Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரலாறு உறைந்துவிடவில்லை - நவம்பர் புரட்சியும்... நவ யுகமும்...!

ங்கிலாந்து புரட்சி, அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை; அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை; அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை; அப்படியே வரலாற்றில் தங்கிப்போனவை. ஆனால், 1917 நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது; அதனால், அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது; உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளைக் கொடுத்தது; தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்யப் புரட்சி பல்வேறு தளங்களில்  முன் மாதிரிகளை உருவாக்கித் தந்தது. அந்தப் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் 2017-ம் ஆண்டு. அந்த நூற்றாண்டு விழாவுக்கான தொடக்க விழாவை 2016 நவம்பர் 7-ம் தேதி தொடங்கி ஒரு வருடத்திற்கு கொண்டாட இடதுசாரி இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. அதற்கான விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடக்க விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில், "ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி - போல்ஸ்விக் வரலாறு’’ என்ற நூலின் மறுபதிப்பை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வெளியிட்டார். அவரிடம் இருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி மற்றும் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.  அதன் சாரம்...

சோசலிஷம் என்றும் தோற்காது!

ஜி. ராமகிருஷ்ணன், ”புரட்சி என்ற வார்த்தை தமிழகத்தில் கெட்ட வார்த்தையாக மாறி விட்டது. அதிகாரத்தைக் கைப்பற்றி, கோடி கோடியாக கொள்ளையடித்து, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவியைக் குறிப்பிடும் முன், புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.  உண்மையாக புரட்சி என்ற வார்த்தைக்கான பொருளை ரஷ்யப் புரட்சியை அறிந்து கொள்வதன் மூலம்தான் நாம் உணர முடியும். இன்றைக்கு அதற்குத்தான் நாம் விழா எடுக்கிறோம். இந்த விழாவை முன்னிட்டு, என்னிடம் சில நண்பர்கள், “1917-ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டது உண்மைதான்; அது உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதும் உண்மைதான்; ஆனால், அந்த அரசாங்கம்தான் கவிழ்ந்து விட்டதே... அதற்கு நூற்றாண்டு விழா தேவையா?” என்று கேட்டனர். அதுபோன்ற கேள்வி எழுப்பும் அனைவருக்கும் நம்முடைய பதில், “ரஷ்யாவில் ஏற்பட்ட தோல்வி என்பது சோசலிஷத்தின் தோல்வி அல்ல... கம்யூனிஸ்ட் தத்துவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல... அந்த நாட்டில் தலைமை தாங்கிய கட்சித் தலைமைக்கு ஏற்பட்ட தோல்வி” என்பதுதான். ஏனென்றால், சோசலிஷம் ஒருபோதும் தோற்காது”.

அரசியல் சார்பற்ற கலை என்பது ஒரு சவம் 

திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன், ”இந்திய சினிமாவின் வியாபார - போட்டிச் சூழலில் ஒரு படைப்பாளி தனது அரசியல் சார்பை வெளிக்காட்ட முடியாது. அதிலும் இடதுசாரி சிந்தனையாளனாக வெளிப்படுத்திக் கொள்வது, எவ்வளவு சிரமம் என்பதை நான் சொல்லத்தேவை இல்லை. ஆனால், “கலை என்பது அரசியல் சார்பற்று இருந்தால், அது வெறும் சவம்” என்றார் லெனின். அதனால், நம்முடைய மண்ணுக்கான - மக்களுக்கான அரசியலை நம்மால் முடிந்த அளவு பேச வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். இந்த உந்துதலை இடதுசாரி இயக்கம்தான் எனக்கு அளித்தது. இடதுசாரி இயக்கத்தின் பெயர், அடையாளம் தவிர்த்த ஒரு கலைஞனாக நான் வெளிப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அரசியல் சார்பு என்ற நிலையில், ஒரு திராவிட இயக்கம், தேசியக் கட்சியின் சார்பாக என்னை நான் வெளிப்படுத்திக் கொண்டால் அதைவிடக் கேவலம், வேறு எதுவும் கிடையாது. என்னுடைய தாயாக இருந்துவரும் இந்த இடதுசாரி இயக்கம் மீது சமீபகாலமாக சாதி குறித்தான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இடதுசாரி இயக்கங்கள் சாதியப் பிரச்னைகளை கையில் எடுத்து போராடவில்லை என்ற மூடத்தனத்தை ஒரு பெரிய கும்பல் திட்டமிட்டு பரப்புகிறது. வர்க்க விடுதலையோடு சாதிய விடுதலையும் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னது இடதுசாரிகளே. சாதியச் சிக்கல்களுக்கும், தேசிய இனப் பிரச்னைகளுக்கும் பன்னாட்டு முதலாளித்துவப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு இடதுசாரி இயக்கம்தான். 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சாதியப் பிரச்னைகளுக்கு முன்னால் நின்று குரல் கொடுப்பதும், சாதியை தட்டி கட்டுக்குள் வைத்ததும் இடதுசாரி இயக்கங்கள்தான். சாணிப் பாலில் இருந்து ஆவணவக் கொலைகள் வரை, இரட்டைக் குவளையில் இருந்து தீண்டாமைச் சுவர் வரை அகற்றியது இடதுசாரி இயக்கங்கள்தான். அரசியல் என்பது மக்களுக்கான அறிவும் உழைக்கும் திறனும் என்ற அறிவை ஊட்டி வளர்த்தது, இடதுசாரி இயக்கம்தான். இந்தியாவை மீட்டெடுக்கும் ஒரே இயக்கமான இடதுசாரி இயக்கத்தின் மூலம் இங்கும் ஒரு நவம்பர் புரட்சி சாத்தியம்தான். 

உழைக்கும் மக்கள் அதிகாரம் பெறுவார்கள்!

 

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், ”நான் மாணவனாக இருந்தபோது, தோழர் ராஜூ தலைமையில் இடதுசாரி மாணவர் இயக்கமான எஸ்.எப்.ஐ-யில்  செயல்பட்டேன். அந்த நேரத்தில் அரசியல் கருத்துக்களை உள்வாங்குவது, அரசியல் சிந்தனைகளை ஏற்றுக் கொள்வது, தேசம், சமூகம், உலகம் குறித்த ஞானத்தைப் பெறுவதற்கான அந்த வாசலைத் திறந்து விட்டது இடதுசாரி இயக்கங்களின் தோழர்கள் தான். அவர்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டவன். அந்த வகையில் என்னுடைய முதல் ஆசான் எஸ்.ஏ.பெருமாள். இந்த மேடையில் நான் பேசுவதற்கான கிடைத்த வாய்ப்பு, என் வாழ்வின் ஒரு மகத்தான வாய்ப்பு. நவம்பர் புரட்சிக்குப் பிறகு, உருவான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் படைக்கப்பட்ட, ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இங்கு மிகப் பெரியதாக இருந்தது. நான் ரஷ்ய இலக்கியம் படித்து வளர்ந்தவன். அதற்காக நான் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டேன். ரஷ்ய இலக்கியங்கள் வழியாகத்தான், புரட்சிக்கான வழிகள் பிறந்தன. அந்த இலக்கியங்கள் மூலம்தான் தோழர் லெனினும் அவருடைய சகாக்களும் உருவானர்கள். ’அக்டோபர்’ என்ற திரைப்படத்தை பார்த்தால் போதும், நாம் ரஷ்யப்புரட்சியைப் புரிந்து கொள்ளலாம். அந்தப் படத்தின் துவக்கக் காட்சியைப் பார்த்தால், யாரை எல்லாம் ரஷ்யா அதுநாள்வரை ஒடுக்கி வைத்திருந்ததோ அந்த ஏழை மக்கள், எளிய மக்கள், கூலிகளின் எழுச்சிதான் புரட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றை நாம் அறிந்து கொள்ள 3 வழிகள் இருக்கின்றன. ஒன்று புத்தகங்கள். இரண்டு திரைப்படங்கள், மூன்று இலக்கியம்.  ஜான் ரீடு எழுதிய ‘உலகைக் குலுக்கிய 10 நாள்கள்’ என்ற ஒரு புத்தகம் போதும். நாம் நவம்பர் புரட்சியைப் புரிந்து கொள்ள, தானே கண்டு, தானே உணர்ந்து தானே எழுதிய அந்தப் புத்தகம். மற்றொன்று திரைப்படங்கள் வழியாகவும் பார்க்கலாம். உலகப் புரட்சிகளில், பெண்களை முன்னிறுத்தியதும் பெண்களுக்கு ஒரு இடம் கொடுத்ததும் இடதுசாரித் தத்துவம்தான். அதன் அடையாளம் தான் ‘தாய்’ நாவல். ‘டான் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது’ என்ற நாவல் புரட்சிக்கு முந்தைய-புரட்சிக்கு பிந்தைய ரஷ்யாவை படம் பிடித்துக் காட்டும் புத்தகம். நவம்பர் புரட்சியைப் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் சொல்லும் ஒரே பாடம் உழைக்கும் மக்கள் ஒரு நாள் அரியணை ஏறுவார்கள். அவர்கள் கையில் நிச்சயம் அதிகாரம் கிடைக்கும் என்பதுதான்.”

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு

 

”உலகத்தையே ஆக்கிரமிக்கிற நோக்கத்தோடு ஹிட்லரின் ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளையெல்லாம் ராணுவ பலத்தால் பிடித்த பிறகு, சோவியத் யூனியனையும் பிடிக்கத் திட்டமிட்டது, அப்போது அதை அமெரிக்காவும், பிரிட்டனும் கண்டு கொள்ளாமல் விட்டன. அந்த நாடுகளுக்கு எதிராகவும் ஹிட்லர் படையனுப்பப் போவது தெரிந்த பிறகுதான் அவை ஸ்டாலினோடு பேச்சு நடத்தி ஒரு அணியை அமைத்தன... இரண்டு கோடி மக்களின் உயிரைப் பறித்தது அந்த யுத்தம். மிக அதிகமாகத் தன் மக்களை இழந்தது சோவியத் யூனியன்தான். சோவியத் யூனியனின் வீரமும் தியாகமும்தான் இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. சோவியத் யூனியன் அந்த யுத்தத்தை எவ்வாறு கையாண்டது என்பதைக் கவனித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. யுத்தத்தில் மகத்தான வெற்றி பெற்றாலும் எந்த நாட்டையும் சோவியத் அரசு அடிமைப்படுத்தவில்லை. மாறாக, ஜெர்மன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நாடுகள் சுதந்திர நாடுகளாக, தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளவே சோவியத் யூனியன் உதவியது. யுத்தம் என்றாலே நாடுகளைக் கைப்பற்றுவதுதான் என்ற வரலாற்றில், முதல் முறையாக இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியது சோவியத் யூனியன்.

நம் பாரதி எழுதிய "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி" பாடல் ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர நாயகரான பகத் சிங், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பொதுவாகக் காலை நான்கு மணிக்குத்தான் தூக்கில் போடுவார்கள். ஆனால், பகத் சிங்கை முதல் நாள் மாலை நான்கு மணிக்கே தூக்கில் போட்டார்கள். அதற்குக் காரணம், முதல் நாளே தூக்கில் போட்டு விட்டால், நேற்றே முடிந்து விட்டது என்ற உணர்வின் பெரும் கொந்தளிப்பாக அதுமாறாது என்று கணக்குப் போட்டதுதான். தூக்கில் போட அழைத்துச் செல்ல சிறையதிகாரிகள் வந்தபோது பகத் சிங் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார், அது லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்.’ இவையெல்லாம் ஏற்படுத்திய தாக்கத்தில் நவம்பர் புரட்சி பற்றியும், சோவியத் நாடு பற்றியும் பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்கத்தான், பாரதி எழுதியதும் பகத் சிங் படித்ததும் வெறும் செய்தி என்ற அடிப்படையில் அல்ல, தமிழகத்திலும் இந்திய அளவிலும் புரட்சிகரமான மாற்றங்கள் விளைய வேண்டும் என்ற தாகத்தோடுதான் என்பதையும் புரிந்துகொண்டேன். சுதந்திர இந்தியா உருவான பிறகு தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் காலூன்றி நிற்பதற்காக, மற்ற நாடுகள் உதவ முன்வராத நிலையில் சோவியத் யூனியன்தான் பேருதவி செய்தது. கைம்மாறு எதிர்பாராத உதவி அது.

ஒரு நாடு இப்படித் திகழ முடியுமா என்று யோசித்தபோது, அதற்கு அடித்தளமாக சோசலிச அறம் இருப்பது தெளிவானது. மாற்றங்களுக்காகப் போராடுவோருக்கு சோவியத் அரசு துணை நின்றது. ஏகாதிபத்திய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியது. சோவியத் அரசு மக்களின் மதச் சுதந்திரத்திற்கு உறுதியளித்தது. அதேவேளையில் அரசு எந்த மதத்தையும் சாராததாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போல்ஷ்விக்குகளின் இந்தக் கொள்கையைப் பாராட்டுவதாகக் காந்தி எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட மாற்றங்கள்தான் சோவியத் சமுதாயத்தை ஒப்பில்லாத சமுதாயமாக மாற்றியது. சொல்லப்போனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை சோவியத் அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்தின. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வு உள்பட நவம்பர் புரட்சியின் அறம் என்று இன்னும் விரிவாகச் சொல்லிக் கொண்டே போகலாம். சோவியத்துக்குப் போய்வந்த பெரியார் பல முக்கியமான விசயங்களைக் கவனித்து எழுதியிருக்கிறார். அவற்றை இன்றைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வெற்றிபெற்ற ஒரு நாடு, வெற்றி கொண்ட நாட்டை அடிமைப்படுத்தாமல் சுதந்திர நாடாக இருக்க உதவியது என்பதெல்லாம் வரலாற்றில் மிக முக்கியமானது. அது உலக அளவிலேயே பலரையும் ஈர்த்த ஒரு மாற்றம். அதே போல், ரஷ்யாவில்தான் மையமான புரட்சி நடந்தது என்றாலும், பிற பகுதிகள் இணைகிறபோது அதற்கு ரஷ்யா என்ற பெயர் வைக்கப்படவில்லை. 'ஐக்கிய சோசலிச சோவியத் குடியரசுகள்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. அதில் ஒரு முக்கியமான அரசியல் செய்தி இருக்கிறது. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு இதுவும் ஊக்குவித்தது என்று சொல்லலாம். இன்று மொழித் திணிப்பு முயற்சிகள் இங்கே நடக்கிற பின்னணியில், நவம்பர் புரட்சி விழாவில், அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை என்ற சோவியத் கொள்கையை எடுத்துச் செல்ல வேண்டும். மனிதனுக்கும் உழைப்புக்கும் உள்ள உறவு சந்தைப் பொருளாதாரத்தில் அவமதிக்கப்படுகிறது. அந்த உறவுக்கு உன்னதமான மதிப்பு சோசலிச சமுதாயத்தில்தான் சாத்தியம் என்ற செய்தியும் நவம்பர் புரட்சி விழாவில் இருக்கிறது. அதைப் போல், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்துச் சமத்துவ மாற்றங்களுக்குமான செய்தியை நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழாவையொட்டி, மக்களிடையே விரிவாகவும் பரவலாகவும் கொண்டுசெல்ல செங்கொடி இயக்கத் தோழர்கள் உறுதியேற்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டு சோசலிஷத்தைப் படைப்போம்!

 

பிரகாஷ் காரத், ”அக்டோபர் புரட்சிக்கு முன்பு உலகம் என்ன நிலையில் இருந்தது. உலகின் 5-ல் நான்கு பகுதி மக்களை காலனிய நாடுகளின் அடிமைகளாக பல சாம்ராஜியங்கள் வைத்திருந்தன. அதில் மிகப்பெரியது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், இரண்டாவது பெரிய சாம்ராஜ்ஜியம் ரஷ்யா. அங்கும் நூறுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களை ஜார் அரசாங்கம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அந்த அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு விடுதலை வழங்கியது அக்டோபர் புரட்சி. இந்தியாவின் விடுதலைக்கு உந்து சக்தியாக இருந்ததும் அக்டோபர் புரட்சிதான், மேலும் சுரண்டப்படும் வர்க்கமும் அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதை நிருபித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு வேறு பல புரட்சிகளும் உலகத்தில் நடந்திருக்கின்றன. அந்தப் புரட்சிகளுக்கும் அக்டோபர் புரட்சிக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்ற இடங்களில் நடந்தவை சுரண்டும் வர்க்கங்களுக்கிடையிலான ஆட்சி மாற்றம். அக்டோபர் புரட்சி சுரண்டும் வர்க்கத்திடம் இருந்து சுரண்டப்பட்ட வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய மாபெரும் நிகழ்வு. இந்தப் புரட்சிதான் பெண்களுக்கு சம நீதியை சட்ட ரீதியாக்கியது. உலகில் முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமையை அளித்தது. அதன்பிறகு, 11 ஆண்டுகள் கழித்துதான் பிரிட்டிஷ் அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. 8 மணி நேர வேலை என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் என்பதை உறுதியாக்கியது. கல்வி, அறிவியல், தொழில் வளர்ச்சி என்று அனைத்திலும் தொழிலாளி வர்க்கம் அமைத்த சோவியத் முன்னேறிக் கொண்டிருந்தபோது, மற்ற நாடுகள் சர்வாதிகாரம் என்று அதைக் குறை சொல்லிக் கொண்டிருந்தன. மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளிகள் தங்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடுவதற்கும் இந்த புரட்சிதான் உந்து சக்தியாக இருந்தது. முதலாளித்துவ நாடுகள் மிகக் குறுகிய உரிமைகளை மட்டும் அவர்களுக்குக் கொடுத்து ஜனநாயகம் என்ற பெயரில் வைத்திருந்தன. ரஷ்யப் புரட்சி ஜனநாயக உணர்வுகளை அனுமதித்து, அது மேலோங்கக் காரணமாக இருந்தது. இதெல்லாம் நடந்த பிறகுதான் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் வெறும் வாக்குரிமையை அல்ல. சமமான உரிமைகளை அளிப்பதுதான் உண்மையான சமத்துவம் என்பதை உணர்ந்தன. உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை எழுச்சி பெற வைத்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். அதுபோல இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்றதற்கும் அந்தப் புரட்சிதான் காரணம். குறிப்பாக இந்தியாவின் பிரதான நகரங்களில் தொழிலாளி வர்க்க மையங்கள் எழுந்தன. அக்டோபர் புரட்சி நடந்த ஆறு மாதங்களில் முதல் தொழிலாளர் சங்கம் மெட்ராஸ் லேபர்ஸ் யூனியன் ஆரம்பிக்கப்பட்டது. சிங்காரவேலர் அதன் தலைவராக இருந்தார்.

சோவியத் ஒன்றியம் என்கிற அந்த அரசு சிதைவுற்றிருக்கலாம். ஆனால், சோசலிஷம் என்கிற சித்தாந்தத்துக்கு ஒருபோதும் அழிவு கிடையாது. அதற்கு முடிவு கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் முடிவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், வரலாறு இப்போது உறைந்து விட்டதா? ஆனால், வரலாறே முடிந்து விட்டதாக முதலாளித்துவ தத்துவவாதிகள் கேலி பேசினார்கள். புரட்சிகர தத்துவம் மார்க்சிய லெனினிய அடிப்படை இன்றைக்கு முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் உலகெங்கும் பல பிற்போக்கான போர்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. சிரியாவில், ஈராக்கில், லிபியாவில் போர் நடந்து கொண்டிருக்கிறது. இது உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்கான யுத்தம். இன்றைக்கும் நாம் சமத்துவமின்மையை, சுரண்டலைப் பார்க்கிறோம். அதனால், சோசலிசத்திற்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆசியப் பகுதிகளில், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சோவியத் வீழ்ச்சியில் இருந்து நாம் பல படிப்பினைகளை கற்றுக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து 21-ம் நூற்றாண்டு சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம். 

சி.பி.எம் மூத்த தலைவர் சங்கரய்யா, "முற்போக்கு சக்திகள் தமிழகத்தில் வலுவடைந்து வருகின்றன. 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்றார் கார்ல் மார்க்ஸ். அதைத்தான் நான் இன்று  நினைவுபடுத்துகிறேன். தமிழ்நாட்டில், இந்தியாவில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்ற கோஷம் ஒலிக்க வேண்டும். உலக முதலாளித்துவம் - ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டுமானால் உலகத் தொழிலாளி வர்க்கத்தால் மட்டும்தான் சாத்தியம். 1940-ல் உலக கம்யூனிஸ்ட் அகிலத்தை நீக்கி விட்டது. காரணம், அந்தந்த நாடுகளில் பலமான கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகி விட்டன. அதனால், அந்தந்த நாட்டுப் பிரச்னைகளை முன்வைத்து போராடுவோம் என்று சொல்லி நீக்கி விட்டன. ஸ்தாபனத்தைதான் நீக்கினார்களே தவிர, அந்த உணர்வை நீக்கிவிடவில்லை. மார்க்சிசம்-லெனினிசம் என்பது பிரிட்டிஷ் பொருளாதாரம், பிரெஞ்ச் சோசலிஸ்ட் இயக்கம், ஜனநாயக தத்துவம் என்ற மூன்று கூறுகளில் இருந்து உருவாக்கப்பட்டது. இடதுசாரித் தொழிலாளி வர்க்கம் வெற்றிபெற வேண்டுமானால், கம்யூனிஸ்ட் தலைமையால்தான் முடியும். அதை நாம் சாத்தியப்படுத்துவோம் என்று அழைப்பு விடுக்கிறேன் " என்று கூறி முடித்தார் சங்கரய்யா.

- ஜோ.ஸ்டாலின்

படங்கள் : ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ