இருந்தார். ஆறாம் தேதி தன்னுடைய வேலைகளை ஒத்திவைத்து விட்டு  மதுரை வந்து அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். அன்று மாலை கீரைத்துறை மயானத்தில் தீயோடு தீப்பொறி கலந்தது.

- செ.சல்மான். சே.சின்னத்துரை.
படங்கள் : வீ.சதீஷ்குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close