Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாங்கள் 20 பேர்; அவர்கள் 200 பேர்!'- தி.மு.க.வை மடக்கும்  அ.தி.மு.க.வின் வியூகம்

மிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோரின் பிரசாரம் இல்லாமல், மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் களைகட்டியுள்ளது. ' அ.தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளும் தொகுதிகளில் முற்றுகையிட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை' என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும், தஞ்சாவூர் தொகுதிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ், ஒ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக்கண்ணு, ஜி.பாஸ்கரன், எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ப.குமார் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரை நியமித்துள்ளது அ.தி.மு.க தலைமைக் கழகம். ' முதல்வர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் நேரத்தில், மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்' என நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் சசிகலா. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"ஒவ்வொரு தொகுதிகளிலும் சீனியர் அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. கட்சி நிர்வாகிகளிடம் பேசிய சசிகலா, ' தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ அவற்றில் எந்தக் குறையும் வைக்க வேண்டாம். ரேசன் பொருட்களை மிகத் தரமானதாகக் கொடுங்கள். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்' என உறுதியான குரலில் தெரிவித்துவிட்டார். வெற்றியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அமைச்சர் பதவிக்குப் பங்கம் நேர்ந்துவிடும் என்பதால், மூன்று தொகுதிகளிலும் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் கடுமையாக வேலை பார்த்து வருகின்றனர். தொகுதி மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் முதற்கட்ட கரன்சி விநியோகம் தொடங்கிவிட்டது. மூன்று தொகுதிகளிலும் உறுதியாக வெல்வோம். ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் வேலைகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார் உற்சாகமாக. 

"காவிரி விவகாரத்தின் தாக்கத்தை தஞ்சை தொகுதியில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததையும் மக்கள் உணர்ந்துள்ளனர். தஞ்சை மட்டுமல்லாமல், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியிலும் தி.மு.க.வுக்கு ஆதரவான மனநிலையே மக்களிடம் உள்ளது" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர், " தினமும் காலை 6 மணிக்கெல்லாம் மாவட்ட நிர்வாகிகள், பகுதிப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பேசுகிறார் ஸ்டாலின்.

தொகுதி நிலவரம், எந்தெந்த பகுதிகளில் தேர்தல் பணி குறைவாக இருக்கிறது? பணியில் ஈடுபடாத நிர்வாகிகள் யார்? பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது? அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விரிவாக கேட்கிறார். நாளொன்றுக்கு மூன்று முறை ஸ்டாலின் தொடர்புக்குள் வருகிறார். 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரவக்குறிச்சியிலும் அதன்பின்னர் திருப்பரங்குன்றத்துக்கும் சுற்றுப் பயணம் செல்கிறார். பிரசாரத்தின் கடைசி இரண்டு நாட்களான 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தஞ்சையில் பிரசாரம் செய்ய இருக்கிறார் ஸ்டாலின்" என்றவர், தொடர்ந்து, 

" 20 ஓட்டுக்கு ஒரு தி.மு.க நிர்வாகி பொறுப்பாளர் என்ற அடிப்படையில் பிரசாரத்தை வடிவமைத்திருக்கிறோம். மூன்று தொகுதிகளிலும் இதே பாணியில்தான் செயல்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சி தரப்பில் ஓர் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தரத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் விநியோகத்தைப் பொறுத்து, நாங்களும் செயல்படுவோம். நாங்கள் இருபது பேர் பிரசாரத்துக்குச் சென்றால், அவர்கள் தரப்பில் 200 பேர் வருகிறார்கள். அவர்களின் கூட்டத்துக்கு எங்களால் ஈடுகட்ட முடியவில்லை. இந்தத் தேர்தலில் எதையும் கண்டுகொள்ளாமல் ஆணையம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கிறது. எந்த இடத்திலும் பணத்தை பறிமுதல் செய்யவில்லை. அப்பாவிகளிடம் இருந்து மட்டுமே, வாகனப் பரிசோதனை என்ற பெயரில் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எனவே, நாங்களும் எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம்" என்றார் இயல்பாக. 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ