Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இயல்புநிலைக்கு இன்னும் சில தினங்கள் ஆகும்!' வங்கி ஊழியர் சங்கம்

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின்  திடீர் அறிவிப்பு, ஏ.டி.எம் கார்டு வைத்துக் கொண்டு வீட்டின் அன்றாட செலவுகளை கையாளும்  மக்களுக்கு பிரச்சனைகள் குறைவுதான் . ஆனால் நடுத்தர, ஏழை பாமர மக்களின்  பசியை இந்த அறிவிப்பு பதம் பார்த்துவிட்டது என்றே  சொல்ல வேண்டும். அடுத்த வேலை உணவுக்கும்  , அன்றாடம் செலவுக்கும்  வழி தேடுவதிலேயே  சாமன்யர்களின் நாட்கள் தற்போது கடந்து கொண்டிருக்கிறது. ஆசைகளைத் தவிர்த்து விட்டு வாழமுடியும் பசியை  எப்படித் தவிர்த்து விட்டு  வாழ முடியும்  என்கிறார்கள்  சாமான்யர்கள் . இன்னும் எத்தனை  நாட்களுக்கு  இந்தப் பிரச்னை நீடிக்கும். இதைத் தீர்க்க  என்ன நடவடிக்கை  என்பது குறித்து  பொதுமக்கள்  மற்றும் வங்கிகள்  சங்கப்  பிரதிநிதிகளிடம் பேசினோம்.. 

குழந்தையின்  உண்டியலை உடைத்தேன் 

"என் குழந்தை சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த  உண்டியலை உடைத்துத்தான்   அடிப்படைத் தேவைகளுக்குப்  பயன்படுத்தி வருகிறேன்"  என்கிறார்  இல்லத்தரசியான   தன்யா . "இந்த  அறிவிப்பால் செலவுகளைக்  கையாள்வதில்  மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மாதத்  தொடக்கத்தில்  அறிவித்ததுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும்  காரணம். எல்லாப் பொருட்களையும் சம்பளம் வரும்போதுதான்  வாங்குவேன் . சம்பளம்  வந்துள்ளது .தற்போது ஏ.டி.எம்-மை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். ஏ.டி.எம் கார்டை வைத்து  தேவையான  முக்கிய பொருட்களை  மட்டும் வாங்கி விட்டேன் . ஆனால்  போக்குவரத்து,  காய்கறி,  பால் , தண்ணீர் கேன் போன்ற அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்க  முடியவில்லை . அதோடு வெளியில்  செல்வதையே  தவிர்த்து விட்டேன்" என்றார். 

நாளைக்கு எப்படி தேத்தறது தெறியல !

வீட்டு வேலை செய்து  குடும்ப பாரத்தைச் சுமக்கும்  பிரியாவிடம் பேசினோம். "பொருளாதார கஷ்டம் என்பது எனக்குப் பழக்கம் தான் அவ்வப்போது கிடைக்கும் 500 , 1000-ஐ கையில்  வைத்துக்  கொண்டு சிக்கனமாக செலவு செய்து வந்தேன். இப்போது என் கையில் இருக்கும் 500 ரூபாய்  செல்லாது என்று சொல்லி இருப்பது  கஷ்டத்தை கொடுத்துள்ளது. இப்போது என் கணவருக்கும்  குழந்தைக்கும் உடம்பு சரியில்லை . 9-ம் தேதி ரொம்ப கடினமாக  கஷ்மாக இருந்தது. 10-ம் தேதி மாலை வேலை  செய்யற இடத்துல  காசு வாங்கினேன். இதை  வச்சிதான் சமாளிக்கனும். கையில்  இருக்கற  500 ரூபாயை  மாற்றி  வரலாம் என்றால்  கூட்டம் அதிகமாக  இருக்கிறது. வேலைக்குப் போயே  ஆகனும். என்ன செய்வது என்று  தெரியவில்லை" என்றார்.

அன்றாட  செலவுகளை  சமாளிக்கும்  முடியவில்லை என்கிறார்கள்   குடும்ப தலைவிகள்..    ஆட்டோ ஓட்டுநர் களோ வருமானமே இல்லை என்று  கூறுகிறார்கள். "வருமானமே  இல்லை. காலையில 10 மணிக்கெல்லாம்  400 ரூபாயாவது சம்பாதிச்சுடுவேன் வருமானமே இல்லாம போச்சு.  சாலையில் மக்கள்  நடமாடுவதே குறைஞ்சி போச்சி"  என்று  கூறுகிறார்  ஆட்டோ ஓட்டுநர் முருகானந்தம்.

பூ ,காய்கறி   விற்பவர்களும் மிகுந்த  சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் .வாங்கி வைத்த  பூவின்  விற்பனையும் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோன்று கோயம்பேடு சென்று   பூ, காய்கறிகளை  வாங்கவும் சிரமம் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். மோடியின்  அறிவிப்பு அனைத்துத் தரப்பு மக்களுக்கும்  சிரமத்தைக் கொடுத்துள்ள  நிலையில் வங்கிகள்  எடுத்து வரும் நடவடிக்கைளும் செயல்பாடுகளும் குறித்து வங்கி ஊழியர் நல சங்க தலைவர்  வெங்கடாசலத்திடம் பேசினோம். "பொதுமக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளதால்  வங்கிகளும் கடும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தேவையான  அளவுக்கு வங்கிகளுக்கு  ரிசர்வ்  வங்கி  பணத்தை அனுப்பவில்லை. ஓரளவு 2000  ரூபாய்  நோட்டுக்கள் வந்துள்ளன. 500 ரூபாய் புதிய  தாள்கள்  வரவில்லை.100 ரூபாய்  தாள்களும் தேவைக்குக் குறைவாக  உள்ளது. இதன்காரணமாக  இன்னும்  சில  நாட்களுக்கு இந்த நெருக்கடி  இருக்கும் .

ஏடி. எம்-கள் இயல்பு நிலை  திரும்ப 15 நாட்கள்  ஆகும் !   

இந்தியா முழுவதும் இரண்டு லட்சத்து  26 ஆயிரம் ஏ.டி.எம்- கள்  உள்ளன.  தமிழகத்தில்  சுமார்  6 ஆயிரம் ஏ.டி.எம்-கள் உள்ளன. ஊரகப்  பகுதிகளில் மட்டும்  சுமார்  80 ஆயிரம் ஏ.டி. எம்-கள்  உள்ளன. இந்த  ஏ.டி.எம்-களின் இயல்பு நிலை திரும்ப இன்னும் 15 நாட்களாவது ஆகும்.  ஏ.டி.எம்- களை  ரீ டியூன்   செய்ய  வேண்டிய  பணி  உள்ளது அந்தப் பணி  முடிந்தால் மட்டுமே  இயல்பு நிலைக்குக்  கொண்டு வர முடியும்.  பொதுமக்களுக்கு இயல்பான  சேவையை  வழங்க  இன்னும் சில  நாட்கள்  ஆகும்.

 நெருக்கடியை  சமாளிக்க   தீவிர நடவடிக்கை 

ஒய்வு பெற்ற ஊழியர்களைப்  பணியமர்த்திப்  பணியைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.  இன்று  அவர்கள்  இந்தப் பணியில் இணைய உள்ளனர். மேலும் வேலை நேரத்தை அதிகரித்துள்ளோம். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு  மட்டுமல்ல   வங்கி உழியர்களுக்கும்  மனஉளைச்சலைக்   கொடுத்துள்ளது"  என்றார் .

பாதிப்பின் நிலை என்ன ? 

கூலி  தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள்,  முதியோர்கள்  என  பலரும் வங்கி  ஏடி.எம் கார்டை பயன்படுத்துவதில்லை. இவர்கள்  பணம் வைத்திருப்பது  சுருக்கு பையிலும் , பிளாஸ்டிக்  கவரிலும்  தான் . சில்லரையாக வைத்திருந்தால்  கனமாக  இருக்கும்  என்று  500 ரூபாயாக  1000  ரூபாயாக  வைத்துள்ளார்கள்.  செல்லாது  என்பதால்  தற்போது  வைத்துள்ள பணத்தை மாற்றி விட்டுச்  சாப்பிட வேண்டியநிலை. அவர்களுக்கு. நடுத்தர மக்களும்  சேமித்து வைத்திருக்கும் பணத்தை கையில்  வைத்துக்  கொண்டு  செலவு செய்யவில்லை. அன்றாட  செலவுகளுக்காக  100 ரூபாய்  எடுக்கும் மக்களும் உள்ளனர். இந்த அறிவிப்பால் வங்கிகள் , ஏடி எம் -களும் இயக்கம்  முழுமையாக இல்லாத காரணத்தால் பணத்தை   எடுக்க முடியாமல்   சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். தங்களது செலவுகளைக்  குறுக்கி கொண்டுள்ளார்கள் என்பதே தற்போதைய  உண்மை 

திருமணம், போன்ற  வீட்டு நிகழ்சிகளை  வைத்துவிட்டு அதற்குச் செலவு செய்பவர்களும் தற்போது  செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பொதுமக்கள்  செலவுகளைச் சுருக்கிக் கொண்டதால்  வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இயல்புநிலை திரும்ப இன்னும் சில தினங்கள் ஆகும் என்று வங்கிகளே  தெரிவிக்கின்றன. சாமான்யர்கள் இயல்புநிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்.  

-கே. புவனேஸ்வரி 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ