Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தமிழகத்து நேரு மாமா’ குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா!

 

கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம். குழந்தைகள் உலகம்தான் அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம். அதில் வண்டாகச் சுற்றிவந்து, தேன் கவிதைகளைக் குழந்தைகள் நெஞ்சில் தெளித்தவர்; அழகழகான கவிதைகள், பாடல்களுக்குச் சொந்தக்காரர் அழ.வள்ளியப்பா. அதுவும் இன்று பல குழந்தைகள் தொலைக்காட்சியே கதி எனக் கிடக்கும் நிலையில் இவரை நினைவுகூர்வது முக்கியம்.

இவர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் என்ற ஊரில், 1922-ம் ஆண்டு நவம்பர் ஏழாம் நாள் பிறந்தவர். இவரது பெற்றோர், அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி. தன் ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுதான் கல்வி கற்றுவந்தார். பள்ளிக்குப் போகும் வழியெல்லாம் பறந்து திரிந்த பறவைகளோடு பாடிப் பரவசம் அடைந்தவர். தனது 13-ம் வயதிலேயே கவிதை இயற்றும் திறன் கைவசப்பெற்றார்.

                       லட்டும் தட்டும்

                      வட்ட மான தட்டு.
                      தட்டு நிறைய லட்டு.
                      லட்டு மொத்தம் எட்டு.

                      எட்டில் பாதி விட்டு,
                      எடுத்தான் மீதம் கிட்டு.

                      மீதம் உள்ள லட்டு
                      முழுதும் தங்கை பட்டு
                      போட்டாள் வாயில், பிட்டு.

                      கிட்டு நான்கு லட்டு;
                      பட்டு நான்கு லட்டு;
                      மொத்தம் தீர்ந்த தெட்டு
                      மீதம் காலித் தட்டு!

என்ற பாடலில் வரும் லட்டின் இனிப்பும் தங்கையின் அன்பையும் அழகாகச் சொல்கிறது.

                அணிலே, அணிலே ஓடி வா
                அழகு அணிலே, ஓடி வா.

                கொய்யா மரம் ஏறி வா.
                குண்டுப் பழம் கொண்டு வா.

                பாதிப் பழம் உன்னிடம்;
                பாதிப் பழம் என்னிடம்;

                கூடிக் கூடி இருவரும்
                கொறித்துக் கொறித்துத் தின்னலாம்!

என, அணிலை நண்பனாகப் பாவிக்கும் லாகவம் குழந்தைக் கவிஞருக்கு மட்டுமே சாத்தியமானது.

1940-ல் சென்னப்பட்டணம் வந்த கவிஞர், சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளர் பணியில் சேர்ந்து, பிறகு சக்தியில் எழுத ஆரம்பித்தார். இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். 1941-ல் இந்தியன் வங்கியில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்க, அதில் இருந்துகொண்டே கவிதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். வங்கிப் பணி ஓய்வுக்குப் பின்,1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், 1983ல் இருந்து 1987 வரை கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.

 

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் 'குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் குழந்தைகளுக்கான தரமான நூல்கள் வெளிவர வள்ளியப்பாவே காரணம்.

1981-ல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் அதே தலைப்பில் சொற்பொழிவாற்றினார். குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்டவர், 1982-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினால் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்று கௌரவிக்கப்பட்டார். குழந்தைகளுக்காக இவர் 50-க்கும் மேலான நூல்களையும், ஆயிரத்துக்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். 'நம் நதிகள்' என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது பெமைக்குரியது.

ரோஜாச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.

குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். இந்தச் சாதனையை குழந்தைகள் உலகம் என்றும் கொண்டாடும்.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ