Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தே.மு.தி.க.வுக்குத்தான் எங்கள் ஓட்டு... 3 தொகுதி தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் முடிவு?

கரூர் : வரும் நவம்பர் 19ம் தேதி நடக்கும் 3 தொகுதிக்கான தேர்தலில், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை செலுத்த இடதுசாரி இயக்கத்தினர்  முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பெரும் பின்னடவை சந்தித்தது மக்கள் நலக்கூட்டணி. தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து வெளியேற... மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்குள்ளும் ஏகப்பட்ட முரண்பாடுகள் வெடித்தன.

சமீபத்தில்,  'விஜயகாந்தை முதல்வராக முன்மொழிந்திருக்கக் கூடாது' என வைகோ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு 'நாங்களா மக்கள்நலக்கூடணியில் எங்களை சேர்த்துக் கொள்ள சொல்லி கெஞ்சினோம். நீங்கள் தானே எங்களைத் தேடி வந்தீர்கள்' என்று சீற்றம் காட்டினார் பிரேமலதா விஜயகாந்த். மேலும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வைகோவின் முடிவில் இருந்து விலகி நின்றனர்.

இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என முடிவெடுத்திருந்தாலும், 3 தொகுதிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்திருப்பதாக சொல்கிறார்கள் அந்த கட்சி வட்டாரத்தில்.பெயர், விவரம் வேண்டாம் என்ற நிபந்தனையோடு அரவக்குறிச்சியைச் சேர்ந்த இடது சாரி நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார்.

"இந்த தேர்தல்ல மக்கள் நலக்கூட்டணி சார்பா வேட்பாளரை நிறுத்துவாங்கன்னு பார்த்தோம். கடந்த முறை எங்க கூட்டணி சார்பாக இந்த தொகுதியில் நின்ற ம.தி.மு.க அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன்,இந்தமுறையும் தனக்கு சீட் கிடைக்கும்னு தயாரா இருந்தார். நாங்களும் தேர்தல் வேலை பார்க்க தயாராக இருந்தோம். ஆனால்,எங்க கூட்டணி தலைவர்கள் ஒன்றுசேர்ந்து,'இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை'ன்னு சொல்லிட்டாங்க.

இந்த நேரத்துல என்ன பண்றதுனு யோசிச்சோம். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக நிக்குற வேட்பாளர் ஓரளவு ஓட்டு வாங்குனாதான் ரெண்டு பேருக்கும் எதிர்ப்பு இருக்குறது தெரியும். அதனால இந்த தேர்தல்ல தே.மு.தி.க.வை ஆதரிக்க முடிவு செஞ்சிருக்கோம். முதல்ல நோட்டாவுக்கு ஓட்டு போடலாம்னுதான் நினைச்சோம். எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், எங்களை நம்பி கூட்டணிக்கு வந்தவர் விஜயகாந்த். அவரை ஆதரிக்கிறதுதான் சரினு பட்டுது. அதனால இந்த முடிவு எடுத்திருக்கோம். ஒருவேளை கட்சியில இதுக்கு எதிர்ப்பு வந்தா நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவோம்.

அ.தி.மு.க தரப்பில் எங்களை அணுகி,'உங்க கட்சி தலைமைகள்தான் யாருக்கும் ஆதரவு இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அதனால்,நீங்க உங்க கட்சிகாரங்களை எங்களுக்கு ஓட்டுப் போட சொல்லுங்க. வேண்டியதை செஞ்சு தர்றோம்'ன்னு கேட்டாங்க. அதுக்கு நாங்க,'எங்க கொள்கை வேற. உங்க ரூட்டு வேற. எங்களை ஓட்டுப் போடச் சொல்லி கம்பல் பண்ணாதீங்க'ன்னு சொல்லிட்டோம்" என்றார்.

அப்போ ம.தி.மு.க. என்ன பண்ணுவாங்க என அவரிடம் கேட்டோம். "அது எனக்கு சரியா தெரியலை. ஆனா இப்போ இருக்குற நிலைமைக்கு தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியைத்தான் தேர்வு செய்வாங்கனு நினைக்கிறேன். அவர் மேல கொஞ்சம் சாஃப்ட் கார்னர் இருக்கு," என்றார்.

இதுதான் அரசியல் கணக்கோ...?

- துரை.வேம்பையன்
                        

எடிட்டர் சாய்ஸ்

MUST READ