Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' அம்மா நலம் விரும்புகிறவர்களுக்கு...!'  - எம்.நடராஜனின் ’நல்ல காலம்’ புத்தகம்

மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ம.நடராஜன். ' முதல்வரின் உடல்நிலை குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாகவே இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் நடராஜன்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த 47 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்போலோ நிர்வாகமும், கடந்த பத்து நாட்களாக எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. ' எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பது, முதல்வர் கையில்தான் உள்ளது' என மருத்துவமனை நிர்வாகி உறுதிபடத் தெரிவித்துவிட்டார். தினம்தோறும் மருத்துவமனை வாயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகள், வி.ஐ.பிக்களின் வருகை என அப்போலோ பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. இந்நிலையில், ' திருக்குவளையே திரும்பிப் பார்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறது ம.நடராஜனின் தமிழரசி அச்சகம். ' அம்மா நலம்...அம்மா நலம் விரும்புகிறவர்களுக்கு' என்ற உள்ளடக்கத்தோடு அந்த புத்தகம் வெளியாகியிருக்கிறது. 

அந்தப் புத்தகத்தில், ' முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிவைத்தே பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, ' 2009-ம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடல்நிலை குறித்து அரசு சார்பில் அறிக்கை வந்ததா? என்னவிதமான உண்மை நிலை அப்போது தெரிவிக்கப்பட்டது? 11.2.2009 அன்று வெளியான ஆங்கில ஏட்டில், ' மருத்துவமனையே தலைமைச் செயலகமாக மாறிவிட்டது' என விவரிக்கப்பட்டிருந்ததே...அதேபோல், 2002 முதல் 2003 நவம்பர் வரையில் சிகிச்சையில் இருந்த முரசொலி மாறன் குறித்து என்ன தகவல்கள் வெளியில் சொல்லப்பட்டன? மாறனின் இறுதி நாட்களில் அவருடைய கைரேகைகள் பெறப்பட்டதாக செய்திகள் வெளியானதே? அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் யாரும் மறுக்கவில்லையே...? தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் வெளிநாட்டில் பெறும் சிகிச்சைகள் குறித்து எப்போதாவது தெரியப்படுத்தியதுண்டா?' என விரிவாகவே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ' 1984-ம் ஆண்டு முதல்வர் எம்.ஜி.ஆர் தீவிர சிகிச்சையில் இருந்தபோது, அவருடைய உடல்நிலை குறித்து அவதூறாகப் பேசியவர்தான் கருணாநிதி. அப்போது கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்தார். அந்த தேர்தலில் 133 தொகுதிகளில் வென்று, 37 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் பதவியில் அமர்ந்தார். அப்போதும், ' சரியாக பேச முடியாத ஒருவர், எப்படி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்' என கருணாநிதி விமர்சனம் செய்தார். இதையடுத்து, ஆளுநர் குரானா முன்னிலையில் மீண்டும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அடுத்தவரின் உடல்நலக் குறைவை எப்படியெல்லாம் கருணாநிதி கேலி செய்வார் என்பதற்கான உதாரணங்கள் இவை' என பழைய சம்பவங்களும் தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரையின் தொடக்கத்தில், ' வருந்தாதே ஏழை மனமே...வரும் காலம் நல்ல காலம்' என்ற ஜெயலலிதாவின் வரிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

நடராஜனின் புத்தகம் குறித்து, நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வரின் கோபப் பார்வையில் இன்றளவும் நடராஜன் இருக்கிறார். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, கார்டன் வட்டாரத்தில் இருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பில் உள்ளன. முதல்வரின் குட்புக்கில் இடம்பெறுவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. தற்போது மருத்துவமனையில் முதல்வர் இருக்கிறார்.

இந்த நேரத்தில் அரசியல்ரீதியான காய் நகர்த்தல்களை அவர்தான் செய்து வருகிறார் என்ற பேச்சும் உள்ளது. சின்னம்மாவின் ஆதரவில்தான் இத்தனையும் செய்கிறாரா என்று தெரியவில்லை. அதிகாரத்துக்குள் வருவதைவிடவும், பின்னால் இருந்து இயக்குவதையே அவர் விரும்புகிறார். முதல்வர் பூரண நலம் பெற்று கார்டன் திரும்பும்போது, ' தன் மீதான கோபம் குறையும்' என உறுதியாக அவர் நம்புகிறார். இதுபோன்ற சிறு புத்தகங்கள் மூலம், 'முதல்வர் நலனில் தமக்கு மிகவும் அக்கறையுண்டு' என்ற தோற்றத்தை வெளிப்படையாகவே காட்டுகிறார். இந்தப் புத்தகம் தற்போது இரண்டாம் பதிப்புக்காக தயாராகி வருகிறது" என்றார். 

முதல்வரின் மனதைக் கவர அமைச்சர்களின் யாகம் ஒருபுறம் இருந்தாலும், கருணாநிதி எதிர்ப்பு அரசியலையே புத்தகமாக்கி முதல்வரின் பார்வைக்காக காத்திருக்கிறார் ம.நடராஜன். 

- ஆ.விஜயானந்த் 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close