Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க புள்ளிகள்!  -முடங்கியது ஹவாலா பரிவர்த்தனை

த்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக இரண்டாவது நாளாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ' மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசின் சார்பில் எந்த அறிக்கையும் வரவில்லை' எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 50 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த நிமிடம் வரையில் தமிழக அரசின் சார்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. முதல்வரின் அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணியில் இருக்கிறார். " பிரதமரின் அறிவிப்பிற்கு எதிர்வினை செய்வதைவிடவும், தங்களிடம் உள்ள கரன்ஸிகளுக்கு மாற்று என்ன என்பதுதான் அமைச்சர்கள் மற்றும் மாஜிக்கள் பலரின் கவலையாக இருக்கிறது. பெரும்பாலும் வர்த்தகம் மற்றும் நிலம் போன்றவற்றில் முதலீடுகள் செய்யப்பட்டாலும், நல்ல முதலீடுக்காக பணத்தைப் பாதுகாத்து வைத்திருந்தவர்களுக்குத்தான் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என நம்மிடம் விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" தங்களிடம் உள்ள பணத்தை சில்லறைகள் புழங்கும் அரசுத் துறைகளிடம் ஒப்படைத்துவிட்டு, நல்ல நோட்டுக்களாக மாற்றும் வேலையில் அரசுத் துறையின் முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கீழ்நிலை அதிகாரிகள் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட அளவே பணத்தை மாற்ற முடிவதால், மாற்று வழிகளைத் தேடிச் செல்கின்றனர். வேறு வகைகளில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என ஆடிட்டர்களிடம் ஆலோசித்து வருகின்றனர் சில அமைச்சர்கள். அவர்களிடம், ' டிசம்பர் 31ம் தேதி வரையில் பணத்தை மாற்றுவதற்கு காலக்கெடு விதித்திருக்கிறார்கள். அதற்குள் மாற்று வழிகள் கிடைக்கும்' என ஆறுதல் சொல்லியிருக்கின்றனர் ஆடிட்டர்கள். இடைத் தேர்தலில் மக்களுக்குக் கொடுப்பதில் எந்தவித சிரமமும் ஏற்படவில்லை. ஆனால் கட்சி நிர்வாகிகளின் அன்றாட செலவுகளுக்குப் பணமில்லாமல், அமைச்சர்கள் தவித்து வருகின்றனர். தி.மு.க தரப்பிலும், மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ந்து போய் உள்ளனர். 

தவிர, அரசின் அறிவிப்பிற்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய நிதித்துறை அமைச்சகம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் சில குடோன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் போலவே, வேறு சிலவற்றில் இருந்தும் வெளியாகலாம் என்பதற்காக காத்திருக்கின்றனர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளும், கறுப்பு ஆடுகள் மூலம் தகவல்களை சேகரித்து வருகின்றனர். அதிலும், கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுக்க 40 சதவீதம் வரையில் கமிஷன் பேசப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், தனியார் ஏஜென்சிகளைச் சேர்ந்தவர்கள், நேற்று ஒரே நாளில் நல்ல லாபம் பார்த்துவிட்டதாகவும் நிதித்துறையின் கவனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன. 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், ஹவாலா பரிவர்த்தனைளும் முடங்கிவிட்டன. 

" தமிழகத்தில் அதிகப்படியான கறுப்புப் பணம் புழங்குவதாக வந்த தகவலையடுத்தே, தி.மு.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஒருவரின் வீட்டிலும் அ.தி.மு.க மாஜிக்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு வைரக்கடையில் சோதனை நடத்தியது வருமான வரித்துறை. இவர்களைப் பற்றிய விவரங்களை, அதே கட்சியைச் சேர்ந்த இன்ஃபார்மர்கள் மூலம் சேகரித்தோம். சிலர் எங்களைத் தேடி வந்து தகவல்களைக் கொடுத்தார்கள். இப்போதும் ஏராளமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும்போது, ரெய்டு நடவடிக்கைகள் நடைபெறும். தேர்தல் நேரத்தில் பிடிபட்ட கன்டெய்னர்களும் குடோன் ரகசியங்களும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது பிரதமரின் அறிவிப்பின் மூலம், இன்னும் பெரும் தொகைகள் வெளியில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே நம்புகிறோம்" என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

-ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close