Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மோடி திட்டமும் மோசடி கூட்டமும்’ - திடீர் பணக்காரர்களை உருவாக்கிய புதுரூபாய் தாள்!

500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என முன்னிரவில் இந்திய மக்கள் துாங்கப்போன நேரத்தில அறிவிப்பு செய்து அன்றைய மொத்த துாக்கத்தையும் தொலைக்கச் செய்துவிட்டார் பாரதப்பிரதமர் மோடி. கறுப்பு பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிக்கிறேன் பேர்வழி என மோடி அறிவித்த இந்த திட்டம் உண்மையில் கறுப்பு பணத்தை வைத்திருந்தவர்களை கிலி கொள்ள வைத்ததோ இல்லையோ, ஏழை எளிய நடுத்தர மக்களை ஒரே நாளில் அகதிகளாக்கிவிட்டது நிஜம்.

ரூபாய்த்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் மக்களின் அத்தியவாசிய பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் சில விதிமுறைகள் மோடி அரசால் தெரிவிக்கப்பட்டன. அப்படி அறிவிக்கப்பட்ட இடங்களில் மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் அடக்கம். ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்கும் நிதி விஷயத்தில் பெரும் நடைமுறை சிக்கல்களை உண்டாக்கும்படியான மத்திய அரசின் மிகப்பெரிய இத்திட்டம் மோடியின் அறிவிப்புக்குதக்கபடி உரிய இடங்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது கேள்விக்குறி. தமிழகமெங்கும் அறிவிப்பு வெளியான அடுத்த நொடியிலிருந்தே பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோத துவங்கியது. பல இடங்களில் தங்களை அணுகிய வாடிக்கையாளர்களிடமிருந்துதான்  ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற தகவலையே பெட்ரோல் பங்க் நிர்வாகம் தெரிந்துகொண்டார்கள்.

இதனால் குழப்பத்தில் அவர்கள் மோடி அறிவிப்புக்கு மாறாக 500, 1000 ரூபாய் தாள்களை வாங்க மறுத்தனர். பிரச்னை முற்றிய நிலையில்தான் அவர்கள் தங்கள் உரிமையாளர்களுக்கு தகவல் சொல்லி அறிவுறுத்தல் பெற்றனர். இதுவும் மோடி அறிவித்தபடி அல்ல; 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு அப்படியே முழுமையாக பெட்ரோல் நிரப்புவோம் என்றே அடம்பிடித்தது பெட்ரோல் பங்க் நிர்வாகம். இதன்மூலம் இத்தனை பெரிய திட்டத்தில்  மத்திய அரசு மேம்போக்கான முறையிலேயே நடந்துகொண்டதை உணரலாம். உரியமுறையில் முன்கூட்டியே பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அதன் ஒருங்கிணைந்த சங்கங்கள் மூலம் அறிவுறுத்தியிருந்தால் அவர்கள் முன்னேற்பாடாக செய்திருப்பார்கள். அல்லது மத்திய அரசு அறிவுறுத்தியும் அதை பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் அதற்கு செவிசாய்க்கவில்லையா?.....

சாதாரண காஸ் விநியோகத்திலேயே ஆதார் அட்டை கொடுக்கவில்லையென்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என நம்பியார் குரலில் மிரட்டும் மத்திய அரசு நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசின் விதிமுறையை கடைபிடிக்காததற்கு அவர்கள் மீது என்ன நடவடிக்கையை பாய்ச்சப்போகிறது.

வாகனத்திற்கு கிடைத்த மரியாதை இதுவென்றால் மருத்துவமனை இன்னும் மோசம். பல இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான பணமாக 500, 1000 தாள்களை வாங்க மறுத்தன நிர்வாகங்கள். வேலுாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டிருந்த அறுவைசிகிச்சைக்கு பழைய நோட்டு சர்ச்சையில் அடுத்த வாரத்திற்கு அது  தள்ளிப்போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. வங்கிகள்,ஏடிஎம்கள் முடக்கப்பட்டு சொன்னபடி அத்தியாவசிய பணிகளுக்கான இடங்களிலும் மோடி வித்தை பலிக்காமல் போனதற்கு யார் மீது நடவடிக்கை எடுப்பது.

எல்லாரும் கிரடிட், டெபிட் கார்டுகளுடன் இந்தியாவில் வாழ்கிறார்கள் என நினைத்து மோடி இப்படி ஒரு அறிவிப்பை செய்திருந்தால் மோடி வெளிநாட்டு பயணங்களை குறைத்துக்கொள்வது நல்லது. இல்லையேல் அவர் இந்திய மக்களின் நடைமுறை வாழ்க்கையை இறுதிவரை தெரிந்துகொள்ளாமலேயே இருக்கநேரிடும்.

ரூபாய்த்தாள்கள் செல்லாது போனதன் பின்னணியில் இத்தனை குளறுபடிகள் என்றால் இந்த அறிவிப்பை பயன்படுத்தி குறுகிய கால பணக்காரர்களானவர்கள் கதை இன்னும் அவலம். ஆம் சென்னை வேலுார் திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் காயலாங்கடைக்காரர்கள் தோன்றி நேற்றும் இன்றும்  கொள்ளை லாபம் பார்த்துவிட்ட கதையை எங்குபொய் சொல்வது. வெளிநாட்டு பணங்களை உள்நாட்டில் அதற்குரிய மதிப்பில் மாற்றும் அந்நிய செலாவணி முறையில் உள்நாட்டு பணத்தையே மாற்றும் அவலம் கடந்த 2 தினங்களில் நேர்ந்தது. வேலுாரில் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்து தங்கியிருக்கும் பல குடும்பங்கள் மோடியின் அறிவிப்பால் தலைசுற்றிப்போனார்கள். அவர்களின் குழப்பதை காசாக்கிக்கொண்டனர் சில மோசடி பேர்வழிகள். ஆம்...500 ரூபாய்க்கு 4 நுாறு கொடுத்து 5 ல் ஒருபங்கை கமிஷனாக பெற்றனர் அவர்கள். வேலுாரின் பல இடங்களில் திடீரென முளைத்த இந்த வள்ளல்களின் கடைகளில் கூட்டம் நிரம்பிவழிந்தது.

புதுச்சேரியிலிருந்து சென்னை வரும் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் சிலர் தனிக்கடையே போட்டிருந்தனர் நேற்று. இப்படி கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக அறிவிக்கப்பட்ட மோடியின் திட்டம் நடுத்தர மக்களின் நல்ல பணத்தை ஸ்வாகா செய்ததுதான் இந்த இருநாட்களில் கண்ட பலன்.

இப்போதும் போரூர் சிக்னல் அருகே போர்டு மாட்டாத குறையாக இப்படி பழைய தாள்களுக்கு கமிஷன் அடிப்படையில் மாற்றித்தருகிறார்கள் சிலர். மோடியின் இந்த அறிவிப்பினால் இந்திய பொருளாதாரம் வளர்ந்ததோ இல்லையோ சில குட்டிப்பணக்காரர்கள் வளர்ந்திருக்கிறார்கள். தேர்ந்த பொருளாதார வல்லுநர்களையும் அறிவுசார் நிபுணர்களையும் தன்னருகே கொண்ட மோடியையும் மோடியின் இந்த திட்டத்தையும் குறை சொல்லவில்லை நாம். ஆனால் பேசுவதற்கு முன் சிந்தி என்பதுபோல் செயல்படுவதற்குமுன்  சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு விளைந்த இந்த தேவையற்ற பதட்டத்தை குறைத்திருக்க வேண்டும்.

கள்ளப்பண முதலைகள் ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கையில் புதிதாக பல மோசடிப்பேர்வழிகள் முளைத்துவிடக்கூடாது மோடிஜி.

- எஸ்.கிருபாகரன்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close