Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபநாசம் மலையில் காட்டுப்பன்றி வேட்டை ! வனத்துறை அதிரடி

பாபநாசம் மலையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வி.கே.புரத்தைச் சேர்ந்தவர்கள் பாபநாசம் மலைப்பகுதியில் வேட்டைக்குச் சென்றனர். அவர்கள், காட்டுப்பன்றியை குறி வைத்து வேட்டையாடினர். பிறகு அதை கொண்டு வந்து சமைத்து சாப்பிட முடிவு செய்தனர். இந்த தகவல் வனச்சரகர் பரத்துக்கு தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு விரைந்தனர். அப்போது 5 பேர் காட்டுப்பன்றியை மலையின் அடிவாரமான டாணா பகுதியில் சமைத்துக் கொண்டு இருந்தனர். வனத்துறையினரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம், வி.கே.புரம், டாணா பகுதியைச் சேர்ந்த கார்த்திக், முருகன், துரைராஜ், பாஸ்கர் மற்றும் அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 16 ஆயிரம் ரூபாயை அபராதமாக வனத்துறையினர் வசூலித்தனர். தொடர்ந்து வனவிலங்குகளை அத்துமீறி வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வேட்டையாடுவது எப்படி என்று வனத்துறையினர் கூறுகையில், "காட்டுப்பன்றிகளை மோப்ப நாய்கள் மூலம் இவர்கள் வேட்டையாடுவார்கள். பிறகு அரிவாள், வேல்கம்பு போன்ற ஆயுதங்களால் அதை குத்திக் கொலை செய்வதுண்டு. வேட்டையாடும்போது சில பன்றிகள் காயத்துடன் தப்பிடுவதுண்டு. காட்டுப்பன்றிகள் மட்டுமல்லாமல் முயல், மிளா, மான் போன்ற விலங்குகளையும் இந்த கும்பல் வேட்டையாடுவதுண்டு. வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.


- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ