Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.500க்கு சில்லறை வேண்டுமா? கந்துவட்டி போல் நடந்த கமிஷன் கொள்ளை (வீடியோ)

 

 

சேலம் : நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, நேற்று இரவு முதலே அமல்படுத்தியது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மக்கள், சில்லறை கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகப்பெரும்பான்மையான கடைகளில் 500, 1000 ரூபாய் நோடுகள் பெறப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். வங்கிகள், ஏ.டி.எம்.மையங்களும் செயல்படாததால் அவசரத் தேவைக்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் தவித்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் இந்த தேவையை பயன்படுத்தி கமிஷனுக்கு சில்லறை கொடுக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டனர். ஐந்நூறு ரூபாய்க்கு 100 ரூபாய் கமிஷனும், 1000 ரூபாய்க்கு 200 ரூபாய் கமிஷனும் பெற்றுக்கொண்டு சில்லறை வழங்கினர். பல இடங்களில் கந்து வட்டி தொழிலைப்போல இந்த கமிஷன் பெற்று வந்தனர்.

சேலத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு பாரத ஸ்டேட் வங்கி முன்பு இது போன்று கமிஷன் பெறுவதாக நமக்கு தகவல் கிடைக்க அங்கு விரைந்தோம்.அங்கே ஒரு கும்பல் 500 ரூபாய்க்கு 100 ரூபாய் கமிஷனும், 1000 ரூபாயிக்கு 200 ரூபாய் கமிஷனும் பெற்றுக்கொண்டு 100 ரூபாய் நோட்டுகளாக சில்லறை கொடுத்து வந்தனர். கூலித்தொழிலாளர்கள் பலர் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 400, 800 ரூபாயை பெற்றுக்கொண்டு வந்தனர்.

இதையடுத்து அந்த கும்பலில் இருந்த ஒருவரிடம் தொழிலாளி போல பேசினோம்.

நாம் : ஏ.டி.எம். எல்லாம் மூடியிருக்கு. 500 ரூபாய் செல்லாதுனு சொல்றாங்க. செலவுக்கு காசு இல்லை. சில்லறை கிடைக்குமா?

அந்த நபர் : கிடைக்கும். 500 ரூபாய்க்கு 100 ரூபாயும், 1000 ரூபாய்க்கு 200 ரூபாயும் கமிஷன்.

நாம் :   அவ்வளவா? குறைக்க மாட்டீங்களா?

அந்த நபர் : முடியாது.

நாம் : சரி தாங்க.

அந்த நபர் : இங்கேயே இருங்க வாங்கி வந்து தருகிறேன்.

(அவரை பின் தொடர்ந்து போனோம். ஒரு இடத்தில் கைப்பையில் இருந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுத்து, 4 ரூபாய் நோட்டுகளை எடுத்து நம்மிடம் தந்தார்.)

நாம் : 500, 1000 ரூபாய் நோட்டு எவ்வளவு கொடுத்தாலும் சேஞ்ச் கிடைக்குமா?

அந்த நபர் : எவ்வளவு 500, 1000 நோட்டுகள் கொடுத்தாலும் கமிஷன் எடுத்துட்டு கொடுப்போம்.

கந்து வட்டியை விட மோசமாக பணத்தை பெற்றுக்கொண்டு 20 சதவீத கமிஷன் பெறுவது நமக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. பெரும் மோசடி வேலை இது. ஏராளமான தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனடியாக சேலம் போலீஸாருக்கு தகவல் அளித்தோம். போலீஸார் வந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 

இது பற்றி நம்மிடம் பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரவீன், ‘‘ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அப்பாவி ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும், வணிகர்களும், பெரும் அளவு பாதிக்கப்படுகிறார்கள். தங்களிடம் உள்ள ஆயிரம், ஐந்நூறு ரூபாயை பயன்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில் இதுபோன்ற மோசடிக்காரர்கள், கந்து வட்டிக்கு பணம் பெற்றதைப் போல, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு 100 ரூபாய் கமிஷன் எடுத்துக் கொள்வது அதிர்ச்சியளிக்கிறது,’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ்,

படங்கள்: எம்.விஜயகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ