Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடைத்தேர்தல் முடிவதற்குள்...? அ.தி.மு.க.வுக்கு நல்லக்கண்ணு எச்சரிக்கை

கரூர் : "இந்த தேர்தல் முடிவதற்குள் அரசு மணல்குவாரிகளை இழுத்து மூடி,.மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்டி வந்து கரூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என நல்லக்கண்ணு எச்சரிக்கை விடுத்தார்.

கரூர் மாவட்டம், கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட நான்கு சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக மூன்று மாதங்களாக போராடி வருகிறார்கள் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர்.

தமிழகத்தின் பொறுப்பு முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மைத்துனர் என்று சொல்லிகொண்டு மணல் திருடும் பாஸ்கர், புதுக்கோட்டை சித்திரவேல், கடம்பன்குறிச்சி மனோ ஆகியோருக்கு எதிராக, கையெழுத்து இயக்கம், உண்ணாவிரதம், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என பல வடிவங்களில் போராட்டம் நடத்தினர். வைகோ, நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன், சி.மகேந்திரன் என பல தலைவர்களை அழைத்து வந்தும் போராடி நடத்தி விட்டனர். இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் செந்தில்பாலாஜியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான், இந்த விவகாரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் செய்திருந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பழ.நெடுமாறன்,  "இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே தமிழ்நாட்டில் மணல் சுரண்டுவதைப்போல் சுரண்டுவதில்லை. சட்டத்தை மீறி இங்கு மணல் கொள்ளை நடக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மணல் அள்ள அந்தந்த மாநில அரசுகள் தடை போட்டிருக்கின்றன, அதனால், தமிழ்நாட்டில் மணலை சுரண்டி அங்கே கோடிகோடியாக விற்பனை செய்கிறார்கள். காவிரியில் மணல் அள்ளியதால் ஆற்றின் கட்டமைப்பு குலைந்துவிட்டது,. விவசாயம் பாழாகி விட்டது.

அதனால், அரசு உடனே இந்த சட்டவிரோத மணல்குவாரிகளை இழுத்து மூட வேண்டும். மோசடி மணல் குவாரி கும்பல் சம்பாதித்த பணத்தை மீட்டு, அந்த பணத்தில் ஆற்றை செப்பனிட வேண்டும். விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் 33 ஆறுகளில் மணல் கொள்ளை நடக்கிறது. அதற்கு அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், அத்தனை மணல் கொள்ளைக்கும் முன்மாதிரி போராட்டமாக இந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நடத்தும் போராட்டம் அமைந்திருக்கிறது. மக்கள் திரள் போராட்டமா இதை மாற்றி, மணல்குவாரிகளை இழுத்து மூட வைப்போம்" என்றார்.

அடுத்து பேசிய தோழர் நல்லகண்ணு,  "தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரியில் நடக்கும் இந்த மணல் கொள்ளை, தமிழக நீராதாரத்துக்கும்,விவசாயத்துக்கும்,குடிநீருக்கும் பேராபத்தை விளைவிக்கும். நதிகளை சுரண்டி, மலடாக்கிவிட்டு எதிர்கால சந்ததிக்கு பாலைவனங்களைதான் விட்டு செல்ல இருக்கிறோம். இதை அரசு கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது இன்னும் கொடுமை. ஏற்கெனவே என் தலைமையில் இதற்காக போராடினோம்.

ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோசமான மணல் சுரண்டலை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், பெரும் தீங்கு எற்படும். இந்த தேர்தல் முடிவதற்குள் அரசு இதில் தலையிட்டு மணல்குவாரிகளை இழுத்து மூடனும். மூவாயிரம் கோடி சம்பாதித்த மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும். இல்லைன்னா, தமிழகம் முழுக்க இருந்து ஒரு லட்சம் பேரை திரட்டி வந்து கரூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்றார் அதிரடியாக.

சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைவிடாது போராடி வருகிறார்கள் விவசாயிகள். இடைத்தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் இந்த போராட்டம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

- துரை.வேம்பையன்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ