Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதன் மாயமான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்: ராமதாஸ்

மதனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் தமிழக காவல்துறை கண்டுகொள்ளாத மனநிலையில் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், எனவே, மதன் மாயமான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்த வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவாகி இன்றுடன் 168 நாட்களாகிவிட்ட நிலையில், அவரை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வழக்கில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் மதன் இருக்கும் திசை கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்குதான். இதுபோன்ற வழக்குகளில் காட்டப்பட வேண்டிய அக்கறை மற்றும் வேகத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இவ்வழக்கில் காட்டப்படவில்லை.  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அறிவிக்கப்படாத மாணவர் சேர்க்கை பொறுப்பாளராக வலம் வந்த மதன்,  கடந்த மே 28ம் தேதி காசிக்கு சென்று மோட்சமடையப் போவதாக எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். அதன்பின்னர் இதுவரை மதன் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் இராதாகிருஷ்ணன், கடந்த ஜூன் 10ம் தேதி நியமிக்கப்பட்டு, தற்போது 155 நாட்கள் ஆகும் நிலையில், இவ்வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும் போதும், ‘மதன் உயிருடன் இருக்கிறார்’, ‘மதன் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டோம்’, ‘மதனை இன்னும் இரு நாட்களில் பிடித்து விடுவோம்’ என சிறப்பு விசாரணை அதிகாரி தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதிலும், இன்று வரை ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.

பச்சமுத்துவின் விடுதலைக்குப் பிறகு இந்த வழக்கு மேலும் சிக்கலாகியிருக்கிறது. 'மதன் மாயமாகவில்லை; பச்சமுத்துதான் அவரைக் கடத்திச்சென்று எங்கோ சிறை வைத்திருக்கிறார்' என மதனின் தாயாரும், மனைவியும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு போட்டியாக, மதன் இருக்கும் இடம் அவரின் தாயார் மற்றும் இரு மனைவிகளுக்கும்தான் தெரியும் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பச்சமுத்துவின் மகன் ரவிபச்சமுத்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இவையெல்லாம்  இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்புவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது. இதுபற்றி விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டிய காவல்துறை,  அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மதனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் தமிழக காவல்துறை கையாலாகாத நிலையில் இல்லை; மாறாக கண்டுகொள்ளாத மனநிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதேநிலை நீடித்தால் மதனை கண்டுபிடிப்பதோ, பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு நீதி கிடைப்பதோ சாத்தியமில்லை. எனவே, மதன் மாயமான வழக்கை நடுவண் புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்ற வேண்டும். மதன் மாயமான வழக்கு இம்மாதம் 21ம் தேதி, சென்னை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, இது குறித்த தகவலை நீதிபதிகளிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ