Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வி.சி.க. பிரமுகருக்கு இவ்வளவு செல்வாக்கா? ஆளுங்கட்சியை விஞ்சிய அதிரடி வசூல் (வீடியோ)

சென்னையில் வீடு கட்ட மாமூல் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அடாவடி செய்கிறார். அந்த வீடியோ போலீஸிடம் இருந்தும் அவரை கைது செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் வீடு கட்ட ஜல்லி, மணல், செங்கல் என கட்டுமான பொருட்கள் வந்து இறங்கினால் அங்கு சென்று கமிஷன் கேட்பது வாடிக்கையானது. அ.தி.மு.க கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள், வீடு கட்டுபவர்களிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்ததும், அவர்களை கடுமையாக எச்சரித்தார். இதன்பிறகும் வசூல் வேட்டை தொடர்ந்தது. ஆளுங்கட்சியினருக்கே சவால் கொடுக்கும் வகையில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மாமூல் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அடுத்தடுத்து அந்த பிரமுகர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு இரண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூரில் பிரபல வணிக நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தனித்தனி பங்களா டைப் வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது. அங்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளம் சிறுத்தைகள் பாசறையின் சோழிங்கநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் பரசுராமன் தலைமையிலான மூன்று பேர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீஸ் நிலையத்தில் பதிவான இரண்டு எப்.ஐ.ஆர்களின் விவரம்.

"கடந்த 24-ம் தேதி இரவு 8.45 மணியளவில் கானத்தூரைச் சேர்ந்த பரசுராமன், மற்றும் மூன்று பேர், முகத்தை கர்ச்சிப்பால் மூடிக்கொண்டு கடப்பாரை, மண்வெட்டி மற்றும் ஆயுதங்களுடன் எங்களுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்தனர். பிறகு தகாத வார்த்தையால் திட்டினர். சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளினர். இவர்கள் சில மாதங்களாக எங்களிடம் மாமூல் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாயாஜால் நிறுவனத்தின் மேலாளர் மீனாட்சி சுந்தரம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் 24-ம் தேதி பரசுராமன் மற்றும் மூன்று பேர் மீது கானத்தூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த எப்.ஐ.ஆரில் பரசுராமன் மற்றும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து 26-ம் தேதி மீண்டும் மீனாட்சி சுந்தரம் இன்னொரு புகாரை கானத்தூர் போலீஸில் புகார் கொடுத்தார். "கடந்த 25-ம் தேதி இரவு 9 மணியளவில் கானத்தூரைச் சேர்ந்த பரசுராமன், அவரது உறவினர் மற்றும் ரவுடிகள் ஆகியோர் எங்கள் வளாகத்துக்குள் நுழைந்தனர். குடிநீர் போர்வெல் இணைப்பை உடைத்து வேலை செய்த ஆட்களை இரும்பு பைப் மற்றும் உருட்டுக்கட்டை, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் மிரட்டியதோடு, செருப்பால் வேலை ஆட்களை அடித்து, தகாத வார்த்தையால் திட்டினர். பரசுராமனின் மாமியார், திரையரங்கை அடித்து உடையுங்கள் என்று ஆவேசமாக கூறினார். அதை தடுத்த எங்கள் காவலாளிகளை பரசுராமனின் ஆட்கள் அடித்து உதைத்தனர். பிறகு எங்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள் செய்த கலவரம் சம்பவத்துக்கு ஆதாரமாக வீடியோ உள்ளது" என்று மனுவில் கூறியுள்ளார். அதன்பேரிலும் போலீஸார் 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு எப்.ஐ.ஆர் பேரில் பரசுராமனிடம் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு விசாரித்துள்ளனர். அப்போது போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு போன் வந்ததும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரைத் தேடி வருகிறோம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

"பரசுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பதவியில் உள்ளார். அவர், மாயான்ஸ் வில்லா மாயாஜால் கேம்பஸில் அத்துமீறி நுழைந்து மாமூல் கேட்டுள்ளார். அதன்பேரில் அவரிடம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இன்னொரு போலீஸ் நிலையத்தில் பரசுராமனிடம் விசாரணை நடத்தினோம். அப்போது, அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டார். இந்த சமயத்தில் விசாரணை அதிகாரிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், பரசுராமனை விட்டுவிடும்படி தெரிவித்தார். உடனே வேறுவழியின்றி நாங்கள் அவரை விட்டுவிட்டோம். இப்போது, புகார் கொடுத்த நபரை, பரசுராமன் தரப்பினர் மிரட்டி வருகின்றனர். இதனால் அவர் புகாரை வாபஸ் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, பெண் போலீஸாரிடம் அவர் அத்துமீறி நடந்தார். அடுத்து போலீஸ் அதிகாரி ஒருவரின் கன்னத்திலும் அறைந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும், போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்து வருகிறோம். போனில் சிபாரிசு செய்தவர் யார் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. ஏனெனில் அவருக்கு இந்த சமுதாயத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. பரசுராமன் அத்துமீறி நுழைந்ததற்கான ஆதாரம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறோம்" என்றனர்.

 

 

 

 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "போலீஸ் நிலையத்துக்கு வரும் புகார் மனுக்களை விசாரித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். அதுபோலதான் பரசுராமன் மீது புகார் கொடுக்கப்பட்டதும் விசாரித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். அவரை விடுவிக்ககோரி யாரும் விசாரணை அதிகாரிக்கு போன் செய்யவில்லை. மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை பரசுராமன் மற்றும் அவருடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைத் தேடி வருகிறோம்" என்றார்.

போலீஸ் உயரதிகாரி சொல்லும் தகவல் முற்றிலும் பொய்யானது. ஏனெனில் நேற்று கூட அவர், கானத்தூர் போலீஸ் நிலையம் வழியாக 'ஹாயாக' சென்றதாக அவரை நேரில் பார்த்த போலீஸார் சொல்கின்றனர். மேலும், கானத்தூர் போலீஸாரே எதிர்தரப்பினர் கவனித்து விட்டதால் தலைமறைவு என்ற ஒற்றைப் பதிலை போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். பரசுராமன் கழிவுநீர் லாரி சொந்தமான வைத்துள்ளார். கழிவுநீரை பனையூர் பகுதியில் கொட்டியது தொடர்பாக ஏற்கெனவே இவர் மீது பொதுமக்கள் குற்றம்சுமத்தினர். அப்போது, போலீஸாரை அவர் கவனித்ததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பனையூர் பகுதியில் நள்ளிரவில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது என்கின்றனர் பொதுமக்கள். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு பாலியல் விவகாரத்தில் சிக்கிய ஒருவருக்கு ஆதரவாக பரசுராமன் செயல்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் பேசியவர்கள், "எங்கள் கட்சியை சேர்ந்த பரசுராமன், கட்டுமான நிறுவனத்திடம் மாமூல் கேட்பதாக சொல்லப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும். இவர் மீது ஏற்கனவே கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மாமூல் கேட்டதாக சொல்லப்படும் புகார் குறித்து கட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்படும். பரசுராமனிடம் நேரில் விசாரணை நடத்தி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள தகவல் உண்மை என்றால் பாரபட்சமின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

பரசுராமனை போனில் தொடர்பு கொண்டோம். அவர் பதில் அளிக்கவில்லை. அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்தால் பரிசீலனைக்கு பிறகு அதனை பதிவு செய்யலாம். 

நமது நிருபர்

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ