Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசை மிரட்டுகிறதா பி.ஜே.பி? தமிழிசை சவுந்திராஜன் ஆவேசம்

திருச்சி : " தமிழக அரசை பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு மிரட்டுகிறது. அழுத்தம் கொடுக்கிறது என ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்வதை விமர்சிக்கிறார். அவருக்கு ஏன் இந்த பயம் எனத் தெரியவில்லை," என்று திருச்சியில் பி.ஜே.பி. மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொண்டு, தமிழக அரசை பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு மிரட்டி பணிய வைக்கிறது என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் பேசினோம்.

"அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், 'மத்திய அரசு தமிழக அரசை மிரட்டுகிறது, அழுத்தம் கொடுக்கிறது' என சொல்லியிருக்கிறார். மக்களுக்கு உதவும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதை  மாநில அரசு ஏற்றுக்கொள்வதை இப்படி விமர்சிப்பதா? உதய் மின் திட்டத்தால் தமிழக மின் வாரியத்தின் கடன் அடைக்கப்படும். 24 மணி நேர மின்சாரம் கிடைக்கும். உணவு பாதுகாப்புச் சட்டத்தினால் 3 லட்சம் போலி ரேசன் கார்டுகள் தள்ளுபடியாகும், உணவு பொருள் கிடைக்க வழிவகை ஏற்படும். இப்படியான உதய் திட்டத்தை பார்த்து உதயசூரியனுக்கு பயம் ஏன்?.

மீத்தேன் திட்டம் தடைசெய்யப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக,  தங்களால் ரத்து செய்யப்பட்டதாக கூறுவது எந்த விதத்தில் சரி? 'சிறுவாணி திட்டத்தை தற்காலிகமாக தடுத்தீங்க. நிரந்தரமாக தடுக்கவில்லை' என்கிறார். மத்திய அரசு, மக்கள் நலனுக்காக கொண்டுவரும் எல்லா திட்டங்களையும் விமர்சிக்கிறார்கள்.

ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, நீர் ஆதார பிரச்னைகளை தீர்க்கவில்லை. மணல் கொள்ளை பற்றி ஸ்டாலின் பேசுகிறார். இதைவிட காமெடி ஒன்றும் இல்லை. மக்கள் இதை நம்பப் போவதில்லை. இப்போது மணல் கொள்ளையை தடுப்பதாக சொல்லும் ஸ்டாலின்,  துணை முதல்வராக இருந்தபோது என்ன நடவடிக்கைகள் எடுத்தார்?.

ரூபாய் நோட்டு மாற்றத்துக்கு தமிழகத்தில் பல தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து இருப்பது ஆரோக்கியமானது. பிரதமர் நரேந்திர மோடி, கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது போல, வறுமையையும் ஒழிப்பார். கறுப்பு பணத்தை ஒழிக்க எடுத்துள்ள நடவடிக்கை மூலம், நேர்மையான வாழ்க்கை அமையும். அதேபோல் தேர்தல்,  நேர்மையாக நடந்து நல்ல வேட்பாளர்களும் ஜெயிக்க முடியும்..

மத்திய அரசு,  ஜல்லிக்கட்டு பிரச்னையில் நல்ல முடிவு எடுக்கும். காளைகளை காட்சிப்பட்டியலில் அறிவித்தார்கள். அதை நீக்கப் போராடுகிறோம். அது நடந்திருந்தால் ஜல்லிக்கட்டு,  சென்ற வருடம் நடந்திருக்கும். இந்த விசயத்தில் மத்திய அரசு எதை மேற்கொள்ள முடியுமோ அதை செய்து வருகிறது. நீதிபதிகள்,  'வீடியோ கேமில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே' என கருத்து தெரிவித்துள்ளார்கள். 'அது வீர விளையாட்டு; வீடியோ விளையாட்டு அல்ல' என புரியவைத்து,  ஜல்லிக்கட்டு நடக்க வழி செய்வோம்," என்றார்.

கன்டெய்னர்களில் கொண்டு சென்ற பணம் குறித்த சந்தேகம் இன்னும் தீரவில்லையே என்ற கேள்விக்கு, "அந்த கன்டெய்னர்களில் இருந்தது 500 ரூபாய் நோட்டு கட்டா, 1000 ரூபாய் நோட்டு கட்டா" என நம்மிடம் பதில் கேள்வி கேட்டு விட்டு புறப்பட்டார் தமிழசை.

சி.ய.ஆனந்தகுமார்

படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close