Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாவட்டத்துக்கு இவ்வளவு தாங்க...!' அதிகாரிகளுக்கு 'வரி' போட்டாரா அமைச்சர்?

சென்னை, கோவை, சேலம் ஆகிய மூன்று மாவட்ட வணிகவரித்துறையில் பணியாற்றும் முக்கியமான சில உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் செலவுக்காக குறிப்பிட்ட தொகை வரை வசூலித்துத் தர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ சீனிவேல், மரணமடைந்ததால் அங்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் பிரசாரத்துக்குச் செல்லவில்லை. இருப்பினும் இந்த 3 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளாடு களமிறங்கியுள்ளனர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர்.

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் இருப்பதால் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கோடு தி.மு.க.வினரும் களமிறங்கியுள்ளனர். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் கடந்த முறை அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பணத்தை அள்ளி வீசியதால் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இடைத்தேர்தலிலும் அதே வேட்பாளர்கள், அ.தி.மு.க.விலும், தி.மு.கவிலும் களமிறங்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில். அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொகுதிக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தின் கஜானாவை நிரப்பும் துறைகளில் முக்கியமான ஒரு துறையாக வணிகவரித்துறை உள்ளது. இந்த துறையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் தேர்தல் செலவுக்கு என்று குறிப்பிட்ட தொகையை வசூலித்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக அந்த துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வணிகவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் எங்கள் துறையின் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு வரிவசூல் மற்றும் துறையின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அலுவலர்களுக்கு வாய்மொழியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் நம்முடைய துறையில் முக்கியமான பொறுப்பில் 30 உயர் அதிகாரிகள் உள்ளனர். இதில் 22 அதிகாரிகள் பணியாற்றும் இடங்களில் வசூல் மழை கொட்டுகிறது. இதனால் அவர்கள் வசூலுக்கு ஏற்ப தலா 10 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு வழங்க வேண்டும். வசூல் குறைவாக உள்ள 8 அதிகாரிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த பணத்தை 7ம் தேதிக்குள் (இன்று) ஏற்பாடு செய்ய வேண்டும் என்று துறையின் முக்கியமானவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட வணிகவரித்துறையில் சில உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்ததோடு தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர். வேறு வழியின்றி அந்த உயர் அதிகாரிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். குறிப்பாக சென்னை, கோவை, சேலம் ஆகிய வணிகவரித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளிடமிருந்து 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வணிகவரித்துறையில் நடக்கும் அடாவடி வசூல் குறித்து யாரிடமும் முறையிட முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

இடைத்தேர்தலை தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு அவர்கள் வரியாக செலுத்திய தொகை முழுவதும் திரும்ப கொடுக்கப்படும். இது ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் கோடி வரை பணம் வணிகர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையிலும் 10 சதவிகிதம் கமிஷன் தங்களுக்கு வேண்டும் என்று துறையின் முக்கியமானவர்கள் வணிகவரித்துறை உயர்அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வணிகவரித்துறையில் நிலவும் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் வசூலில் மட்டும் அந்த தரப்பு ஆர்வம் காட்டுகிறது" என்றனர்.

இதுகுறித்து வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் பேசினோம். "வணிகவரித்துறையிடமிருந்து தேர்தல் செலவுக்காக பணம் வசூலிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மீட்டிங்கில் வெளிப்படையாக யாராவது பணம் கேட்பார்களா. மீட்டிங் எப்போது, எங்கே நடந்தது. தற்போது நான் தேர்தல் பணியில் உள்ளேன். பணத்தை யார் வசூலிக்கச் சொன்னது என்பதை என்னிடம் சொல்லுங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.

நமது நிருபர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close