Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' மோடியை புகழ்வதால் ரஜினி, புனிதர் ஆகிவிட்டாரா?'  -சீறும் சீமான் 

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக, வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ' பணத்தை மாற்ற முடியாமல் ஏழை மக்கள் வங்கி வாசல்களில் திண்டாடுகின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார் பிரதமர் மோடி' எனக் கொதிக்கிறார் சீமான். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்குள் வந்துவிட்டன. ' வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும்' என அரசு அறிவித்துள்ளது. 'பழைய நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பின் அச்சத்தில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. " நாடு முழுவதும் மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அம்பானியும் அதானியுமா வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம், 

" புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம்பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை நிகழ்ந்துவிட்டது? இங்கு அடிப்படை அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கிறது. தாராளமயக் கொள்கைளை ஊக்குவித்துவிட்டு, தனியார் முதலாளிகளிடம் பணம் குவிந்துவிட்டது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? இதனால் கறுப்புப் பணம் ஒழியும் என்று சொல்வதை ஏற்க முடியாது. அரசின் புதிய அறிவிப்பால், பாதிக்கப்படுவதில் 80 சதவீதம் பேர் அடித்தட்டு மக்கள். சாப்பாட்டுக்குப் பணம் இல்லாமலும் தெருவோரக் கடைகளில் பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி எந்தக் கவலையும் அரசுக்கு இல்லை. ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டால், எந்த அதிகாரியும் லஞ்சம் வாங்கப் போவது கிடையாதா? பதுக்கி வைத்தவர்கள் இனி இரண்டாயிரம் ரூபாயை பதுக்குவார்கள். முன்பு பத்து நோட்டுகளை பதுக்கியவர்கள், இப்போது ஐந்து நோட்டுக்களைப் பதுக்கும் முடிவுக்கு வருவார்கள். 

நேற்று தஞ்சாவூரில் 7.85 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகளும் பிடிபட்டுள்ளன. இன்றுதான் வங்கிக்கே அந்த ரூபாய் தாள்கள் வரவிருந்தன. அதற்குள் அங்குள்ளவர்கள் கைகளுக்கு எப்படிச் சென்றது? பெரும் பணக்காரர்களுக்கு முன்பே புதிய ரூபாய் தாள்கள் சென்று சேர்ந்துவிட்டதா? ' வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து, இந்திய மக்களின் வங்கிக் கணக்கில் போடுகிறேன்' என பிரதமர் சொன்னாரே, அந்த அறிவிப்பு என்னவானது? இதுவரையில், வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றதில் ஏற்பட்ட செலவுகளைப் பற்றி பிரதமர் மோடி அறிவிப்பாரா? '500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது' என்ற மோடியின் அறிவிப்பை, ஆதரித்துப் பேசிவிட்டால் நடிகர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிடுவார்களா? தாங்கள் வாங்கும் சம்பளம் இவ்வளவு என திரையுலக நடிகர்கள் இதுவரையில் சொல்லியிருக்கிறார்களா? வரி ஏய்க்காமல் இவ்வளவு தொகைகளை வாங்குகிறோம் என ஒருவராவது சொல்ல வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். 

வரி ஏய்க்காமல் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார்? எதற்குமே கருத்துச் சொல்லாத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது? 'காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்கவில்லை' எனக் கேள்வி கேட்டாரா ரஜினிகாந்த்? காவிரியால் கர்நாடக தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களே, அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? 'புதிய இந்தியா உருவாகிவிட்டது' என ரஜினி உற்சாகப்படுவது ஏன்? பிரதமரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரே காரணம், உங்களுக்கு முன்கூட்டியே இதுபற்றித் தகவல் வந்துவிட்டது என்பதால்தான். பிரதமரின் அறிவிப்பால் எந்த பெரு முதலாளி பாதிக்கப்பட்டுள்ளார்.

வங்கி வாசலில் எந்தப் பணக்காரர் நிற்கிறார்? இடைத் தரகர்கள் மூலம் பணக்காரர்களின் தேவை நிறைவேறிவிடும். ரூபாய்த் தாளை ஒழித்துவிட்டால், லஞ்சம் ஒழிந்துவிடுமா? சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாகத்தான் இருக்கிறது அரசின் அறிவிப்பு. அதற்குப் பதிலாக, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் புதிய தாள்களாக அறிவிக்க வேண்டியதுதானே? புதிதாக இரண்டாயிரம் ரூபாய் தாள்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அடித்தட்டு மக்களை அவசர கதிக்கு ஆளாக்கிய அவலமான திட்டமாகத்தான் பார்க்கிறோம்" என்றார் கொந்தளிப்போடு. 

- ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close