Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதல்வர் சுயநினைவோடு வேட்பாளரை அறிவிக்கவில்லை...!’ செந்தில்பாலாஜிக்கு எதிராக தி.மு.க. அஸ்திரம்


கரூர் : "முதல்வரின் கைரேகை போர்ஜரி. இது முதல்வர் சுயநினைவோடு செந்தில்பாலாஜியை வேட்பாளராக அறிவித்து, கைரேகை வைக்கலை. அதனால்,'செந்தில்பாலாஜியை வேட்பாளராக அங்கீகரிக்கக்கூடாது" எனச்சொல்லி தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்த கரூர் தி.மு.க.வினர், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் தஞ்சாவூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்பு மனு உறுதி படிவத்தில், முதல்வரின் கையெழுத்துக்கு பதில் கை நாட்டு வைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில்,அவர் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷன் அளித்த 'ஃபார்ம் பி' யிலும் கையெழுத்து போடவில்லை.

இந்நிலையில், 'அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவில்,தேர்தல் கமிஷன் கொடுத்த வேட்பாளர் அங்கீகாரம் ஃபார்ம் ஏ வில் ஜெயலலிதா கைநாட்டு வைத்திருக்கிறார். அது சட்டப்படி செல்லாது. அதனால்,செந்தில்பாலாஜியை வேட்பாளராக அங்கீகரிக்கக்கூடாது' என்று சொல்லி தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், தி.மு.க. தலைமையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் நீலகண்டன் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதினிடம் புகார் கொடுத்தார்.

"அந்த புகாரை இரண்டு நாளில் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சொல்லி இருந்த நிலையில், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் செந்தில்பாலாஜியை அ.தி.மு.க வேட்பாளராக அங்கீகரித்து கடந்த ஐந்தாம் தேதி இறுதி பட்டியல் வெளியிட்டார். இந்த சூழலில்,"இந்த விவகாரத்தைக் கோர்ட்டுக்கு கொண்டு போகலாம்னு இருக்கோம்" என்று நம்மிடம் பேட்டி கொடுத்திருக்கிறார் தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன்.

இதுதொடர்பாக நன்னியூர் ராஜேந்திரனிடம் பேசினோம். "ஒரு கட்சி தலைவருக்கோ, தலைமைக்கோ உடம்பு முடியாத சூழல் இருக்கும்போது, அவர் கைநாட்டு வைப்பதில் எந்த தவறோ, சட்டமீறலோ இல்லை. சொல்லப்போனால், கையெழுத்தைவிட கைநாட்டுதான் பாதுகாப்பு. ஆனால், கைநாட்டு வைக்கும் நபர் சுயநினைவில் செய்தாரா என்பதுதான் முதல்வர் விவகாரத்தில் கேள்வியாக எழுந்திருக்கிறது. சுயநினைவோடு இருந்தாலும்,அதற்கு சாட்சி கையெழுத்து போடும் நபர் சப்டிவிஷனல் ரேங்கிங்குக்கு மேல் இருக்க வேண்டும்.

ஆனால்,முதல்வர் கைரேகை உருட்டிய விவகாரத்தில் சாட்சி கையெழுத்தை அந்த ரேங்குக்கு குறைவான பாலாஜி போட்டிருக்கிறார். அதனால்தான் 'இது போர்ஜரி. இது முதல்வர் சுயநினைவோடு செந்தில்பாலாஜியை வேட்பாளராக அறிவித்து,கைரேகை வைக்கலை. அதனால்,'செந்தில்பாலாஜியை வேட்பாளராக அங்கீகரிக்ககூடாது' என்று அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்,நீலகண்டனை வைத்து புகார் கொடுத்தோம். 'அதுஇது'ன்னு மழுப்பியவர்,'ரெண்டு நாள்ல விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'ன்னு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், எந்த விசாரணையும் செய்யாமல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொண்டு, கடந்த ஐந்தாம் தேதி மாலை செந்தில்பாலாஜியை அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அங்கீகரித்து அறிவித்திருக்கிறார்.

இது முழுக்க முழுக்க சட்டத்துக்கு புறம்பான செயல். இதை இப்படியே விட்டோம்னா, தேர்தல் நடைமுறை சட்டங்களை கேலிக்கூத்தாக்கினதுபோல் ஆகிடும். வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாகவும் இது ஆயிடும். அதனால்,'முதல்வர் கைரேகை விசயத்தை வைத்துப் பார்க்கும்போது,அ.தி.மு.க வேட்பாளராக செந்தில்பாலாஜி இருப்பது செல்லாது' என்று சொல்லி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். இந்த விசயத்தை எங்க கட்சித் தலைமை அனுமதியோடு விரைவில் உயர்நீதிமன்றம் செல்வோம்," என்றார்.

இதுதொடர்பாக  அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரான சைபுதீனிடம் பேச முற்பட்டோம். அவரது போனை எடுத்தவர் விபரத்தை கேட்டு விட்டு, "சார் மீட்டிக்கிங்கில் இருக்கார். அவரிடம் நீங்க சொல்ற விசயத்தை கன்வே பண்ணிடுறேன்" என்றார். அதன் பின்னர் பலமுறை அழைத்தும் அவரிடம் பேச முடியவில்லை.

- துரை.வேம்பையன்.

எடிட்டர் சாய்ஸ்