Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'1 கோடி ரூபாய்க்கு 25 சதவீத கமிஷன்!' - தனியார் வங்கி நிர்வாகிகளின் வலை

 

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக வங்கி வாசல்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். ' எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள் என தனியார் வங்கிகள் தகவல் அனுப்புகின்றன. பெரும் கமிஷனைக் கொடுத்தாவது நல்ல ரூபாயாக மாற்றிக் கொள்ள தவியாய்த் தவிக்கின்றனர் பெரும்பாலான வணிகர்கள்' என்கின்றனர் வங்கி தரப்பில். 

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின், '500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பால், நேற்று நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் முடங்கின. தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் சவரனுக்கு 1,400 ரூபாய் வரையில் உயர்ந்தது. பொதுமக்கள் மத்தியிலும் கடும் குழப்பம் நிலவியது. இதுகுறித்து நேற்று பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ' வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணம், சட்டரீதியாக பெறப்பட்டிருந்தால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. முறைகேடான வழியில் சம்பாதித்த பணம் என்றால், அவை வந்ததற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். எளிய மக்கள் 10 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரையில்தான் டெபாசிட் செய்வார்கள். பெரும் பணத்தை முதலீடு செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. முதல் இரண்டு வாரங்களில், குறைந்த அளவு ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்படும். மூன்று வாரங்களுக்குப் பிறகு அதிகளவில் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும்' என விளக்கினார். 

 

அரசின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பத் தொடங்கின பொதுத்துறை வங்கிகள். இந்தியன் வங்கி அனுப்பிய தகவலில், ' வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நான்காயிரம் ரூபாய் அளவுக்கு நவம்பர் 10-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம்' எனத் தெரிவித்தது. கனரா வங்கியும், ' ஆன்லைன் பரிமாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்' என விவரித்திருந்தது. ஆனால், சில தனியார் வங்கிகள் அனுப்பிய குறுந்தகவலில், ' உங்களிடம் எவ்வளவு எண்ணிக்கையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தாலும், டெபாசிட் செய்து கொள்ளலாம். உங்களது வங்கித் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்' எனத் தெரிவித்துள்ளன. 

' எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தைக் கொண்டு வாருங்கள் என தனியார் வங்கிகள் தகவல் அனுப்புகின்றன. முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?' என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் கேட்டோம். " பணத்தை அக்கௌன்ட்டில் போடுவதற்கு எந்த எல்லையும் இல்லை. 100 கோடி ரூபாய் வரையில் செலுத்தலாம். கட்டும் தொகைக்கு வரிப் பிடித்தமும் கிடையாது. நீங்கள் செலுத்தும் பணத்துக்குத் தக்கவாறு, சோதனை வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ, வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால் மட்டுமே சிக்கலுக்கு ஆளாக நேரிடும்" என்றார். 

ஆனால், பணத்தை மாற்றுவதற்கு உரிய வழிவகை தெரியாமல் திண்டாடி வருகின்றனர் வணிகர்கள் பலர். ' எதாவது ஒரு வகையில் பணத்தை மாற்றியாக வேண்டும்' என்பற்காக குறுக்கு வழிகளைத் தேடி ஓடுகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய வணிகர் ஒருவர், " வங்கிகளுக்குச் சென்று அதிக தொகைகளை டெபாசிட் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதற்கான ஆதாரத்தைக் கேட்டு, வருமான வரித்துறை நெருக்குதல் கொடுக்கும் என்றுதான் பலரும் அச்சப்படுகின்றனர். வேறு ஒருவரின் ஆதார் எண்ணைக் காண்பித்து பணத்தைச் செலுத்துவதிலும் சிக்கல்கள் அதிகம். எனவே, 100 ரூபாய் நோட்டுக்களாக மாற்றித் தரும் ஏஜெண்டுகளை நாடுகின்றனர் சில ஏஜென்சிகள், ' உங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றித் தருகிறோம்' என 20 முதல் 30 சதவீதம் வரையில் கமிஷன் பேசுகின்றனர். ' இதைவிடக் குறைவான கமிஷன் தொகைக்கு யாராவது பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்களா' எனவும் தேடி வருகிறார்கள். 

இதற்காக, தனியார் வங்கிகளின் மேலாளர்களின் ஆலோசனைகளையும் பலர் கேட்கின்றனர். ஆனால், வங்கியில் உள்ள கையிறுப்பில் இருந்து சில்லறை ரூபாய்களைத் தருவதும் அவ்வளவு சாத்தியமானதாக இல்லை. பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஏஜெண்டுகளுக்கு பொற்காலமாக மாறிவிட்டது. அவர்கள் காட்டில்தான் பணமழை பெய்கிறது. டிசம்பர் இறுதிவரையில் கெடு விதிக்கப்பட்டிருப்பதால், அதற்குள் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு மாறிவிடும் பதற்றத்தில் இருக்கிறார்கள் வணிகர்கள் பலர். இதை சில தனியார் வங்கிகளின் நிர்வாகிகள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வேலையிலும் இறங்கியிருக்கிறார்கள்" என்றார் விரிவாக. 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ