Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அப்போலோவில் ஜெயலலிதா... ஆதாயம் எடுக்கும் பி.ஜே.பி.!’ ஸ்டாலினின் விமர்சனம்

கரூர் : "கடந்த 5 ஆண்டுகளாக காணொளி காட்சியில் நடந்து வந்த ஆட்சி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இப்போது காணாத ஆட்சியாக மாறியுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு, தமிழக அரசை பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு மிரட்டி பணிய வைக்கிறது," என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலும் வரும் 19ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்க, தேர்தல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்கள், ஸ்டார் பேச்சாளர்களும், தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதாவும், பி.ஜே.பி. வேட்பாளர்களை ஆதரித்து தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தலைவர்களூம் பிரசாரத்தை துவக்கி நடத்தி வரும் நிலையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை அரவக்குறிச்சியில் துவக்கினார். அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், "அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் (செந்தில்பாலாஜி) பெயரைச் சொல்லி எனது தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று ஜெயித்து அமைச்சரானார். ஆனால், அவர் மீது சென்னை,மதுரை உயர் நீதிமன்றங்களில் பத்துக்கும் மேற்பட்ட பணமோசடி, நிலமோசடி, ஆள்கடத்தல் வழக்குகள், டிரைவர், கான்ட்ராக்டர்களிடம் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றிய வழக்குகள் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசுத் துறைகளில் சரியாக செயல்படாத அதிகாரிகளை,ஊழல் செய்த அலுவலகர்களை வேறு இடங்களுக்கு பனிஷ்மென்டுகளுக்காக டிரான்ஸ்ஃபர் செய்வார்கள். அப்படி,கரூரில் அவர் அடித்த கொட்டத்தை பார்த்துட்டு,அவங்க கட்சித் தலைமையே அவரை பனிஷ்மென்டாக அரவக்குறிச்சி தொகுதிக்கு மாற்றி போட்டிருக்கிறது. அங்க நின்னா ஜெயிக்க முடியாதுன்னு இந்த தொகுதிக்கு வந்தவர்தான் அவர்.

இந்த தேர்தலே அவரால்தான் தள்ளி போடப்பட்டு, இப்போது நடத்தப்படுகிறது. அ.தி.மு.க அமைச்சர்களின் பினாமியாக கருதப்படும் அன்புநாதன் வீட்டில் ரெய்டு செய்து கோடி கோடியாக பணமும், நூற்றுக்கும் மேற்பட்ட பணம் கணக்கிடும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தும், 108 ஆம்புலன்ஸ்களை பணம் கடத்த தவறாக பயன்படுத்தியதை கண்டறிந்தும்தான் தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி தேர்தலை தள்ளிப்போட்டது. ஆனால்,அ.தி.மு.க வேட்பாளர் இந்த தேர்தலிலும் அதே வேலையை செய்கிறார்.

இப்ப தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடக்குது. ஸாரி. உட்கார்ந்து இருக்கு. அதைவிட,படுத்துக் கிடக்குன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். நான் உடல்நிலை முடியாமல் இருக்கும் தமிழக முதல்வரை விமர்சிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக காணொளி காட்சியில் நடந்து வந்த ஆட்சி, இப்போது காணாத ஆட்சியாக நடக்கிறது. அதைத்தான் சொல்கிறேன்.

இதை பயன்படுத்தி,மத்திய அரசு குறுக்குசால் ஓட்டுகிறது. முதலமைச்சர் கடிதம் மூலமும்,நேரடியாக போய் மோடியை சந்தித்தும் எதிர்த்த தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஜி.எஸ்.டி மசோதா, உதய் திட்டத்தை எல்லாம்,இப்போது மத்திய அரசு மாநில அரசை மிரட்டி செயல்படுத்த பார்க்கிறது.

நாங்க ஆட்சியில் இருந்தப்ப,கர்நாடகாவிடம் ராஜதந்திரத்தோடு நட்புறவு கொண்டு,தண்ணீர் பெற்றுத் தந்தோம். ஆனால், இந்த அரசு அப்படி செயல்படுகிறதா?. அங்க தண்ணீர் தர வேண்டிய இடத்தில் இருப்பவனே,ஒற்றுமையாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி,'தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை'ங்கிறான். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கிறான். ஆனால்,இங்க ஆளுங்கட்சி அப்படி அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறதா?. நாங்கள்தான் கூட்டினோம்.

அதனால், இந்த ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். எங்களை எதிர்க்கட்சி என்றுகூட சொல்ல வேண்டியதில்லை. ஒரு சதவிகிதத்தில் அவர்கள் இந்தமுறை ஆட்சி அமைத்தார்கள். ஆனால்,இந்த மூன்று தேர்தல்களின் வெற்றி மூலம்,எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் செஞ்சுரி போடப்போறோம்.
இந்த பகுதியில் காவிரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக மக்கள் தவிக்கிறார்கள். நல்லக்கண்ணு வந்து போராடியே,அவரை கைது செய்த காவல்துறை, மணல் கொள்ளையர்களை கைது பண்ணவில்லை.

நான் இப்போ சொல்கிறேன். எங்க கட்சியின் இந்த தொகுதி வேட்பாளர் வென்று சட்டமன்றத்தில் எழுப்பும் முதல் கேள்வி,  மணல் கொள்ளை பற்றிதான். அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால்,என் தலைமையில் இங்கே மணல் கொள்ளைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடக்கும். அந்த உறுதியை உங்களுக்கு நான் தருகிறேன்" என்றார்.

- துரை.வேம்பையன்,

படங்கள்: தே.தீட்ஷித்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close