Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் உண்டியலில் 500, 1000 ரூபாய் காணிக்கைகள்... அரசுக்கு 6 கேள்விகள்!

நெல்லை: கோயில் உண்டியலில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்து சமய அறநிலையத் துறை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என தகவல் அறியும் சட்டத்தில் அரசிடம் 6 கேள்விகள் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இன்று வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறது. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக 500, 2000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய கோயில்களின் உண்டியல் வருமானத்தை எண்ணி அதில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரம்மா, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள்.

1. பிரதமரால் 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் உண்டியலில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த தேதியில் எண்ணப்பட்டு, எந்த கோயில்களில் எவ்வளவு நோட்டுக்கள் உள்ளன என்பதை கோயில் வாரியாக தெரிவிக்க வேண்டும்.

2. கோயிலில் உள்ள உண்டியல் எண்ணப்பட்டு அதில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்ற இந்துசமய அறநிலையத்துறை சார்பாக வங்கிகளிடம் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதா? அப்படி கோரிக்கை வைக்கப்பட்டால் அது தொடர்பான விவரம்.

3. மத்திய அரசு கொடுத்துள்ள கால அவகாசத்துக்குப் பின்னர் கோயிலின் உண்டியல் எண்ணப்பட்டால் அவற்றை மாற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது?

4. கோயிலின் உண்டியல் அரசு கொடுத்துள்ள அவகாசத்துக்கு பின்னர் எண்ணப்பட்டால், கோயிலின் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி உண்டியலில் உள்ள 100, 50, 20, 10, 5, 2, 1 போன்ற ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு அவர்களிடம் உள்ள கருப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதால், கோயிலின் உண்டியலை உடனே எண்ண வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

5. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் உண்டியலை எந்த தேதியில் எண்ணுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது?

6. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் காணிக்கையானது அந்தந்த கோயிகளின் வழக்கப்ப்படி சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி மாதங்களில் எண்ணப்படும் எனில், இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே எண்ண வேண்டும் என இந்து சம்ய அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா?.

இவ்வாறு 6 கேள்விகளை அதில் எழுப்பியுள்ளார்.

இது பற்றி சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மாவிடம் கேட்டதற்கு, ‘‘மத்திய அரசு அதிரடியாக 500, 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து இருக்கிறது. அவரவர் வைத்திருக்கும் பணத்தை வங்கியில் நேரடியாக மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், மார்ச் 31ம் தேதி வரையிலும் ரிசர்வ் வங்கியில் பழைய கரன்சிகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் கோயில்களில் உண்டியல் மூலமாக கிடைத்துள்ள பணத்தையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் இதே போல உண்டியல் பணம் இருக்கும். அவற்றை கறுப்புப் பணம் வைத்து இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். அதனால், இதையெல்லாம் முறைப்படுத்த தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காகவே முதல்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையிடம் கேள்வி கேட்டுள்ளேன். அடுத்ததாக பிற சமய வழிபாட்டுத் தலங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசிடம் கேள்வி எழுப்ப உள்ளேன்’’ என்றார்.

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்    

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ