Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கட்டளைகள் மட்டும் போதாது...கட்டமைப்புகளையும் மேம்படுத்துங்கள்!’ புதிய உத்தரவு குறித்து செயற்பாட்டாளர்கள் கருத்து!


 பள்ளி மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறையின்   நடவடிக்கை சரியானதுதான்.. ஆனால் கல்விக்கான  கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் விதிக்கப்படும் கட்டளைகள் அனைத்தையும்  கடைபிடியுங்கள்  என்பதை ஏற்க முடியாது  என்கிறார்கள் மாணவர்கள் ..


பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்  என பள்ளிக் கல்வித்துறை அதிரடி  உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனை  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்  அனுப்பப்பட்டுள்ளது.
  
  சுற்றறிக்கையில் சொல்லப்பட்டுள்ள  கட்டளைகள் என்னென்ன?

  •     மாணவர்கள் அனைவரும் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.
  •     லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’-கள் அணிந்து வர அனுமதி இல்லை.
  •     அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்.
  •      சட்டையை இறுக்கமாக அணியக் கூடாது.
  •      மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது, வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
  •     சீரற்ற முறையில் ‘இன்’ பண்ணக் கூடாது.
  •     கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
  •     கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.
  •     மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
  •     கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, காதுகளில் கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
  •     பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றே விடுமுறை எடுக்க வேண்டும்.
  •     பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
  •      திரும்ப ஒப்படைக்கப்பட  மாட்டாது.
  •      பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும் என்பதே பள்ளிக் கல்வித்துறை   தெரிவித்துள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களாகும்.

நெறிப்படுத்தும்  கட்டளைகள்  என்றால்  ஏற்கலாம்!

இந்த  கட்டளைகள் குறித்து கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். "இந்த  நடைமுறை  நல்ல விஷயமாக உள்ளது. இதனை காலத்திற்கு  ஏற்ற  நவீனத்துவம்  பாதிக்கப்படுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. செல்போனை  எத்தனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்துகிறர்கள்? ஏன் பெரியவர்களே எத்தனை பேர் அதனை சரியாக பயன்படுத்துகிறார்கள்? தெரியாத மாணவர்கள் கையில் போகும்போது அவர்கள் செல்போன் மூலம் சமூகத்தை பாதிக்கும் கெட்ட விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே சரியான நடவடிக்கை தான்.

அதே போன்று  உடை அணிவது  குறித்த  கட்டளையும்  சரியானதுதான். டைட் பேண்ட் போடுவது குறித்து  சொல்லியுள்ளார்கள். இது வரவேற்க தகுந்தது. இத்தகைய கட்டளைகள்  மாணவர்களை நெறிப் படுத்தும் என்றால்  அதனை  வரவேற்கத்தான் வேண்டும்" என்றார் .
 

கல்வி நிறுவனங்களில் மாற்றத்தை கொண்டு  வர வேண்டும் !

இந்திய மாணவர் சங்கத்தின்  தலைவர்  மாரியப்பனிடம் இதுகுறித்து கேட்டோம்.  "தமிழகத்தில் உள்ள  பள்ளிகளின் கட்டமைப்புகளை  மேம்படுத்தாமல் கட்டளைகள் போடுவது பயனற்றது. உதாரணமாக, எந்த பள்ளிகளில் கழிவறை சுத்தமாக  உள்ளது?  எங்கே குடிநீர் வசதி உள்ளது? இந்த குறைகளையெல்லாம் வைத்துக் கொண்டு மாணவனை வெளியே போகக் கூடாது என்று சொல்லமுடியாது? 9 மணிக்கு பள்ளிக்ககூடம் போகும் மாணவனுக்கு  தண்ணீர் தாகம் எடுக்கிறது. பள்ளியில் தண்ணீர் இல்லையென்றால் அவன் வெளியே போகத்தான் செய்வான். இந்த கட்டளைகளை  வைத்துக் கொண்டு  ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடாது. இவற்றை ஆசிரியர்கள்  தவறாகக்  கையாளக்க கூடிய வழிவகையும் உள்ளது. அதேபோன்று  இந்த பெல்ட்தான் அணிய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசுப் பள்ளிகளில் ஏழ்மையான  குடும்பத்தில் இருந்து  வந்து படிக்கும்  மாணவர்களும் உள்ளனர். அவர்களால் சீருடை அணிய முடியும். ஆனால், பள்ளிக் கல்வித்துறை சொல்வதுபோல்  பெல்ட் அணிவது சாத்தியமில்லாதது. இது ஏற்கத் தகுந்தது அல்ல.

ஒட்டுமொத்த விதிமுறைகளை குறை சொல்லவில்லை  !

அதே நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை  பிறப்பித்துள்ள  ஒட்டு மொத்த கட்டளைகளையும் குறை சொல்லவில்லை. ஆனால்  கூறப்பட்டுள்ள  அத்தனையும்  மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றால் பள்ளிக்கூடங்களில் உள்ள  குறைபாடுகளை  களைய வேண்டும். தென் மாவட்டங்களில் சாதிய அடிப்படையில்  சில அடையாளங்களை வைத்து வருகிறார்கள். அதனை  தடுக்கும் வகையில் சில வழிமுறைககள் சொல்லப்பட்டுள்ளன. அதுபோன்று ஆக்கப் பூர்வமான  நடவடிக்கைளை  வரவேற்கிறோம். மாற்றம் கொண்டு வர வேண்டும்  என்றால்  பாடத்திட்டங்களில் மாற்றத்தையும் ஆசிரியர்களின்  தரத்தை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்"  என்று மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

- கே. புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ