Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’இதுதான் இந்தியா...! இவர்கள்தான் இந்தியா...!’ - அசத்தல் ஓவியங்கள் (ஆல்பம்)

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

ம்மால் நிஜத்தில் காண முடியாத பல்வேறு விஷயங்களையும் தங்கள் கற்பனைத் திறத்தின் மூலம் வெளிப்படுத்தும் திறமை ஓவியர்களுக்கு உண்டு. இருப்பதை உள்ளபடியே வரைவது ஒரு சில ஓவியக் கலைஞர்களின் திறமை. மற்றும் சிலர் தேவைக்கேற்ப இருப்பதை மாற்றி வரைந்து அந்த ஓவியங்களுக்கு மேலும் மெருகேற்றி விடுவர். இயற்கை சார்ந்த விஷயங்களை வரைவது ஒரு சில கலைஞர்களின் விருப்பம். ஆனால் இன்று வளர்ந்து வரும் கலைஞர்கள், திரைப்படப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற தெரிந்த முகங்களை வரைவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கிழக்குக் கடற்கரைசாலை, முட்டுக்காட்டில் அமைந்துள்ள வரலாற்று அருங்காட்சியம் ஆன தக்‌ஷின் சித்ராவில் பழங்கால வீடுகளின் வரலாறு, அந்த வீடுகளில் உபயோகிக்கபட்ட பொருட்கள் என அனைத்தும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும். அங்கு ஆண்டு முழுவதும் ஓவியர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலர், தங்களின் படைப்புத் திறமைகளை காட்சிக்கு வைக்கிறார்கள். கண்காட்சியை நடத்த தக்‌ஷின்சித்ரா, எந்தவிதமான கட்டணமும் வாங்கப்படுவதில்லை என்பது அந்த அருங்காட்சியகத்தின் கூடுதல் சிறப்பு. 

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

தமிழகத்துக்கு என தனித்தன்மை எப்போதும் இருக்கும். அந்தந்த இடத்துக்கு ஏற்ப பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் ஒரு சிலரே. மக்கள் நாகரீகம் என்ற பெயரில் தங்களின் சொந்த அடையாளத்தையே இழந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியங்களை பின்பற்றும் மக்களைத் தொடர்ந்து கவனித்து, அவர்களை புகைப்படம் எடுத்து, அவற்றை ஓவியங்களாக மாற்றி இன்னும் அழகுபடுத்தியிருக்கிறார்கள் ஓவியக் கலைஞர்கள் அந்தோணி ராஜ் மற்றும் ராமு.

அவர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி இந்தியாவின் பழமையை “Traditions of Tamilnadu" என்ற தலைப்பில் அமைத்திருக்கிறார்கள். நவம்பர் 3-ம் தேதி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சி வரும் 30-ம் தேதி வரை தக்‌ஷின் சித்ராவில் நடைபெறும். அவர்கள் வரைந்த ஓவிங்களைப் பார்த்துவிட்டு, ஓவியக் கலைஞர்களாக அவர்கள் மாறியதற்கான பின்னணி பற்றியும், அவர்கள் வாழ்க்கை பற்றியும் தெரிந்து கொள்ள, அவர்களை நேரில் சந்தித்தோம்..

அந்தோணி ராஜ், ராமு

அந்தோணி ராஜ்

“சீர்காழி அருகே இருக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். பள்ளியில் பாடங்கள் படிப்பதைவிட வரைவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பாடங்கள் படிக்கும் நேரத்தில்கூட ஓவியங்கள்தான் வரைந்து கொண்டிருப்பேன். நண்பர்களுக்கு ஓவியங்கள் வரைந்து காட்டி, அதன் மூலம் கதைசொல்வது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். பள்ளியில் மற்ற ஆசிரியர்களைவிட 'ட்ராயிங்' டீச்சரைத் தான் எனக்குப் பிடிக்கும். அவர் வகுப்பை மட்டும் ஆர்வத்தோடு கவனிப்பேன். 12-ம் வகுப்பு முடித்த பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டியது இல்லை என்ற சந்தோஷம்தான் அதிகம் இருந்தது. என் பள்ளி ட்ராயிங் டீச்சர் என்னை, சென்னையில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொன்னார். அதன்படி நானும் கல்லூரி சேர முயற்சி செய்து கல்லூரியில் சீட்டும் வாங்கினேன். அப்போது ஒருநாள் பல கலைஞர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மார்க் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, என் நண்பர் ஒருவர் மார்க்கை அவருக்கு நன்றாக தெரியும் என்றும், கூடிய சீக்கிரத்தில் அறிமுகம் செய்து வைப்பதாகவும் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே ஒரே வாரத்தில் அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிரபலங்களை வரைவதை விட நம்மைச் சுற்றி இருப்பவையே அழகு மிகுந்தது, அவற்றை இன்னும் அழகாக்க வேண்டும் என்று நினைத்து, மனிதர்களை அவர்களின் பாரம்பரியத்தோடு, அடையாளம் மாறுபடாமல் புகைப்படம் எடுத்து அவர்களை வரையத் தொடங்கினேன். அழகு என்பது வெள்ளையாக இருப்பதாலோ அதிகம் வசதியாக இருப்பதாலோ மட்டும் கிடைத்துவிடாது. நாம் வைத்திருக்கும் பொருட்களையும், சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்திருப்பதில் தான் இருக்கிறது என அவர்களை வரையும்போது தான் எனக்குப் புரிந்தது” என்றார் அந்தோணி ராஜ்.

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

ராமு

“காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் பிறந்தேன். அங்கு தான் பள்ளிப் படிப்பையும் முடித்தேன். பள்ளிக்கூட காலத்தில் இருந்தே வரைவது தான் எனக்குப் பிடித்த ஒன்று. என் அண்ணன் வரைவதைப் பார்த்து வரைவதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து நானும் அதேபோல் வரைய வேண்டும் என்று முயற்சித்தேன். பின்பு பள்ளி முடிந்த பிறகு கும்பகோணத்தில் பயிற்சி எடுத்து தேர்வு எழுதினேன், அதன்படி எனக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் சீட் கிடைத்தது. பிரபலமானவர்களை வரைவதில் எனக்கு ஈடுபாடு இல்லை, எனக்குப் பிடித்தது, சிறுவயதில் இருந்து நான் பார்த்துப் பழகியவர்களை வரைய ஆரம்பித்தேன். என்னைச் சுற்றியுள்ள, எனக்கு சம்பந்தபட்ட விஷயங்களைத் தான் வரைவதில் ஆர்வம் செலுத்தினேன். இதுபோன்ற ஓவியங்கள் பெரிதாக விற்கவில்லை என்றாலும், அவற்றை வரையும்போது எனக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஓவியங்கள் விற்காத சமயங்களில், 'வொர்க் ஷாப்' போன்ற வகுப்புகள் எடுத்து செலவுக்கான பணத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும்” என்றார் ராமு.

கும்பகோணத்தில் பயிற்சி எடுக்கும்போதே, இவர்கள் இருவரும் நண்பர்கள். 2014-ம் ஆண்டிலும் தக்‌ஷின் சித்ராவில் தங்களது ஓவியக் கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்கள் வரையும் ஓவியங்களின் அழகைப் பாராட்டி வெளிநாட்டு மக்கள் அதை ஆர்வத்துடன் பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். ஆனால் நம்முடைய பாரம்பரியத்தை பார்த்து ரசிக்கக் கூட நமக்கு நேரம் இருப்பதில்லை. வளரும் ஓவியக் கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரத்தை உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்பு நம்மிடமே உள்ளது.

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்