Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 அமைச்சர்கள்... 15 எம்.பி.க்கள், 45 எம்.எல்.ஏக்கள்... தஞ்சாவூரை அதகளப்படுத்தும் அ.தி.மு.க.!

திகம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது எனச்சொல்லித்தான் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். இப்போது 6 மாதங்களுக்கு பின்னால் இடைத்தேர்தல் நடக்கிறது.பொதுத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடப்பதாக சொல்லி தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் ஆணையம் யார் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.   அதே தொகுதி.. அதே வேட்பாளர்கள் என எந்த மாற்றமும் இல்லாமல் இடைத்தேர்தல் நடக்கிறது. சொல்லப்போனால் பொதுத்தேர்தலை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக பரபரக்கிறது இந்த தொகுதிகள்.

தஞ்சாவூர் தொகுதி நிலவரம் அதகளப்படுகிறது. எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாநகரத்தை 4 பகுதிகளாக பிரித்து, 8 அமைச்சர்கள், 15 எம்பிக்கள், 45 எம்.எல்.ஏ.க்கள், 70 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், 13 மாவட்டச் செயலாளர்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமிக்கு தீவிரமாய் வாக்கு சேகரிக்கிறார்கள்.

அமைச்சர்கள் வேலுமணி, துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் என அனைவரும் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கிறார்கள். அமைச்சர்களோடு அந்தந்த ஊர் அ.தி.மு.க.வினரும் அணிவகுக்கிறார்கள். வெளியூர்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், அவர்களது ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் தஞ்சையை கூட... அவர்கள் தங்குவதற்கு வீடு, விடுதி என அனைத்தும் ஹவுஸ்புல்.

50 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி என்ற ரீதியில் கணக்கெடுத்து செய்ய வேண்டியதை செய்து வருகிறார்கள் அ.தி.மு.க.வினர். பெயர், சாதி, எந்த கட்சியைச் சேர்ந்தவர் என சகல விபரங்களுடன் தயாராகிறது பட்டியல். பட்டியலின் அடிப்படையில் தலைக்கு இவ்வளவு என பணம் கொடுக்கப்படுகிறது.

"அ.தி.மு.க.வைச்சேர்ந்தவர்கள், எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள், நடுநிலையாளர்கள் இந்த மூன்று அடிப்படையில் தான் வாக்காளர்களை பிரிக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் என்றால் ஓட்டுக்கு ஆயிரம், நடுநிலையாளர்கள் என்றால் ஓட்டுக்கு 2 ஆயிரம், தி.மு.க.வினர் விரும்பினால் அவர்களுக்கு ஓட்டுக்கு 3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது," என்கிறார்கள் தொகுதியில்.

தி.மு.க.வும் தன் பங்குக்கு தீவிரமாய் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அவர்களும் லிஸ்ட் தயாரிக்கிறார்கள். அ.தி.மு.க.விடம் விலை போகும் தி.மு.க.வினர் விபரம், அ.தி.மு.க.வினர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை முதல் கட்டமாக சேகரிக்கத்துவங்கியுள்ளனர். தி.மு.க..வும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அத்தனை முயற்சியையும் செய்து வருவதாகவே சொல்லப்படுகிறது.

இரு கட்சிகளின் இந்த மோதலில் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறது தே.மு.தி.க. "வாக்காளர்களுக்கு இரு கட்சிகளுமே பணம் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். காவல்துறையினர் முன்னிலையே பணம் பட்டுவாடா நடக்கிறது. எல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடக்கிறது," என கவலை தெரிவித்தார் தே.மு.தி.க. நிர்வாகி.


தஞ்சை பரபரக்க துவங்கி விட்டது.

- ஏ. ராம்
படங்கள்: கே. குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ