Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் ஒருநாள்! ஷாக் ரிப்போர்ட்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தாலும் முழுமையாக கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்க முடியுமா என்றால் அது கேள்விக்குறியே மேலோங்கி நிற்கிறது.

ரூபாய் நோட்டுகளை மாற்றினால் கறுப்புப்பணம், கள்ளநோட்டுகள் ஒழிந்து விடும் என்றால் இதற்கு முன்பு இதுபோன்ற முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்பிறகு கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் புழக்கம் முற்றிலும் தடுக்கப்படவில்லை. காரணம், இந்த நடைமுறை செய்த தவறுக்கான பரிகாரம் போன்றது.

இன்றைய சூழ்நிலையில் நேற்று, சில மணி நேர காலஅவகாசம் இருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அன்றாட கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கையிருப்பாக வைத்திருந்தவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை பதவியில் உள்ளவர்கள் யோசிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இன்று அதிகாலையில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு பால் வாங்க கடைக்குச் சென்றவர்களுக்கு பணமிருந்தும் பால் கொடுக்கப்படவில்லை. அடுத்து அண்ணாச்சி கடைகளில் சமையல் பொருட்களை வாங்கச் சென்றால் அங்கேயும் சில்லறை இல்லை என்ற காரணத்துக்காக பொருட்கள் வாங்க முடியவில்லை. டீ கடைகளுக்குச் சென்றால் டீ குடித்து விட்டு 500 ரூபாய் நோட்டை நீட்டியபோது டீயைப் போல கடைக்காரரின் முகமும் சூடானது. அடுத்து, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ, ஆட்டோ ஆகியவற்றில் பயணித்துவிட்டு சில்லறை இல்லாமல் பலர் சிரமப்பட்டனர்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் கையில் ஏ.டி.எம் கார்டுகளை எடுத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பலர் ஏ.டி.எம் மையங்களுக்குப் படையெடுத்தனர். இயந்திரத்துக்குள் இருந்த சொற்ப 100 ரூபாய் நோட்டுக்களும் முந்தியவர்களுக்குக் கிடைத்தது. செல்லாத அந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை எடுக்க மனமில்லாமல் வெறுங்கையுடன் பலர் திரும்பினர். நேற்று கூலி வேலைக்குச் சென்றுவிட்டு கிடைத்த சம்பளத்தில் 500 ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்ற தொழிலாளி ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினர். கையில் பணமிருந்தும் அவரது குடும்பம் இன்று அரைவயிற்றுடன் அவதியடைந்தது. வெளியூர்களுக்குச் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கி கிடக்கின்றனர்.

பெட்ரோல் பங்க், மெடிக்கல் கடைகளில் 500, 1000 ரூபாய் செல்லும் என்பதால் அங்கே மக்கள் கூட்டம் அலைமோதின. பெட்ரோல் பங்க்களில் 500 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் போட்டுக்கொள்ளுங்கள், சில்லறை இல்லை என்று தெரிவித்தனர். மெடிக்கல் கடைகளிலும் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். சில்லறை பிரச்னையை சமாளிக்க முடியாத நம்மூர் அண்ணாச்சி கடைகளும், ஓட்டல்கள் என சிறு, குறு வணிகர்கள் கடைக்கு அவர்களாவே விடுமுறை விட்டுக் கொண்டனர். கள்ளநோட்டு, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையில் இன்று நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கையே அல்லல்பட்டது. ஆனால் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்தவர்கள் கையில் மட்டும் சில்லறைக்கு குறைவில்லை. இதனால் இன்று மட்டும் அவர்கள் மக்கள் மத்தியில் பிளாட்பார செல்வந்தர்களாக தெரிந்தனர். வழக்கமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பவர்களைத் தேடிச் சென்று அவர்கள் கேட்ட கமிஷனை கொடுத்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் 100, 50, 20, 10 ரூபாய்களாக மாற்றப்பட்டன. 500 ரூபாய்க்கு 100 ரூபாய் வரை கமிஷனாக பெறப்பட்டன.

இதுகுறித்து வங்கி அலுவலர் திருவேங்கடம் கூறுகையில், "மோடியின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. ஊழல், லஞ்சம், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், பயங்கரவாதத்துக்காக பயன்படுத்தப்படும் பணம் ஆகியவற்றை இந்த திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள நிலையில் விவரம் தெரியாத கிராம மக்கள் யாரும் ஏமாற்றப்படக் கூடாது. அவர்களுக்கு விவரம் தெரிந்தவர்கள் உதவ வேண்டும். ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு காலஅவகாசம் கொடுத்துள்ளது. இதனால் தேவைக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்கள் மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் வங்கிக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்" என்றார்.

''பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏற்கெனவே சரிவடைந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் மேலும் பாதிக்கப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் பண முதலைகள் அதை ரூபாய் நோட்டுக்களாக வைத்திருப்பதில்லை. வைரம், பிளாட்டினம், தங்கம் ஆகியவைகளாகவே மாற்றி வைத்திருக்கின்றனர். இதனால் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் முற்றிலும் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது. மேலும், இன்று, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு குறைந்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு அதிகமாக இருந்த சூழ்நிலையில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. சைலன்ட் மோடில், அதாவது, ரகசியமாக ஒரு வாரத்துக்கு முன்பே 500, 1000 ரூபாய் பயன்பாட்டை குறைத்திருக்க வேண்டும். இல்லையெனில் புதிய ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் நிரப்பி, மக்களின் சிரமத்தை தவிர்த்து இருக்கலாம்'' என்றார் சமூக ஆர்வலர் இளங்கோ.

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ