Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அ.தி.மு.க.வை கூண்டோடு பிஜேபி கொண்டு செல்லும்..!' துரைமுருகன் கணிப்பு

தஞ்சாவூர் : "இன்னும் கொஞ்ச நாள்ல, அதிமுகவை கூண்டோடு கைலாசத்துக்கு கொண்டு போறதுமாதிரி பிஜேபிக்காரன் கொண்டு போகப்போறான்," என இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் துரைமுருகன்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தை அ.தி.மு.க., தி.மு.க. என இரு கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். தஞ்சாவூர் தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி பிரச்சாரப்பொதுக்கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார் துரைமுருகன். வல்லத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனக்கே உரிய பாணியில் கிண்டலும், கேலியுமாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து பேசினார் துரைமுருகன்.

"பொதுத்தேர்தல் நடந்து ஆறுமாதத்துல இப்போ 3 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குது. திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றிபெற்றவர் இறந்துபோய்விட்டார். ஆனா, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் எதற்காக தேர்தல் நிறுத்தப்பட்டது?.  'இந்த இரண்டு தொகுதியிலதான் பண நடமாட்டம் இருந்துச்சு அதனாலதான் தேர்தலை நிறுத்தியாச்சு'ன்னு  தேர்தல் கமிஷன் சொல்லுது. பணநடமாட்டத்துல ஈடுபட்டவங்க மேல தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்துச்சுனு சொல்ல முடியுமா?. யாருக்காவது தண்டனை வாங்கிக் கொடுத்திருக்காங்களா? இல்லை கைது செஞ்சிருக்காங்களா? இதுவரைக்கும் தேர்தல் கமிஷன். யாரையும் குற்றவாளினு சொல்லவே இல்லை. எந்த மடையனாவது 2 தொகுதியில் மட்டும் பண நடமாட்டம் இருந்ததாக சொல்வானா? அப்புறம் ஏன் தேர்தல் ஆணையம் சொல்லுச்சு. ஏன்னா 2 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என்பதாலே தேர்தல் நிறுத்தப்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

பணம் நடமாட்டம் இல்லன்னா ஊர்ல ஆள் நடமாட்டமே இருக்காது. தேர்தல் நேரத்துல அண்ணன் வாழ்க, அம்மா வாழ்கன்னு சொல்லி கோஷம் போடுகிறவர்களை சாயங்காலம் கவனிச்சாத்தான் நாளைக்கு பின்னாடி வருவான். கட்டிங் கொடுத்து பணம் கொடுத்தாதான் போவான். பணம் நடமாடாத ஊரை காட்டுங்க பாக்கலாம். நாட்டுக்கு இழிச்சவன் தஞ்சாவூர், கரூர்காரனா. ஆகவே உங்களை பழி தீர்த்த தேர்தல் கமிஷனுக்கு பாடம் புகுட்டனும் அதுக்கு நீங்க தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்.

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து எந்த உண்மையும் இதுவரை தெரியவில்லை. ஒருத்தன்கூட உண்மை சொல்லலை. எல்லோரும் போய்ட்டு வந்து நல்லா இருக்கிறார்னு சொல்லுறாங்க. நல்லா இருக்கிற முதலமைச்சரால் ஏன் ஒரு கையெழுத்துக்கூட போட முடியவில்லையா?. அப்போலோ ரெட்டி சொல்றார் 'கம்ப்ளீட்லி ரெக்கவர்டு'னு. சரி எப்ப டிஸ்சார்ஜ்னு கேட்டா, அதை அவங்கதான் முடிவு செய்யணும்னு சொல்றார். ரெட்டி துவங்கி எல்லோருமே பொய் சொல்றாங்க. உண்மை சொல்ல மாட்டேங்குறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல, அதிமுகவை கூண்டோடு கைலாசத்துக்கு கொண்டு போறதுமாதிரி பிஜேபிக்காரன் கொண்டு போகப்போறான். நீங்க வேனும்னா எழுதி வச்சுக்குங்க.

இப்போ இடைத்தேர்தல் நடக்குற தொகுதியில அமைச்சர் வந்து உக்காந்துக்கிட்டு கணக்கெடுத்து, எவ்வளவு கொடுக்கலாம்? ஆயிரமா, இரண்டாயிரமானு பேசி கொடுக்கறாங்க. இதுதான் பணம் நடமாடுறது. இதுபோல தொகுதியில் தேர்தல் வந்துச்சுன்னு வச்சுக்கோ தொகுதி ரொம்ப வசதி படைத்த தொகுதியா அது மாறிடும். கரூர்ல அன்புநாதன் வீட்டில் பணம் நடமாடியதே. அது தான் பண நடமாட்டம். ரூ.570 கோடியை ஏற்றிக்கிட்டு ஊர் ஊரா போனாங்களே. அது யாருடையது, யார் கொண்டு போனான்னு கண்டுபிடிச்சீங்களா?

காவிரிக்கு தி.மு.க. துரோகம் செய்ததாக சொல்லுறாங்க. காவிரியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?. காவிரிக்கு தி.மு.க. என்ன செய்தது, அ.தி.மு.க. என்ன செய்தது என்று மேடை போட்டு பேசலாமா? நான் தயார்," என்றார் ஆவேசமாக.

- ஏ. ராம்

படங்கள் : கே. குணசீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close