Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஸ்கெட் கொடுத்து பள்ளியில் இருந்து சிறுமியை கடத்திச் சென்று நகையை பறித்த கும்பல்

பள்ளி வளாகத்திலேயே பிஸ்கெட்டை காட்டி மாணவியை கடத்திச் சென்ற கும்பல், நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் உள்ள பவுண்டு தெருவில் வசிப்பவர் ஆறுமுகம்-பரமேஸ்வர் தம்பதி. இவர்களின் 8 வயது மகள் திவ்யா, மதுரை ரோட்டில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் சிறுமி திவ்யா, பள்ளியில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, பள்ளி மதில் சுவர் அருகில் வந்த சில மர்ம நபர்கள், திவ்யாவிடம் பிஸ்கெட் கொடுத்துள்ளனர். அதை வாங்க வந்த திவ்யாவின் வாயை கைக்குட்டையால் பொத்தியபடி மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்திய மர்ம நபர்கள், திவ்யா காதில் அணிந்திருந்த தங்கத் தோடு, செயின் மற்றும் காலில் அணிந்து இருந்த வெள்ளிக் கொலுசை கழற்றி பறித்துக் கொண்டனர். அதன்பின் சிறுமி திவ்யாவை காரில் இருந்து அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, சிறுமி திவ்யா அங்கேயே அழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்த சாலையில் சென்ற சிலர், திவ்யா அணிந்திருந்த பள்ளிச் சீருடையை வைத்து அவரை பள்ளியில் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

உடனே பள்ளி தலைமை ஆசிரியர், இதுகுறித்து காவல் நிலையத்துக்கு புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி திவ்யாவிடம் இருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களின் மதிப்பு சுமார் 15 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ