Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போலோவில் 50 நாட்கள்... எப்போது வீடுதிரும்புகிறார் ஜெயலலிதா?

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, இரவு 10.15-க்கு அட்மிட் ஆனார். இன்று  இரவு 10.15 மணியோடு அவர் அப்போலோவில் அட்மிட் ஆகி 50 நாட்கள் நிறைவடைகின்றன.  

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகியது என்று முதல்நாள் அப்போலோ அறிக்கை வாசித்தது. அதன்பிறகு மெல்ல.. மெல்ல...  ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம், 'டிரைக்கியோடமி', 'பாஸிவ் பிசியோதெரபி' என்று பல பிரச்னைகள் இருப்பதை அதே அப்போலோ அறிக்கைகளே ஒப்புக்கொண்டன. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தொடங்கி அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள அரசியல் வி.ஐ.பி-க்கள்வரை, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவுக்கு வந்தனர். 

அ.தி.மு.க-வுக்கு யார் ஆதரவு? யார் எதிர்ப்பு? என்பதை வைத்து, ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் வைத்து அரசியல் ஆடிப்பார்த்தனர். கருணாநிதிக்குத் தெரியாமல், மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை உடல்நலம் விசாரிக்க அப்போலோ வந்தார். மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல், கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் அப்போலோவுக்கு வந்து சசிகலாவைச் சந்தித்து விட்டுப் போனார்.

லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பியேல், எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி நாளோரு வதந்தியும் பொழுதொரு செய்திகளும் வலம்வந்தன. 

ஜெயலலிதாவின் இலாகாக்கள் மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு இரண்டுமுறை ஏற்பட்ட சட்ட சிக்கல்களால், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை இரண்டுமுறை பெற்றவர் பன்னீர் செல்வம். இந்தமுறை ஜெயலலிதாவுக்கு உடலில் ஏற்பட்ட சிக்கலால், முதலமைச்சர் இலாக்காக்களை கவனிக்கும் மூத்த அமைச்சர் ஆனார் ஓ.பன்னீர் செல்வம். இறுதியாக நவம்பர் 3-ம் தேதி, அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி எதிர்பாராதவிதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அவர், “ஜெயலலிதா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை உணர்ந்துள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். ஆனால், அவர் எப்போது வீடு திரும்பவேண்டும் ?என்பதை அவர்தான் முடிவு செய்ய  வேண்டும்” என்றார். அப்போலோ பிரதாப் ரெட்டி இதைச் சொல்லி, இன்றோடு 7 நாட்கள் ஓடிவிட்டன. இதுவரை ஜெயலலிதா தரப்பில் இருந்து, எப்போது வீடு திரும்புகிறார்? என்பது குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், மருத்துவத் துறை மற்றும் போயஸ் கார்டன் வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, வரும் 15-ம் தேதி அல்லது அதன்பிறகு வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், ஜெயலலிதா வீடு திரும்புவார் என்ற தகவல் கிடைத்தது. அதற்கேற்ப போயஸ் கார்டனில் இருந்த லிப்ட் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அப்போலோவில் 50 நாட்களைக் கழித்த ஜெயலலிதா அடுத்த வாரத்தில் வீடு திரும்புவார் என்பதுதான் இப்போதைய அப்போலோ அப்டேட். 

- ஜோ.ஸ்டாலின் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ