Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கை தாரா மரணமும், விடைதெரியாத கேள்விகளும்...! (வீடியோ..!)

சென்னை தியாகராய நகர்  பாண்டிபஜார் காவல்நிலையத்தில் தாரா என்ற 26 வயது திருநங்கை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி கீழ்பாக்கம் மருத்துவமனை முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் மண்ணாபாய் ஆகியோர்களின் மகள் தாரா, இவர் எண்ணூரில் உள்ள சக திருநங்கைகளுடன் வசித்து வந்தார். 9-ம் தேதி அதிகாலை பாண்டிபஜார் வழியாக செல்லும்போது அவரை வழி மறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் காவல்நிலைய வளாகத்துக்குள் தீக்காயங்களுடன் கிடந்த அவரை போலீஸ்காரர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தாரா இறந்துவிட்டார்.

இதுகுறித்து தமிழக திருநங்கைகள் இணைப்பாளரான கிரேஸி பானுவிடம் பேசினோம்,"போலீஸார் விசாரிச்சப்போ தாரா குடி போதையில் இருந்ததாச் சொல்றாங்க. ஆனா அவளுக்கு குடிக்கிற பழக்கமே கிடையாது, நல்ல பொண்ணு, எல்லார்கிட்டையும் ரொம்பப் பாசமா இருப்பா.  காஞ்சனா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வந்தா. 9-ம் தேதி காலைல தி.நகர் போய்கிட்டு இருந்தவள, போலீஸ்காரங்க மடக்கிப் பிடிச்சி 'பாலியல் தொழில் பண்ணிக்கிட்டு வரியா? குடிச்சிட்டு வரியா?' னு கேட்டு அவமானப்படுத்தி இருக்காங்க. விசாரணைக்கு அழைச்சிகிட்டு போயிருக்காங்க. அப்போ தன்னோட மொபைல்ல இருந்து எங்க மக்களைச் சார்ந்த அபிங்கிற திருநங்கைக்கு கால் பண்ணி, 'அம்மா போலீஸ் என்னப் புடிச்சிட்டு வந்துட்டாங்க, என்கிட்டத் தப்பா நடந்துக்கிறாங்க, கெட்ட வார்த்தைல பேசி அடிக்கிறாங்க, 'செத்துப் போ' அப்படின்னுலாம் சொல்றாங்க என்னைக் காப்பாத்துங்கம்மா' என அழுதிருக்கிறார்.

உடனே எங்கள் மக்களை அழைத்துகொண்டு காவல் நிலையம் வந்தபோது, தாரா தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டுத் தீக்குளித்து விட்டார். அவரை ஆம்புலன்சில் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம் என்று போலீஸ்காரர்கள் கூறியுள்ளனர். அவள் அப்படி தற்கொலை பண்ணிக்கிற பொண்ணு கிடையாது, ரொம்ப தைரியசாலி, ஏதோ தப்பு நடந்திருக்கு, பைக்குல போற பொண்ணு கைல பெட்ரோல் கேனும், தீப்பெட்டியும் எடுத்துக் கொண்டு போவாளா? அப்படி நடக்க வாய்ப்பே இல்லை, காவல் நிலைய வளாகத்துக்குள், அவள் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொள்ளும் வரை காவலர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்களா? அங்க இருக்கும் கண்காணிப்பு கேமாராவில் பதிவான வீடியோவை காட்டுங்கள் என கேட்டோம், ஆனால் ஏதேதோ சொல்லி எங்களிடம் இருந்து உண்மையை மறைக்கிறாங்க, எங்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரங்களே இப்படிப் பண்ணா நாங்க என்ன பண்றது

இன்னைக்கு இந்த திருநங்கைக்கு நடந்த கொடூரம் நாளைக்கு பல பேருக்கு நடக்கலாம், தாராவோட மரணத்துல மர்மம் இருக்கு அதை அரசாங்கம் கண்டுபிடிச்சி குற்றவாளிகளுக்கு தண்டனை தரனும்" என்றார் குமுறலுடன்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் சோகத்துடன் இருந்த தாராவின் அம்மா மண்ணாபாயிடம் பேசினோம். "ரொம்ப தைரியசாலியான பொண்ணு, அவ வாழணும்னு ஆசைப்பட்டவ, அவளேதான் திருநங்கைகள் கூட வாழனும்னு சொன்னா அதை நாங்க ஏத்துக்கிட்டோம். எங்ககிட்டயும் ரொம்ப பாசமா இருப்பா, என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கல" என்று கதறுகிறார்.

 

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், "போலீஸ் சோதனையின்போது தாரா குடித்து விட்டு வண்டி ஓட்டி வந்தார். அவரை விசாரணைக்கு அழைத்து வரும் போது தரக்குறைவாக பேசினார். அவரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்" என்றனர். மேலும் இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது அங்கிருந்த காவல் அதிகாரிகள் எங்களுக்கு எதுவும் தெரியாது, தயவு செஞ்சி இடத்தை காலிபண்ணுங்கனு சொல்லி 'கேட்'டை மூடி விட்டனர்.

- ஜெ.அன்பரசன், படங்கள்:ப.சரவணகுமார், வீடியோ:தி.ஹரிஹரன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ