Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ரூ.2000, 500 நோட்டுகளால் இதுதான் குறையும்..! ராமதாஸ் கணிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ரூ.500, ரூ.2000 தாள்கள் புழக்கத்துக்கு வரும் வரை நாட்டில் பணப்புழக்கம் குறையும். இதனால் அனைத்து வகை வணிகங்களும் பாதிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் ரூ.1000, ரூ.500 தாள்கள் நேற்றிரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. முறையாக செயல்படுத்தப்பட்டால் பயனளிக்கக் கூடியது.

இந்தியா மீது அண்டை நாடான பாகிஸ்தானும், கறுப்புப் பண முதலைகளும் மிகப் பெரிய பொருளாதார தாக்குதலை நடத்தி வருகின்றன. இப்போரில் அவர்கள் சக்தி வாய்ந்த ஆயுதங்களாக பயன்படுத்துவது  ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்களைத் தான். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் ரூ.2500 கோடி மதிப்புள்ள கள்ள தாள்களை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டிருக்கிறது. மற்றொருபுறம் உறுதி செய்யப்படாத தகவல்களின்படி உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் பல லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். இவற்றில் பெரும்பகுதி ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்களாகத் தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.1000, ரூ.500 தாள்கள் அனைத்தும் இனி செல்லாதவையாக மாறிவிடும். சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி அடுத்த 50 நாட்களில் ரூ.1000, ரூ.500 தாள்களை மாற்ற முடியும் என்ற போதிலும், அவ்வகையில் வெளுக்கப்படும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பயனுள்ளதாகவே அமையும். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

பெருந்தொழிலதிபர்களும், பெரு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பது ஒருபுறமிருக்க ஊழல் ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை இனி பயன்படுத்த முடியாமல் போகும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக திராவிடக்கட்சிகள் குவித்து வைத்துள்ள பணமும்  பயனின்றி போய்விடும். இதன்மூலம் ஊழலும், ஜனநாயகத்தை பணநாயகமாக்கும் அவலமும் ஓரளவாவது குறையும். அதேநேரத்தில், மத்தியஅரசின் நடவடிக்கையால் ஏழை, நடுத்தர மக்களுக்கும், அடுத்த சில நாட்களில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவிருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய நிகழ்வுகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கான தொகையை ரூ.1000, ரூ.500 தாள்களாகத் தான் வைத்திருப்பார்கள். ஒரே இரவில் அவை செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பதால், கை நிறைய பணம் வைத்திருந்தும் செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அவர்கள் வைத்திருக்கும் பணத்தை அடுத்து வரும் நாட்களில் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றாலும் கூட, தேவையின்போது செலவழிக்க அவர்களிடம் ரூ.100 தாள்கள் இருக்காது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் தொல்லை எல்லையில்லாததாக அமையும். அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றுக்கு இந்நடவடிக்கையிலிருந்து சில நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைப் போல குடும்ப விழாக்களை நடத்துபவர்கள், அதற்கான ஆதாரங்களைக் காட்டி குறிப்பிட்டத் தொகையை மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு தங்களது குழந்தைகளின் கல்லூரிக் கல்வி மற்றும் திருமணம் தான். இதற்காக அவர்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருப்பார்கள். வசதி கருதி  ரூ.1000, ரூ.500 தாள்களாக அவர்கள் இதை சேமித்து வைத்திருப்பர். மத்திய அரசின் நடவடிக்கையால்  அவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்கால கனவு என்பதால் அந்தக் கனவும், மத்திய அரசின் நோக்கமும் சிதையாமல் இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ரூ.500, ரூ.2000 தாள்கள் புழக்கத்துக்கு வரும் வரை நாட்டில் பணப்புழக்கம் குறையும். இதனால் அனைத்து வகை வணிகங்களும் பாதிக்கப்படும். புதிய ரூபாய் தாள்கள் புழக்கத்துக்கு வரும் போது, அவையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கும் நோக்குடன் புதிய 2000, 500 ரூபாய் தாள்களில் பாதுகாப்புக் குறியீடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்க வேண்டும்.

மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் தாண்டி, இதை பொதுமக்கள் வரவேற்கின்றனர். இதற்கு காரணம் கறுப்புப் பணப்புழக்கத்தால் ஏற்பட்டுள்ள பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட தீமைகள் ஓரளவாவது குறையும் என்ற நம்பிக்கை தான். மக்களின் இந்நம்பிக்கையை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என்று அறிவிப்பதன் மூலம் மட்டும் நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழித்து விட முடியுமா? என்றால், அதற்கான பதில் ‘முடியாது’ என்பதுதான். கறுப்புப் பணம் ரூபாய் தாள்களாக மட்டும் பதுக்கி வைக்கப்படவில்லை. பன்னாட்டு கரன்சிகள், நிலங்கள், பெரு நிறுவன பங்குகள், சுவிஸ் வங்கிகள் ஆகியவற்றிலும் கறுப்புப் பணம் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையும் ஒழித்தால் மட்டுமே கறுப்புப் பண ஒழிப்பின் பயன்கள் முழுமையாக  மக்களைச் சென்றடையும். இதை உணர்ந்து  அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெருமளவிலான கறுப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் தான் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதால், 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வெளிநாட்டு கருப்பு பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் மீட்டு தாயகத்துக்கு கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் பயனாக பண வீக்கம், விலைவாசி, நிலங்களின் மதிப்பு ஆகியவை அடுத்த ஓராண்டுக்குள் 10 முதல் 20 விழுக்காடு வரையாவது  குறைய வேண்டும். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் பயன்களை மக்கள் வெகு எளிதாக உணரும் நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளவையாக மாறும். இவற்றையெல்லாம் தாண்டி, ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கை நாட்டுக்குத் தேவையான, ஓரளவாவது பயனளிக்கக்கூடிய நடவடிக்கை என்பதில் ஐயமில்லை" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ