Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘மணல் குவாரிகளை மூடுவீர்களா?’ உறுதிமொழி கேட்ட விவசாயிகள்... நழுவிய செந்தில்பாலாஜி !

கரூர் : மணல் குவாரிகளை அம்மாவிடம் சொல்லி மூடச்செய்வேன் என அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த செந்தில்பாலாஜியிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து கோரி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். அந்த படிவத்தில் கையெழுத்திடாமால் செந்தில்பாலாஜி நழுவினார்.

வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு, தலைவர்களின் பிரசாரம் என அரவக்குறிச்சி தொகுதி பரபரக்கிறது. அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் என பெரும் கூட்டமே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம் தி.மு.க.விலும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கடம்பன்குறிச்சி மணல் குவாரியில் முறைகேடாகவும். பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டக்குறிச்சி, புகழூர்-தவுட்டுப்பாளையம், நடையனுர்-கோம்புபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கும் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

கடம்பன்குறிச்சி அரசு மணல் குவாரியில் முறைகேடாகவும், மற்ற இடங்களில்  சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துபவர்களாகவும்  தமிழக பொறுப்பு  முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் தான் என்றும் அவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியத்துடன் செந்தில்பாலாஜி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செந்தில்பாலாஜியை சந்தித்து பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் "கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தின்போது, 'மணல்குவாரிகளை அம்மாவிடம் சொல்லி மூடச் செய்வேன்' என சொல்லுகிறீர்கள். அதற்கான உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு தாருங்கள்" என கோரினர்.

அவர்களிடம் இருந்து அந்த படிவத்தை பெற்ற செந்தில்பாலாஜி, இதில் கையெழுத்திட தி.மு.க. வேட்பாளரிடம் கேட்டீர்களா? என கேட்டார். 'தி.மு.க. வேட்பாளர் இன்னும் இங்கு பிரசாரத்துக்கு வரவில்லை. அவர் இங்கு வரும்போது அவரிடமும் கேட்போம். அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்போம்," என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நான் உறுதிமொழியை மைக்கில் சொல்கிறேன். கையெழுத்து போட முடியாது' எனச்சொல்லிவிட்டு சென்றார். இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவர்களை அ.தி.மு.க.வினர் மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் கூறுகையில், "மணல் குவாரியை மூடநடவடிக்கை எடுப்பேன் என சொல்கிறார். கையெழுத்து போடச்சொன்னால் நழுவுகிறார். கோபப்படுகிறார். இது மாதிரி பெயருக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு நழுவும் அணுகுமுறையையே அ.தி.மு.க.வினர் கையாள்கிறார்கள். மக்களை ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் அரங்கேற்றுகின்றனர்  அதிமுகவினர்," என்றனர்.

செந்தில்பாலாஜியிடம் கையெழுத்து கேட்டு கொடுக்கப்பட்ட படிவத்தில், சட்டவிரோத மணல் குவாரிகள் மூட வைப்பேன். அபாயகரமான தொழிற்சாலைகளை எதிர்ப்பேன். இதை மீறினால் தொகுதி மக்கள் என் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். உறுதிமொழிகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவேற்றத் தவறினால் எனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களோடு இணைந்து போராடுவேன்," என குறிப்பிடப்பட்டிருந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ