Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோபாலபுரத்தில் பரமபத ஆட்டம்...அன்று நடந்தது மீண்டும் இன்று நடக்கிறது!!

ழகிரி-ஸ்டாலின் சண்டை இன்று, நேற்று ஆரம்பித்ததல்ல.அழகிரிக்கு எட்டு வயசு இருக்கும்போது கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்குப் போனேன். அப்போது அழகிரியும், ஸ்டாலினும் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். கருணாநிதி இருவரையும் விலக்கி விலக்கிப் பார்த்தார். நடக்கவில்லை. என்னைப் பார்த்து “ராஜூ, இவனுங்களை கண்டிச்சு வை”என்று சொன்னார். நான் உடனே கோபமாக இருவரது சட்டையையும் பிடிக்க, ஸ்டாலின் நழுவி ஓடி விட்டார். அழகிரி மாட்டிக் கொண்டார்”என்று அழகிரி-ஸ்டாலின் இடையே  உள்ள சண்டை பற்றி மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஒரு பேட்டியில் சொல்லியது.

கருணாநிதியின் பிள்ளைகளில் அழகிரி, ஸ்டாலின் என்ற இருவர் மட்டும் இரு துருவங்களாக இன்று நிற்கிறார்கள். 90 வயதை தாண்டிய ஒரு தந்தையாக இவர்கள்  இருவருக்குமிடையே உள்ள சண்டையை நினைத்து கருணாநிதி பலமுறை தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார். கருணாநிதியின் குடும்பச் சண்டையைப் பற்றி இன்று, எதிர்க்கட்சியினர் மட்டும் அல்ல, கருணாநிதிக்கு வேண்டியவர்கள் கூட எள்ளி நகையாடுகின்றனர். ஆனால் இந்த குடும்பத்தைப் பற்றி ஆரம்பத்திலிருந்து அறிந்தவர்கள் ஒருவரும் இப்படிப் பேச மாட்டார்கள் என்கிறார்கள் மூத்த தி.மு.க நிர்வாகிகள். 

“ஸ்டாலின், அழகிரி இருவரும் இளைஞர்களாக இருந்தபோது, அவர்களிடம் கட்சியினர் சிலர் நெருக்கம் காட்டி வருவார்கள். மகன்களை வைத்து அப்பாவிடம் காரியம் சாதித்து விடலாம் என்று கணக்குப் போட்டு, ஸ்டாலினிடமும், அழகிரியிடமும் எதையாவது பற்ற வைத்து விடுவார்கள். ஆனால் மறுநாளே பற்ற வைத்த நபர்கள் சிக்கிக் கொள்வார்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா?. அப்போது கோபாலபுரம் வீட்டில் நடைபெறும் மீட்டிங் தான். 'மிட் நைட் மீட்டிங்' என்று கட்சியினர் அதை சொல்லுவார்கள். கருணாநிதி எவ்வளவு நேரம் கடந்து வீட்டுக்கு வந்தாலும், நள்ளிரவு வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக உட்கார்ந்து அவருடன் பேசுவார்கள். அண்ணன், தம்பிகள் உட்பட அனைவரும் அன்று நடைபெற்ற அனைத்து விசயங்களையும் இந்த மீட்டிங்கில் சொல்லி விடுவார்கள்.இந்த மீட்டிங்கில் கட்சி பற்றிய முக்கிய முடிவுகள் கூட எடுக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு 'பவர்புல்' மீட்டிங்காக இது இருந்தது. அப்படி ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்த குடும்பம் இது. அந்தக் குடும்பம் தான் இன்று, குழப்பத்தின் உச்சத்துக்கே சென்று விட்டது. ஒரு குடும்பத்தின் தலைவராக இதைப் பார்க்கும் கருணாநிதிக்கு வருத்தம் இருக்காதா?” என்கிறார்கள்.


 

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஜென்மப்பகை ஒன்றும் இல்லை; இருவருமே அவரவர் வழியில் ஒழுங்காகத்தான் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இருவரைச் சுற்றியும் இருந்தவர்கள், ஒரு நேரத்தில் போட்ட துாபம்தான் இன்று இருவருக்குள்ளும் ஏற்பட்டுள்ள விரிசலுக்குக் காரணமாக அமைந்து விட்டது. அரியணையைப் பிடிக்க அந்தக் காலத்தில் இளவரசர்களிடையே ஏற்படும்  போட்டி போல, மாபெரும் இயக்கமான தி.மு.க வின் தலைவர் என்ற அரியாசனத்தை கருணாநிதிக்குப் பின் அலங்கரிக்கப் போவது யார்? என அண்ணன், தம்பிக்குள் எழுந்த பனிப்போரில், ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் கையே ஓங்கியது. அதற்குக் காரணம் அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் அவருக்கே எதிராக  போய் விட்டது .அதேபோல் கருணாநிதியும் ஒரு காரணமாக அமைந்து விட்டார். ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக நியமிக்கும் நிலைக்கு வந்த கருணாநிதியால் அழகிரி நிலை என்ன என்பதை அழகிரியிடமும் சொல்லவில்லை. கட்சியினரிடமும் சொல்லவில்லை. இருவரும் மோதட்டும் வலியவர்களாக யார் இருக்கிறார்களோ அவர்கள்  வரட்டும் என்கின்ற மனப்பாங்கில் ஆரம்பத்தில் கருணாநிதி இருந்து விட்டார். இது இன்று அவருக்கே குடைச்சலை ஏற்படுத்தி விட்டது. கட்சியினரோ அழகிரி பின்னால்  செல்வதா? ஸ்டாலின் பின்னால் செல்வதா? என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்த சம்பவங்களும் நடந்தேறியது. ஒருவழியாக அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட, 'ஸ்டாலின்தான் என் அரசியல் வாரிசு' என்று கருணாநிதி முடிவுக்கு வந்தார். ஸ்டாலின் பற்றி கருணாநிதி இவ்வளவு உயர்வாகச் சொல்ல அழகிரியும் ஒரு காரணம். 

“அறைக்குள் புகுந்து அப்பாவை மிரட்டியது, அப்பா கட்டிக்காத்த இயக்கத்தையே தோற்கடிப்பேன்" என்று அறைகூவல் விடுத்தது என அதிரடி காட்டியது அழகிரிக்கு பாதகமாகவும், ஸ்டாலினுக்கு சாதகமாகவும் போய் விட்டது. இந்த இடைவெளியி்ல் கனிமொழியும் தனக்கென ஒரு வட்டத்தை தி.மு.க-வில் ஏற்படுத்திக் கொண்டார். இரண்டு பையன்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்த கருணாநிதிக்கு கனிமொழியால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற அச்ச உணர்வு ஆரம்பத்திலே இருந்ததால், அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்து நிலைமையை  சமாளித்தார். இப்போது மீண்டும் அழகிரி விவகாரம் கோபாலபுரம் வீட்டு கதவைத் தட்டியுள்ளது.

 கோபாலபுரம் வந்த வாரிசுகளின் புகைப்படத் தொகுப்பைக் காண.. இங்கே கிளிக் செய்க.. 


அழகிரியை கட்சிக்குள் மீண்டும் கொண்டு வந்தால் கோஷ்டிகள் உருவாவதைத் தடுக்க முடியாது என்பது கருணாநிதிக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் கட்சியா? பிள்ளையா? என்ற யுத்தத்தில் இப்போது அவர் பிள்ளையின் பக்கம் சாய முயற்சிக்கிறார். அதற்கு மற்றொரு பிள்ளை எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அழகிரியின் பக்கம் இன்று  கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமும் அணிவகுத்து நிற்க, ஸ்டாலின் பக்கம் அவரது குடும்பம் மட்டுமே நிற்கிறது. இந்த நெருக்கடியை உணர்ந்துதான் கருணாநிதியும் அழகிரியின் பக்கம் சாயத் துவங்கியுள்ளார். "ஒற்றைத் தலைமையாக இருக்க நினைத்த ஸ்டாலுனுக்கு அழகிரியை இழுக்கும் வேலைகள் தலைவலியை ஏற்படுத்தினாலும், ஒட்டு மொத்த குடும்பமும் தனக்கு எதிராக இருப்பதால் கோபத்தை மட்டுமே ஸ்டாலினால் இப்போது காட்ட முடியும்" என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

காலச் சக்கரம் மீண்டும் சுழல்கிறது. எந்த கோபாலபுரம் வீட்டில் கூடி கட்சியில் இருந்த கோஷ்டிப் பூசல் வில்லங்கங்களை விவாதித்தார்களோ?, இன்று அதே வீட்டில் தங்கள் குடும்பத்தில் உள்ள கோஷ்டிகளுக்கு முடிவு தேடுகிறார்கள். தலைமைப் பதவியை எட்டிப் பிடிக்க நினைத்த ஸ்டாலினுக்கு, பரமபத ஆட்டத்தில் பாம்பிடம் சிக்கியது போன்ற நிலைஇருக்க, குடும்ப உறவுகள் என்ற ஏணியைப் பிடித்து கொண்டு அழகிரி ஏறப் பார்க்கிறார். இறுதிக் கட்டத்தை எட்டுவது யார் ?என்பது  அடுத்தடுத்த ரவுண்டுகளில் தெரிந்து விடும் என்கிறார்கள் கோபாலபுரத்துக்கு நெருக்கமானவர்கள். 


- அ.சையது அபுதாஹிர் | படங்கள் : சு.குமரேசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close