Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி பிரதமரா? ராணுவ சர்வாதிகாரியா? திருமாவளவன் கடும் விமர்சனம்

500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா? என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு செல்லாமல்போகும் என்ற செய்தியை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏடிஎம்கள் இரண்டு நாட்களுக்கு இயங்காது, வங்கிகள் மூடப்பட்டன என்ற அடுக்கடுக்கான அறிவிப்பால் நேற்று நள்ளிரவு முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பயணம் செய்யப் போனவர்கள் பேருந்தில் ஏற முடியவில்லை, ஓட்டலுக்குச் சென்றவர்கள் சாப்பிட முடியவில்லை.

ஏழை-எளிய மக்கள் தமது கையிலிருக்கும் ஒன்றிரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போய்விட்டன என்பதையறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும், கள்ளநோட்டுகளைத் தடுப்பதற்கும் பயன்படும் என மோடி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான ஏமாற்று என்பதைத் தவிர வேறல்ல. கணக்கில் வராத பணமே கறுப்புப் பணம். அதை வைத்திருப்பவர்கள் காகிதப் பணமாக அதை மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அதுபோலவே இந்தியாவின் 90 விழுக்காடு சொத்து வெறும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது.

மோடியின் பிரசாரத்துக்குப் பெரும் பணத்தை செலவிட்டு அவரைப் பிரதமராக அமர வைத்திருக்கும் அம்பானியோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடியின் ஆதரவால் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் அதானியோ, மோடிக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட்டுகளோ கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை காகிதப் பணமாக மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அவர்களது பணம் அயல்நாடுகளில் பாதுகாப்பாக இருக்கிறது. இது மோடிக்கு நன்றாகவே தெரியும். “நான் பிரதமரானால் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக்கொண்டுவந்து இந்திய குடிமகன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வேன்” என தேர்தல் நேரத்தில் கொடுத்த ஜம்பமடித்த மோடி, அதைச் செய்யமுடியாத தனது தோல்வியை மறைப்பதற்காக ஆடுகிற கேலிக்கூத்துதான் இது.

இந்தியாவில் கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பது இங்கிருக்கும் தேர்தல் முறைதான். 2014 பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் தமது கட்சியிடமிருந்து பெற்றதாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கணக்கில் உள்ள தொகைக்கும் பாஜக தனது கணக்கில் காட்டியிருக்கும் தொகைக்கும் பலகோடி ரூபாய் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஏடிஆர் இந்தியா என்ற அமைப்பு அம்பலப்படுத்தியது. தேர்தல் செலவை அரசே ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்த முன்வந்தால்தான் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணை முற்றாக அடைக்க முடியும்.

மோடி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள் “வங்கிகளுக்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள்” என்றெல்லாம் அதிகாரிகள் பேசுகின்றனர். இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்ட அதே வார்த்தைகளை இப்போது நாம் மீண்டும் கேட்கிறோம். இது “பொருளாதார அவசரநிலை” இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் “அரசியல் அவசரநிலை” அறிவிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. மோடியின் இந்த ‘துக்ளக் தர்பாரை’ கண்டுகொள்ளாமல் விட்டால் அடுத்து மிகப்பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துசேரும். இந்தியாவிலுள்ள ஜனநாயக சக்திகள் மோடி அரசின் ‘பொருளாதார அவசரநிலையை’ எதிர்த்து முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ