Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்த அரசால் அவினாசி– அத்திக்கடவு திட்டம் நிறைவேறாது'  

அவினாசி – அத்திக்கடவு திட்டம் தற்போதுள்ள தமிழக அரசால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவினாசி - அத்திக்கடவு திட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக 7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டம். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கொடுப்பதும் ஆட்சிக்கு வந்தப்பின் மறந்து போவதும் வாடிக்கையாக போனது. விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் குடிதண்ணீருக்கும் இந்த திட்டம் தேவையினால் அனைத்து மக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். இந்த திட்டத்துக்காக போராடாத போராட்ட முறைகளே கிடையாது. துண்டு பிரசுரம், உண்ணாவிரதம், நடைப்பயணம், மொட்டையடித்தல், பொங்கல் வைத்தல், வாகன பேரணி, கடையடைப்பு என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்த உண்ணாவிரதம் போராட்டம் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றபோது, அவினாசி - அத்திக்கடவு திட்டத்தால் பயன்பெறும் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்ததது. அதிமுக அரசு போராட்டத்தின் தீவிரதத்தை உணர்ந்தும், சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டும் கடந்த ஆட்சியின் முடிவில் சட்டமன்றத்தில் அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு ஆரம்பக்கட்ட கள ஆய்வை மேற்கொள்ளுவதற்காக 3 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணையை வெளியிட்டது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றப் போவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதிமுக மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்றது.
 
கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் திட்டத்துக்காக 3.27 லட்சம் கோடி நிதி எந்தளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது, நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக பொதுப்பணிதுறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய நீர்குழுமத்துக்கு நீர்பாசன திட்டமாக மாற்றி அனுப்பப்பட்டு அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. தற்போது வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடுத்த வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டம் சமந்தமான அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் அவினாசி – அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து அனுமதி பெறவே 17 மாதங்கள் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து  பெறப்பட்ட தகவலில் 2013-ம் ஆண்டு மத்திய அரசு அவினாசி - அத்திக்கடவு திட்டத்திலுள்ள தவறுகளை திருத்தி அனுப்பும் படியும், திட்டம் தொடர்பான சில விளக்கங்களை கேட்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் தொடர்பான திருத்திய கருத்துரையை மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. மத்திய அரசின் கடிதத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இத்திட்டத்துக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டப் பட்டியலில் இருந்து தற்போது அவினாசி – அத்திக்கடவு திட்டம் நீக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் திருத்திய கருத்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
அவினாசி – அத்திக்கடவு திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி சட்டசபையிலும், நீதிமன்றத்திலும், விவசாயிகளிடமும் மற்றும் பொதுமக்களிடமும் உண்மைக்கு புறம்பான தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதிமுக தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக செயல்பட்டு அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை அதிமுக நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் காலந்தாழ்த்தி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்துக்குரியது. அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் விவசாயிகளும், பொதுமக்களும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ